Published:Updated:

உயிர் தப்பிய யாழ்ப்பாணம் எம்.பி-க்கள்!

இரும்புக் கம்பி.. மண் வெட்டி... குண்டாந்தடி..

உயிர் தப்பிய யாழ்ப்பாணம் எம்.பி-க்கள்!

இரும்புக் கம்பி.. மண் வெட்டி... குண்டாந்தடி..

Published:Updated:
##~##

ராஜபக்ஷே இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திருந்த மாட்டார்! கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில், தேர்தல் பிரசாரப் பணி களுக்காகக் கூடியிருந்த தமிழ் மக்கள் மீது, சிங்கள ராணுவத்தினர் வெறிகொண்டு தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். யாழ்ப்பாணத்தின் அளவெட்டி கிராமத்தில் 16-ம் தேதி நடந்த இந்த பயங்கரத்தால், யாழ் குடா பகுதியில் திகிலும் பதற்றமும் நிலவுகிறது.

 சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் பீதியுடன் விவரித்தார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு உட்பட்ட உள்ளூர் ஆட்சி சபைத் தேர்தல், வரும் ஜூலை 23-ல் நடத்தப்படுகிறது. இதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அளவெட்டியில் பிரசாரப் பணிக் கூட்டம் ஒன்றை நடத்தியது. அதில், வேட்பாளர்களை ஆதரவாளர்களிடம் அறிமுகப்படுத்தும் சம்பிரதாய நிகழ்வு நடந்தது.

உயிர் தப்பிய யாழ்ப்பாணம் எம்.பி-க்கள்!

அளவெட்டி, சைவ மகாஜன சபை மண்டபத்தில், மாலை 6.30 மணிக்கு கூட்டம் தொடங்கியது. யாழ் மாவட்டத்தின் கூட்டமைப்பு எம்.பி-க்கள் மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி, சரவண பவன், சிறீதரன், சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் சரவணபவன் பேசிக் கொண்டு இருக்கும்போது, சிங்கள ராணுவத்தினர் திடீரெனப் புகுந்தனர். ராணுவ உடை தரித்த அந்தக் கும்பல், இரும்புக் கம்பிகள், மண் வெட்டிப் பிடிகளைப்போன்ற

உயிர் தப்பிய யாழ்ப்பாணம் எம்.பி-க்கள்!

குண்டாந்தடிகளால், கூட்டத்துக்கு வந்திருந்தவர்களை எந்த முன்னறிவிப்பும் இன்றிக் கடுமையாகத் தாக்கியது. பயந்து ஓடியவர்களை வெளியில் இன்னொரு சிங்களப் படை, ஓட ஓட விரட்டி அடித்தது. ஒருவன் மைக்கைப் பிடுங்கி சரவணபவன் மீது அடிக்கப் பாய்ந்தான். அதைத் தடுத்த அவரது பாதுகாவலரான தரித்து என்பவர்  நிலை குலைந்து விழுந்தார். இன்னொருவன், சுரேஷ் பிரேமச்சந்திரனை கொலை வெறியோடு தாக்க, பாதுகாவலரால் அவரும் காயமின்றித் தப்பினார். உச்சகட்டமாக, மூத்த எம்.பி-யான மாவை சேனாதிராசாவையும் தாக்க முயன்றனர். அவரது மெய்ப் பாதுகாவலர் சம்பத், தனது துப்பாக்கியை உயர்த்தி, 'படையினர் எம்.பி-க்களைவிட்டு நகராவிட்டால், சுட்டுவிடுவேன்’ என மிரட்டியதும், அவர்களின் வன்முறைத் தாண்டவம் அடங்கியது. பிரசாரக் கூட்டத்துக்கு செய்தி சேகரிக்க வந்த செய்தி யாளர்களும், புகைப்படக்காரர்களும் தாக்கப்பட்டனர். வாயிலில் நின்று கேமராக்கள், செல்போன்களைப் பறித்து, படங்களை அழித்த பிறகே அந்தக் கும்பல் அவற்றைத் திருப்பித் தந்தது...'' என்றார்கள் பதைபதைப்புடன்.

சிறீதரனிடம் நாம் பேசினோம். ''சம்பவத்தன்று இரவு அளவெட்டியில், வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட் டத்தை நடத்தினோம். அப்போது, ராணுவ மேஜர் வந்தார். 'அனுமதி வாங்காமல் கூட்டம் நடத்தக் கூடாது!’ என்று கடுகடுத்தார். 'உள் அரங்கத்தில், ஒலிபெருக்கி இல்லாமல் நடத்தப்படும் கூட்டத்துக்கு அனுமதி தேவை இல்லை...’ என சுமந்திரன் பதில் சொல்லும்போதே, தடார் புடார் என 30-க்கும் மேற்பட்ட ராணுவத்தினர், தடிகளாலும் கட்டைகளாலும் தாக்கத் தொடங்கிவிட்டனர். பத்திரிகையாளர் களைத் தாக்கி, அவர்களின் அடையாள அட்டைகளைப் பறித்து, புகைப்படக் கருவிகளைப் பிடுங்கி அட்டகாசம் செய்தனர். இச்சம்பவம் குறித்து அதிபர் மகிந்த ராஜபக்ஷேவுக்கும், நாடாளுமன்ற சபாநாயகருக்கும் முறைப்பாடு செய்து, மூன்று நாட்கள் ஆகியும் பதில் இல்லை!'' என்றார்.

''அளவெட்டித் தாக்குதல் முன்கூட்டியே திட்டமிடப் பட்டது!'' எனக் கூறும் சுரேஷ் பிரேமச்சந்திரன், ''கூட்டம் நடந்த அன்று காலையிலேயே போலீஸ், ராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மண்டபத்துக்கு வந்து, 'என்ன கூட்டம், யார் நடத்துகிறார்கள்?’ என்பதுபற்றி விசாரித்துவிட்டுச் சென்றனர். சட்டத்துக்குப் புறம்பான கூட்டம் என்றால், போலீஸார் அப்போதே கேட்டு இருப்பார்கள்தானே? இரண்டாவதாக, ராணுவத்தின் தலையீடு இங்கு தேவையே இல்லை. ஜனநாயக உரிமைப்படி நடக்கும் ஒரு கட்சிக் கூட்டத்துக்குள், டி-56 துப்பாக்கிகள், இரும்புக் கம்பிகள், மரக் கட்டைகளுடனா உள்ளே வந்து விசாரிப்பார்கள்? போலீஸ் நிலையம் போய் வருவதற்குள், மண்டபத்துக்குள் புகுந்து அலங்கோலமாகக் கிடந்த பொருள்களை சரிசெய்துவிட்டு, 'அங்கு ஒன்றுமே நடக்கவில்லை’ என்று ராணுவத் தளபதி மல்கம பேசினார். யாழ் மாவட்டக் கட்டளைத் தளபதி ஹதுருசிங்கவோ, 'தாக்குதல் நடத்தியவர்கள் ராணுவத்தினரே அல்ல’ என்கிறார். ஆனால், தாக்குதல் நடத்துவதற்கு முன்பு பேசிய ராணுவ அதிகாரி, மேலிட உத்தரவுப்படித்தான் அங்கு வந்ததாகத் தெளிவாகச் சொன்னார்!'' என்றார்.

'தாக்குதலில் ஈடுபட்ட சிங்கள ராணுவத்தினரை அடையாளம் காட்ட முடியும்’ என நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெளிவாகக் குறிப்பிட்டு உள்ளனர். ஆனாலும், 'அடையாளம் தெரியாத யாரோதான் தாக்குதலில் ஈடுபட்டு உள்ளனர்’ என்று நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டிய 'பி’ ரிப்போர்ட்டில் தெல்லிப்பளை போலீஸார் பதிவு செய்து உள்ளனர்.

ஈழத்திலும், வெளிநாடுகளிலும் தமிழ் மக்களைக் கவலைகொள்ள வைத்துள்ள இச்சம்பவம், 'ஒரு நாள் சமாசாரம் இல்லை... தொடரும்’ என்கிறார்கள். இதற்கு முன்பே, கூட்டமைப்பின் கோப்பாய் பிரதேச சபை முதன்மை வேட்பாளர் ரமேஷ், கடந்த ஏப்ரல் 27-ம் தேதி யாழ் அச்சுவேலியில் கடுமையாகத் தாக்கப்பட்டார். அதில், அவருக்கு ஒரு கை எலும்பு முறிந்தது. கடந்த மார்ச் 7-ம் தேதி, வாகனத்தில் சென்றுகொண்டு இருந்த சிறீதரன் எம்.பி. மீது நொச்சிகாம என்ற இடத்தில் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதல்களின் மூலம், 'ஜனநாயக ரீதியாகக்கூட உரிமைகளைப்பற்றிப் பேசும் தமிழர் யாருக்கும் உயிர் இருக்காது’ என்பதையே சிங்கள ராணுவம் காட்டி இருக்கிறது.

இலங்கையில் அமைதி திரும்பிவிட்டது என்று சொல்பவர்கள்தான் இதற்குப் பதில் சொல்ல வேண்டும்!

- இரா.தமிழ்க்கனல்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism