Published:Updated:

''அழகிரி மத்திய அமைச்சராக இருக்கிறார்!''

மேலூர் கோர்ட்டில் சரண்டர் காட்சி!

''அழகிரி மத்திய அமைச்சராக இருக்கிறார்!''

மேலூர் கோர்ட்டில் சரண்டர் காட்சி!

Published:Updated:
##~##

த்தனையோவில்லங்​கங்களை சர்வசாதார​ணமாக எதிர்கொண்ட மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, மேலூர் கோர்ட்டில் வெலவெலத்துப் போய் நிற்கும் அளவுக்கு இப்போது நிலைமை மாறி இருக்கிறது. தேர்தலின்போது தாசில்தார் தாக்கப்பட்ட வழக்குக்காக நீதிமன்றத்தில் சரண் அடைந்து, ஜாமீனில் வெளியே வந்து இருக்கிறார்! 

கடந்த சட்டசபைத் தேர்தல் சமயத்தில் மேலூர் அருகே வாக்கு சேகரிக்கச் சென்றார் அழகிரி. 'அப்போது, அங்கு நடந்தவற்றை நான் வீடியோ எடுத்தேன். அதற்காக தி.மு.க-வினர் என்னைத் தாக்கினார்கள்!’ என்று போலீஸில் புகார் கொடுத்தார், மேலூர் தாசில்தாராக இருந்த காளிமுத்து. இது தொடர்பாக அழகிரி, மதுரை துணை மேயர் மன்னன், தி.மு.க. ஒன்றியச் செயலாளர் ரகுபதி மற்றும் திருஞானம் ஆகியோர் மீது எஃப்.ஐ.ஆர். போட்டது கீழவளவு போலீஸ்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''அழகிரி மத்திய அமைச்சராக இருக்கிறார்!''

உடனே, அழகிரி உள்ளிட்டவர்கள் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் பெற்றார்கள். இதற்கு

''அழகிரி மத்திய அமைச்சராக இருக்கிறார்!''

மறுநாளே, ''தன்னை யாரும் தாக்கவில்லை. கலெக்டர் சகாயமும் மேலூர் இன்ஸ்பெக்டர் மாடசாமியும் கட்டாயப்படுத்தியதால்தான் அப்படிப் புகார் கொடுத்தேன்!'' என்று பல்டி அடித்தார் காளிமுத்து. 'புகார் கொடுத்தவரே மறுப்பதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று தி.மு.க-வினர் நீதிமன்றத்தில் மனு போட்டனர்.

ஆனால், மேலூர் இன்ஸ்பெக்டர் மாடசாமியோ, ''சம்பவம் நடந்தது உண்மை. அதற்கான ஆதாரங்கள் இருப்பதால், உண்மையை கோர்ட்டில் சொல்வேன்!'' என்றார். இதனிடையே, முன்ஜாமீன் பெற்ற அழகிரி உள்ளிட்டவர்கள் 15 நாட்களுக்குள் மேலூர் கோர்ட்டில் சரண் அடைந்து, பிணையில் ஜாமீன் பெற்றுக்கொள்ள உத்தரவானது.

இது ஒருபுறம் இருக்க, 'மிரட்டலுக்கு பயந்துதான் காளிமுத்து மாற்றிப் பேசுகிறார்’ என்று கலெக்டர் சகாயம், தேர்தல் ஆணையத்துக்கு ரிப்போர்ட் அனுப்ப... அவரை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டது ஆணையம். இதையடுத்து, சகாயம் கொடுத்த புகாரின் பேரில், முகம் தெரியாத நபர்கள் காளிமுத்துவை மிரட்டியதாக இன்னொரு வழக்கும் போட்டது போலீஸ். இந்நிலையில், 'ஒருதலைப்​பட்சமாக விசாரணை நடக்கிறது. எனவே, வழக்கை வேறு ஏஜென்ஸி விசாரிக்க உத்தரவிட வேண்டும்’ என காளிமுத்து இன்னொரு மனுவைத் தாக்கல் செய்தார். இப்படி, தொடர்ந்து அரசு தரப்புக்கு எதிராகவே செயல்பட்டதால், காளிமுத்துவை சஸ்பெண்ட் செய்தார் கலெக்டர் சகாயம்.

இதைத் தொடர்ந்து, ரகுபதியும் திருஞானமும் மேலூர் கோர்ட்டில் சரண் அடைந்து ஜாமீனில் வெளிவந்தார்கள். அழகிரியும் மன்னனும் மட்டும் சரண் அடைவதற்கான அவகாசத்தை இரண்டு முறை நீடித்தனர். மூன்றாவது முறையாகவும் அப்படியரு மனுத் தாக்கலாகவே, முன்ஜாமீனையே ரத்து செய்யக் கோரி போலீஸ் தரப்பில் உயர் நீதிமன்ற கிளையில் மனு போடப்பட்டது. ஆட்சி மாறி இருக்கும் நிலையில் புதுச் சிக்கல் தலைதூக்கிவிடக்கூடாது என்று நினைத்த அழகிரியும் மன்னனும் கடந்த 7-ம் தேதி மேலூர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

சரியாக 10.30 மணிக்கு நீதிமன்றத்துக்கு வந்த அழகிரி, அங்கே இருந்த இருக்கையில் அமரவைக்கப்பட்டார். ''மத்திய அமைச்சராக இருப்பதால், முதல் வழக்காக அழகிரியின் ஜாமீன் மனுவை எடுத்துக்கொள்ள வேண்டும்...'' என்று அவரது வக்கீல்கள் அவசரம் காட்டியதை நீதிபதி கண்டுகொள்ளவே இல்லை. சுமார் 15 நிமிடங்களுக்குப் பிறகு அழகிரி தரப்பின் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோதும் வக்கீல்கள் சிலர், 'அழகிரி மத்திய அமைச்சராக இருக்கிறார்’ என்று சொல்லியபடி இருக்க, ''நீங்க யாரும் எனக்கு டிக்டேட் பண்ண வேண்டியதில்லை!'' என்று கடிந்தார் மாஜிஸ்திரேட். அழகிரிக்காக தனிநபர் ஜாமீன் கொடுக்க இரண்டு பேர் வந்திருந்தனர். ஒருவர் பெயர் முருகானந்தம். இன்னொருவர் பெருமாள்.

''அழகிரி மத்திய அமைச்சராக இருக்கிறார்!''

இவர்களிடம் ''நீங்கள் யாருக்காக ஜாமீன் கொடுக்கிறீர்கள்? அவரை எப்படி உங்களுக்குத் தெரியும்?'' என்று மாஜிஸ்திரேட் கேட்டார். ''மத்திய அமைச்சருக்காக ஜாமீன் கொடுக்கிறோம்'' என்று அவர்கள் சொல்ல, ''மத்திய அமைச்சரா இருந்தா குடுத்துருவீங்களா? அப்படின்னா, எல்லா மத்திய அமைச்சருக்கும் ஜாமீன் குடுப்பீங்களா?'' என்று கேட்டார் மாஜிஸ்திரேட்.

''அமைச்சர் அழகிரி வீட்டுக்கு நாங்கள் போக வர இருப்பதால், அவரை எங்களுக்கு நன்றாகத் தெரியும்...'' என்று ஜாமீன் போட்டவர்கள் சொல்ல, அப்படியும் விடாதவர், ''என்ன கேஸுக்காக ஜாமீன் கொடுக்கிறீர்கள்?'' என்று கொக்கி போட்டார். இதற்கு பதில் சொல்லத் தெரியாமல் இருவரும் திணற, ''எலெக்ஷன் கேஸ்னு சொல்லுங்கப்பா!'' என்று அருகில் இருந்த வக்கீல்கள் எடுத்துக் கொடுத்தனர். கடைசியாக, ''விசாரணைக்கு அழைத்தால் வரவேண்டும்!'' என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வாங்கிக்கொண்டு கோர்ட்டில் இருந்து விறுவிறுக்க வெளியேறினார் அழகிரி.

கோர்ட்டில் அழகிரி சரண் அடைந்ததால், தாசில்தார் காளிமுத்துவும் 'இந்த வழக்கை வேறு ஏஜென்ஸி விசாரிக்க வேண்டும்’ என்று சொல்லித் தாக்கல் செய்த மனுவை 7-ம் தேதி வாபஸ் வாங்கினார். இனி இந்த வழக்கு எப்படிப் போகும் என்பது குறித்துக் காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தோம். ''மத்தவங்களுக்கு இது சாதாரண வழக்கு. ஆனால், மத்திய அமைச்சராக இருக்கும் அழகிரிக்கு, இது கொஞ்சம் விவகாரமானதுதான். காளிமுத்து தாக்கப்பட்டபோது அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டரிடம் விசாரணை நடத்துவோம். சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ ஆதாரம் கலெக்டரிடம் இருக்கிறது. அதையும் முக்கிய ஆவணமாகச் சேர்த்து,அழகிரி உள்ளிட்டவர்கள் மீது கூடிய விரைவில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்வோம். தேர்தல் நேரத்தில் அழகிரி தரப்பி​னரால் விமர்சிக்கப்பட்டகலெக்டர் சகாயம், மாவட்டஎஸ்.பி-யான ஆஸ்ரா கர்க் உள்ளிட்டவர்கள் தொடர்ந்து பணியில் இருப்​பதால், இதில் தி.மு.க-வினர் எந்தச் சலுகையும் எதிர்பார்க்க முடியாது. வழக்கு சரியான பாதையில் சென்றால்,அழகிரிக்கு சிக்கல்தான்!'' என்று சொன்​னார்கள்.

- குள.சண்முகசுந்தரம்

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism