Published:Updated:

`தனியாக வசித்த மூதாட்டி; வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்!’ - 4 பவுன் நகைக்காக நடந்த கொடூரம்

கொலை செய்யப்பட்ட மூதாட்டி சரோஜா
கொலை செய்யப்பட்ட மூதாட்டி சரோஜா

காட்பாடி அருகே தனியாக வசித்துவந்த மூதாட்டியைக் கொலைசெய்து 4 பவுன் நகையைப் பறித்துச்சென்ற மர்ம நபரைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகிறார்கள்.

வேலூர் மாவட்டம், காட்பாடியை அடுத்த சென்னாரெட்டியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணையா. முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரான இவர் சமீபத்தில் இறந்துவிட்டார். அவரின் மனைவி சரோஜா (70), உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் தனியாக வசித்துவந்தார்.

சரோஜாவின் வீடு
சரோஜாவின் வீடு

இதையறிந்த மர்ம நபர் சரோஜாவின் வீட்டுக்குள் புகுந்து மூதாட்டி என்ற இரக்கமில்லாமல் ஆயுதங்களால் கொடூரமான முறையில் தாக்கியிருக்கிறான். தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், சம்பவ இடத்திலேயே சரோஜா உயிரிழந்தார்.

சரோஜாவின் அக்கா பேரனும் அவரின் மனைவியும் வீட்டுக்கு வந்தனர். அப்போது, ரத்த வெள்ளத்தில் பாட்டி சரோஜா இறந்துகிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுபற்றி, உடனடியாக லத்தேரி காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.

``வீட்டில் தனியாக இருந்த சென்னைப் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை"- புத்தாண்டில் போலீஸுக்கு வந்த போன் கால்

வேலூர் சரக டி.ஐ.ஜி காமினி, எஸ்.பி பிரவேஷ்குமார் மற்றும் போலீஸார் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மூதாட்டியின் கழுத்திலிருந்த 4 பவுன் நகை கொள்ளை போயிருப்பதாக அக்கா பேரன் கூறியுள்ளார்.

அதையடுத்து, நகைக்காக இந்தக் கொடூர சம்பவம் நடந்ததா அல்லது வேறு ஏதேனும் ஆதாயத்துக்காகக் கொலை செய்துவிட்டு வழக்கைத் திசை திருப்புகிறார்களா என்கிற கோணத்தில் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்திவருகிறார்கள்.

மூதாட்டி சடலமாக கிடந்த இடம்
மூதாட்டி சடலமாக கிடந்த இடம்

போலீஸார், மோப்ப நாயை வரவழைத்து கொலையாளியின் தடயங்களைச் சேகரித்தனர். வேலூர் மாவட்டத்தில், கடந்த 6 நாள்களில், மூதாட்டி சரோஜாவுடன் சேர்த்து மூன்று கொலைகள் நடந்துள்ளன. இதனால், பொதுமக்கள் கடும் பீதியில் உள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு