Published:Updated:

நீலகிரி: 3 வயது பெண் குழந்தைக்குப் பாலியல் தொல்லை! - போக்சோ வழக்கில் 70 வயது முதியவர் கைது

3 வயதுகூட முழுமையாக நிறைவடையாத பெண் குழந்தைக்கு 70 வயது முதியவர் பாலியல் தொல்லை கொடுத்த கொடூரம் நீலகிரியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 70 வயதான புஷ்பராஜ் என்ற முதியவர், தனது வீட்டின் அருகிலுள்ள குழந்தைகளை அவரின் வீட்டுக்கு அழைத்துச் சென்று விளையாடுவது போன்ற நடவடிக்கைகளில் அடிக்கடி ஈடுபட்டுவந்திருக்கிறார். இந்த நிலையில், அவரின் பக்கத்து வீட்டிலிருக்கும் 3 வயது பெண் குழந்தையை வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். குழந்தையை அழைத்துவர அந்தப் பெண் குழந்தையின் தாய் முதியவரின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்.

பாலியல் தொல்லை கொடுத்த புஷ்பராஜ்
பாலியல் தொல்லை கொடுத்த புஷ்பராஜ்

அப்போது அந்தக் குழந்தையிடம் விளையாடுவதாகக் கூறி தகாத முறையில் நடந்துகொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாய், முதியவரைக் கடுமையாகக் கண்டித்திருக்கிறார். உடனடியாகக் குழந்தையை மீட்டு வந்து, தங்களின் மகளுக்கு நடந்த கொடுமை குறித்து தனது கணவனிடம் அழுகையுடன் தெரிவித்தார். ஆத்திரமடைந்த பெண் குழந்தையின் தந்தை, அருகிலிருக்கும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீஸார், குன்னூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு வழக்கை மாற்றினர்.

`எந்தக் கடவுள் இந்த சாமியாரின் காணிக்கையை ஏற்றுக்கொள்வார்?' - சிறார் வதை வழக்கில் கேரள நீதிமன்றம்

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், பெண் குழந்தைக்கு அந்த முதியவர் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. உடனே அவரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். 3 வயதுகூட முழுமையாக நிறைவடையாத பெண் குழந்தைக்கு 70 வயது முதியவர் பாலியல் தொல்லை கொடுத்த கொடூரம் நீலகிரியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை

இந்தக் கொடூரம் குறித்து நம்மிடம் பேசிய பெண் காவலர் ஒருவர், ``புஷ்பராஜ் மற்ற குழந்தைகளுக்கும் இதே மாதிரி தொல்லை கொடுத்திருக்கிறாரான்னு விசாரிச்சுக்கிட்டு இருக்கோம். வெளியில் சொன்னா தற்கொலை செஞ்சுக்குவேன்னு பக்கத்துல இருக்கிற பெற்றோரை மிரட்டியிருக்கார். அதுக்கு பயந்துக்கிட்டே நிறைய பேர் புகார் கொடுக்காம இருந்திருக்கலாம். அதையும்‌ விசாரிச்சுக்கிட்டு இருக்கோம். என்ன சொல்றதுன்னு எங்களுக்கே தெரியலை சார். அவ்ளோ கஷ்டமா இருக்கு" என்றார் வேதனையுடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு