Published:Updated:

``70 கைதிகள் உண்ணாவிரதமா?'' - புழல் சிறை எஸ்.பி-யைச் சுற்றும் புதிய சர்ச்சை!

மலையரசு

புழல் சிறையில் உள்ள 20 வெளிநாட்டுக் கைதிகள் உட்பட 70 கைதிகள் உண்ணாவிரதம் இருப்பதாகத் தகவல் வெளியாகியது.

புழல் சிறை
புழல் சிறை

சென்னைப் புழல் சிறைக்குக் கடந்த வருடம் மாற்றலாகி வந்தார் எஸ்.பி செந்தில்குமார். புழல் சிறையில் புதிய கண்காணிப்பாளராகப் பதவியேற்றதிலிருந்தே, கைதிகளுக்குக் கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமைகளைக்கூட மறுக்கிறார். தவறே செய்யாத சிறைக்கைதிகள் மீதும் நடவடிக்கை எடுக்கிறார் என எஸ்.பி செந்தில்குமார் மீது புகார்கள் கூறப்பட்டன. இதேபோல் இலங்கையைச் சேர்ந்த கைதி அசோக்குமார் என்பவரை மனநலம் பாதிக்கப்பட்ட கைதிகளோடு அடைத்து கொடுமைப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.

புழல் சிறை
புழல் சிறை

இதுதொடர்பான வழக்கில் எஸ்.பி செந்தில்குமாரை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கடுமையாகக் கண்டித்ததாகக் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து சமீபத்தில் போதைப்பொருள் வழக்கில் சிறையில் நைஜீரிய கைதி சுவமேகா டமஸ்கொஸ் (chukwuemeka tamaskos) என்பவரை எஸ்.பி செந்தில்குமார் பழைய பகையை மனதில் வைத்துக்கொண்டு, ``மோசமான விளைவுகளை சந்திப்பாய், பைத்தியம் பிடித்து உன்னை நீயே சாகடிக்கும் வரை தொந்தரவு செய்வேன்'' எனக் கூறி தொந்தரவு செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக கைதி டமஸ்கொஸ் எழுதிய கடிதமும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

ஆனால், அந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்திருந்தார். இதற்கிடையே, இன்று புழல் சிறையில் உள்ள 20 வெளிநாட்டு கைதிகள் உட்பட 70 கைதிகள் உண்ணாவிரதம் இருப்பதாகத் தகவல் வெளியாகியது. காலையிலிருந்து எதுவும் சாப்பிடாமல் இருக்கும் கைதிகள், ``வெளிநாட்டு கைதிகளின் உறவினர்கள், நண்பர்கள் என யார் வந்தாலும் அவர்களை கைதிகளை பார்க்க அனுமதிப்பதில்லை. மனு கொடுத்து தங்கள் உறவினர்களுக்கு ஆறுதல் சொல்ல வந்தாலும் அவர்களை எஸ்.பி செந்தில்குமார் பார்க்கவிடுவதில்லை. அதனால் எஸ்.பி செந்தில்குமாரை உடனே மாற்ற வேண்டும். அவரை மாற்றும் வரை உண்ணாவிரதம்'' இருக்கப்போவதாகக் கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர் எனக் கூறப்பட்டது. இதுதொடர்பாகப் புழல்சிறை கண்காணிப்பாளர் எஸ்.பி செந்தில்குமாரை தொடர்புகொண்டு பேசினோம், ``அப்படி யாரும் இங்கு உண்ணாவிரதம் இருக்கவில்லை.

கைதிகள்
கைதிகள்

அனைவரும் சாப்பிட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்" எனக் குற்றச்சாட்டை மறுத்தவரிடம் ``தொடர்ந்து உங்கள் மீதே எதற்கு இப்படிக் குற்றச்சாட்டு எழுகிறது'' என்ற கேள்வியை முன்வைத்தோம். ``கடந்த வாரம் கைதியிடமிருந்து செல்போன் பறிமுதல் செய்தோம். இதற்கு முன்பும் நிறைய செல்போன்கள் பறிமுதல் செய்துள்ளோம். விதிமுறைகள்படி நடவடிக்கை எடுத்து வருகிறோம். தொடர்ந்து இதுபோல் நடவடிக்கை எடுக்கும்போது இங்குள்ளவர்களுக்கு அது பிடிக்காமல் போகிறது. அதற்கு என்ன பண்ண முடியும். சிறை விதிகளின்படி இங்கு அனைத்தும் நடக்கிறது" என விளக்கமளித்தார்.