Published:Updated:

சென்னை: `வீட்டுக்குப் பூட்டு; நடுத்தெருவில் மூதாட்டி'- மகன்கள் மீது புகாரளித்த தாய்

மூதாட்டி ஈஸ்வரி, பரணிதேவி
மூதாட்டி ஈஸ்வரி, பரணிதேவி

2020, ஆகஸ்ட் மாதம், ஈஸ்வரியையும் கணவரைப் பிரிந்து வாழும் அவரின் மகள் பரணிதேவியையும் அருள்ஜோதி தரப்பினர் வீட்டைவிட்டு விரட்ட முயன்றதோடு கொலை மிரட்டலும் விடுத்திருக்கின்றனர்.

சென்னை ஆதம்பாக்கம், முத்தியலால் ரெட்டி நகரைச் சேர்ந்தவர் ஈஸ்வரி (72). இவர், மாநில மனித உரிமை ஆணையத்துக்கும், ஆதம்பாக்கம் காவல் நிலையத்துக்கும் புகார்களை அனுப்பிவிட்டு நீதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்.

வயது மூப்பு காரணமாக ஈஸ்வரியால் பேச முடியவில்லை. அதனால் அவரின் வழக்கறிஞர் கோபி பேசினார்.

``ஈஸ்வரியின் கணவர் தயாளனின் பெயரில் ஆதம்பாக்கத்தில் சொந்தமாக வீடு இருக்கிறது. தயாளன் 2015-ம் ஆண்டு உடல்நிலை மற்றும் மனநலம் சரியில்லாமல் சிகிச்சை பெற்றுவந்தார். இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திய தயாளனின் மகன் அருள்ஜோதி என்பவர், ஆங்கிலத்தில் பத்திரத்தை எழுதி ஆங்கிலம் தெரியாத தயாளன், ஈஸ்வரியை ஏமாற்றி சொத்தை அபகரித்திருக்கிறார். 2018-ம் ஆண்டு தயாளன் இறந்துவிட்டார். அவரின் மறைவுக்குப் பிறகு அருள்ஜோதி, பெற்ற தாய் ஈஸ்வரியை வீட்டிலிருந்து வெளியேறும்படி கூறியிருக்கிறார். அப்போதுதான் சொத்து கைமாறியது ஈஸ்வரிக்கு தெரிந்திருக்கிறது.

பரணிதேவி
பரணிதேவி

2020, ஆகஸ்ட் மாதம், ஈஸ்வரியையும் கணவரைப் பிரிந்து வாழும் அவரின் மகள் பரணிதேவியையும் அருள்ஜோதி தரப்பினர் வீட்டைவிட்டு விரட்ட முயன்றதோடு, கொலை மிரட்டலும் விடுத்திருக்கின்றனர். அது தொடர்பாக ஈஸ்வரி, ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார். சிவில் பிரச்னை என்பதால் காவல் நிலையத்தில் விசாரிக்க முடியாது என்று போலீஸார் கூறியிருக்கின்றனர். இதையடுத்து நீதிமன்றத்தில் ஈஸ்வரி வழக்கு தொடர்ந்திருக்கிறார். இதற்கிடையில் தன்னை ஏமாற்றி சொத்தை அபகரித்ததாக கலெக்டரிடமும் புகாரளித்திருக்கிறார். அந்தப் புகாரின்பேரில் ஆர்.டி.ஓ விசாரணை நடத்திவருகிறார்.

இந்தநிலையில்தான் டிசம்பர் மாதம் 11, 15 ஆகிய தேதிகளில் வலுக்கட்டாயமாக ஈஸ்வரியையும் பரணிதேவியையும் அருள்ஜோதி தரப்பினர் வெளியேற்றியிருக்கின்றனர். அப்போது நடந்த தகராறில் ஈஸ்வரியும் பரணிதேவியும் கடுமையாக தாக்கப்பட்டிருக்கின்றனர். அதனால் இருவரும் சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். தற்போது ஈஸ்வரி, பரணிதேவியின் வீட்டிலிருந்த உடைமைகளை அருள்ஜோதி தரப்பினர் லாரி மூலம் எடுத்துச் சென்றிருக்கின்றனர். மேலும், வீட்டையும் பூட்டி விட்டு பெற்ற தாயை வெளியில் தள்ளியிருக்கின்றனர். அதனால், ஈஸ்வரி, தங்கக்கூட இடமில்லாமல் தற்காலிகமாக இன்னொரு மகள் வீட்டில் தங்கியிருக்கிறார். பரணிதேவி, தோழி ஒருவர் வீட்டில் தங்கியிருக்கிறார்.

ராமநாதபுரம்: நிலம் அபகரிப்பு; கொலை மிரட்டல்! - கலெக்டர் ஆபிஸில் தீக்குளிக்க முயன்ற நபர்
ஈஸ்வரி
ஈஸ்வரி

மூதாட்டிக்கு நடந்த கொடுமைகளை ஆதம்பாக்கம் போலீஸார் சரிவர விசாரிக்கவில்லை. அதனால்தான் மாநில மனித உரிமை ஆணையத்திடம் புகாரளித்திருக்கிறோம். ஈஸ்வரி, பரணிதேவியைத் தாக்கியதற்கான ஆதாரங்களும், உடைமைகளை லாரியில் எடுத்துச் சென்றதற்கான ஆதாரங்களும் எங்களிடம் இருக்கின்றன. பெற்ற தாயை கவனிக்கவில்லை என்று அவரின் மகன்கள் மீது காவல் நிலையத்தில் புகாரளிக்கவிருக்கிறோம்" என்றார்.

மாநில மனித உரிமை ஆணையத்தில் ஈஸ்வரி கொடுத்திருக்கும் புகாரில், `என் மகன்கள் சத்தியானந்தம், அருள்ஜோதி மற்றும் அவர்களுடன் வந்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல், எங்களை மிரட்டி மனதளவில் எங்களைச் சாவின் விளிம்புக்குக் கொண்டு சென்ற கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் மற்றும் ஆதம்பாக்கம் இன்ஸ்பெக்டர் பாலன் மீது விசாரணை செய்து துறைரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்ய வேண்டும். மேலும் 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்' என்று குறிப்பிட்டிருக்கிறார்.

பரணிதேவி
பரணிதேவி

இது குறித்து ஈஸ்வரியின் மகன்கள் அருள்ஜோதி, சச்சினாந்தம் ஆகியோரின் விளக்கம் கேட்க அவர்களின் செல்போன் நம்பர்களுக்கு பல தடவை தொடர்புகொண்டோம். ஆனால் அவர்கள் பதிலளிக்கவில்லை. அவர்களின் விளக்கத்தையும் பரிசீலனைக்குப் பிறகு வெளியிடத் தயாராக இருக்கிறோம்.

இது குறித்து இன்ஸ்பெக்டர் பாலனிடம் பேசினோம். ``ஈஸ்வரிக்கு ஐந்து பிள்ளைகள். சொத்துகளை அனைவருக்கும் பிரித்துக் கொடுத்துவிட்டார். ஈஸ்வரி குடியிருக்கும் வீடு, அவரின் மகன் அருள்ஜோதியின் பெயரில் இருக்கிறது. ஈஸ்வரி, காவல் நிலையத்தில் புகாரளித்ததும் சிவில் மேட்டர் என்பதால் நீதிமன்றத்தை நாட அறிவுரை வழங்கினேன். மேலும், தாயை அவரின் மகன்கள் கவனித்துக்கொள்வதாக விசாரணையின்போது தெரிவித்தனர்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு