கனடாவில் டொரண்டோ நகரிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்துவந்த முதியவர் ஒருவர், அதே பகுதியில் ஒவ்வோர் அப்பார்ட்மென்ட்டாகச் சென்று துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 5 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கனடா நாட்டின், டொரான்டோவுக்கு அருகிலுள்ள அடுக்குமாடில் கட்டடத்தில் வசித்தவர் ஃபிரான்செஸ்கோ வில்லி (73). இவருக்கும் அந்தக் குடியிருப்பில் இருக்கும் சிலருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நடந்துவருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஃபிரான்செஸ்கோ வில்லி, ஒவ்வோர் அப்பார்ட்மென்ட்டாகச் சென்று தன் அண்டை வீட்டார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கிறார். இது தொடர்பாக தகவலறித்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். பலியானவர்களில் மூன்று ஆண்களும், இரண்டு பெண்களும் அடங்குவர். மேலும் ஒருவர் காயமடைந்தார் எனக் கூறப்படுகிறது. பிரான்செஸ்கோ வில்லி காவல்துறை அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இது தொடர்பாக வெளியான தகவலில், துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களில் மூன்று பேர் அபார்ட்மென்ட் வளாகத்தின் வாரிய உறுப்பினர்கள் என்பது தெரியவந்திருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக , ஃபிரான்செஸ்கோ வில்லி தன் அபார்ட்மென்ட் முகவரியைக் குறிப்பிட்டு, அபார்ட்மென்ட் வளாகத்தின் வாரிய உறுப்பினர்களுடன் தனக்கு ஏற்பட்ட தகராறு குறித்தும், அவர்களும் நீதிமன்ற அதிகாரிகளும் தனக்கு எதிராகச் சதி செய்வதாக ஃபேஸ்புக்கில் ஒரு வீடியோ வெளியிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், வீடியோவின் உறுதித்தன்மை இன்னும் சரிபார்க்கப்படவில்லை என காவல்துறை தரப்பு தெரிவித்திருக்கிறது. மேலும் துப்பாக்கிச்சூடு நடைபெற்றதற்கான நோக்கம் இதுவரை கண்டறியப்படவில்லை எனக் கூறப்படுகிறது.