Published:Updated:

`சந்தோஷமாகச் சென்றாள்; அழுதுகொண்டே வீட்டுக்கு வந்தாள்!'- 73 வயது முதியவரால் சிறுமிக்கு நடந்த கொடுமை

சென்னை அம்பத்தூரில் சந்தோஷமாக டியூசனுக்குச் சென்ற 10 வயது சிறுமி அழுகையோடு வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.

73 வயது முதியவரால் சிறுமிக்கு நடந்த கொடுமை!
73 வயது முதியவரால் சிறுமிக்கு நடந்த கொடுமை!

சென்னை அம்பத்தூரில் குடியிருக்கும் தம்பதிக்கு 10 வயதில் ஒரு மகளும் 6 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் இருவரும் அந்தப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்துவருகின்றனர். பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் இவர்கள் இருவரும் மாலையில் டியூஷன் படிக்கச் செல்வார்கள். வழக்கம்போல கடந்த 30-ம் தேதி இருவரும் டியூஷனுக்குச் சென்றனர்.

Vikatan

சந்தோஷமாக வீட்டிலிருந்து சென்ற 10 வயதாகும் மாணவி, டியூஷன் முடிந்து அழுகையோடு திரும்பியுள்ளார். அவரிடம் மாணவியின் அம்மா என்ன நடந்தது என்று கேட்டுள்ளார். அதற்கு அவர், `டியூஷன் முடிந்து 10-வது மெயின்ரோடு வழியாக வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தேன். அப்போது அந்தத் தெருவில் உள்ள தாத்தா என்னிடம் பேசினார். என் பெயர் என்ன என்று கேட்டார். அதற்கு நான் என் பெயரைக் கூறினேன்.

பிறகு என்ன படிக்கிறாய் என்று கேட்டார். அதையும் அவரிடம் கூறினேன். அதன்பிறகு என் கைகளை அவர் பிடித்தார்' என்று சொல்லும்போதே மாணவி அழுதுள்ளார். நிலைமையைப் புரிந்துகொண்ட மாணவியின் அம்மா, அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் டியூஷனுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய என் மகளிடம் 73 வயதான முதியவர் சுந்தரமூர்த்தி தவறாக நடக்க முயன்றுள்ளார் என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் போலீஸார் சுந்தரமூர்த்தியிடம் விசாரித்தனர். அப்போது அவர், நான் சாதாரணமாகத்தான் பேசினேன் என்று கூறியுள்ளார்.

representational image
representational image

இதையடுத்து, மாணவியிடம் போலீஸார் தனியாக விசாரித்தனர். அப்போது மாணவி, 73 வயதாகும் சுந்தரமூர்த்தி என்ன செய்தார் என்பதைக் கூறினார். அதன்பேரில் சுந்தரமூர்த்தியை போலீஸார் கைது செய்து அவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சுந்தரமூர்த்தி குடியிருக்கும் தெரு வழியாகத்தான் மாணவி தினமும் டியூஷனுக்குச் செல்வார். அதை சுந்தரமூர்த்தி கவனித்து வந்துள்ளார். சம்பவத்தன்று தனியாக வீட்டுக்கு வந்த மாணவியிடம் சுந்தரமூர்த்தி பேச்சு கொடுத்துள்ளார். அந்தச் சமயத்தில் யாரும் இல்லை. அதைப் பயன்படுத்தி மாணவிக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

`டியூஷன் படிக்கவந்த மாணவிக்கு பாலியல் தொல்லை!' - தி.நகர் வழக்கை திசைமாற்றுகிறதா போலீஸ்?
சுந்தரமூர்த்தி
சுந்தரமூர்த்தி

சுந்தரமூர்த்தியின் செயலால் மாணவி அழுதுள்ளார். பின்னர் அவரின் பிடியிலிருந்து தப்பி ஓடி வீட்டுக்கு வந்துள்ளார். நடந்த சம்பவத்தை மாணவி, தன்னுடைய அம்மாவிடம் கூறியுள்ளார். அதன்பிறகு விசாரணை நடத்தி சுந்தரமூர்த்தியைக் கைது செய்துள்ளோம். அவர் சென்னையில் உள்ள அரசுக் கல்லூரியில் செக்யூரிட்டியாக வேலைபார்த்து ஓய்வு பெற்றவர்" என்றனர்.