Published:Updated:

''மீனவர் சிறைக்கு கடிதம்தான் தீர்வா?''

''மீனவர் சிறைக்கு கடிதம்தான் தீர்வா?''

''மீனவர் சிறைக்கு கடிதம்தான் தீர்வா?''

''மீனவர் சிறைக்கு கடிதம்தான் தீர்வா?''

Published:Updated:
##~##
''மீனவர் சிறைக்கு கடிதம்தான் தீர்வா?''

ச்சத் தீவு மீட்புத் தீர்மானம், மீனவர் பிரச்னை குறித்து பிரதமரிடம் மனு, நிவாரணத் தொகை இரட்டிப்பு... என முதல்வர் ஜெயலலிதா தொடர் ஆக்ஷன்களை ஒரு பக்கம் எடுத்து வந்தாலும்... இலங்கைக் கடற்படையால் சும்மா இருக்க முடியவில்லை. மீண்டும் கைதுப் படலம் தொடங்கிவிட்டது! 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கடந்த 20-ம் தேதி, ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களில் 23 பேரை இலங்கைக் கடற்படையினர் சிறைப்பிடித்துச் சென்றுவிட்டார்கள். இவர்கள் சென்ற ஐந்து விசைப் படகுகளும் அபகரிக்கப்பட்டன. இலங்கைக் கடற்படையின் இந்த அத்துமீறலைக் கண்டித்து, ராமேஸ்வரம் மற்றும் கோட்டைப்பட்டினம் மீனவர்கள், தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழக மீனவர்களை மீட்கக் கோரி முதல்வர் ஜெயலலிதா உட்பட தமிழகத்தின் பல அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். ஆனால், நடவடிக்கை எடுக்க வேண்டிய மத்திய அரசு, இதுவரை மௌனம் சாதித்து வருகிறது.

''மீனவர் சிறைக்கு கடிதம்தான் தீர்வா?''

சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள், இலங்கை அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் ஆட்சி மாறியும் மீனவர்கள் சந்திக்கும் துன்பங்கள் தீரவே இல்லை.

தமிழகக் கடலோர விசைப் படகு மீனவர் நல சங்க மாநில பொதுச் செயலாளர் என்.ஜே.போஸிடம் பேசினோம். ''கடந்த 28 ஆண்டுகளாக விடுதலைப் புலிகளைக் காரணம் காட்டியே தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியது இலங்கை அரசு. புலிகள் ஒழிக்கப்பட்டுவிட்டதாக சொல்லி இரண்டு

''மீனவர் சிறைக்கு கடிதம்தான் தீர்வா?''

ஆண்டுகள் ஆகிறது. ஆனாலும் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் மட்டும் தொடரவே செய்கிறது. அதிகத் திறன்கொண்ட படகுகள் பயன்பாட்டுக்கு வந்துவிட்ட நிலையில், மீனவர்கள் எல்லை தாண்டிச் செல்வது தவிர்க்க முடியாமல் போகிறது. அரசு அறிமுகப்படுத்தி வரும் ஆழ்கடல் மீன் பிடிப்பு, தூண்டில் மீன் பிடிப்பு, சுறா மீன் பிடிப்பு போன்றவற்றுக்கு இந்தக் கடல் பகுதியில் வாய்ப்பு இல்லை. இந்த நிலையில், மீன் பிடிக்கத் தடையான 45 நாட்கள் கழித்து மீன் பிடிக்கச் சென்ற சில நாட்களிலேயே, பருவ நிலை மாற்றத்தால் ஒன்பது விசைப் படகுகள் கடலில் மூழ்கி​விட்டன. இப்போது, 23 மீனவர்களையும் ஐந்து விசைப் படகுகளையும் இலங்கைக் கடற்படையினர் பிடித்துச் சென்றுவிட்டனர். இரு நாட்டு மீனவர்களும் பாதிப்பு இல்லாமல் மீன் பிடிக்க மத்திய - மாநில அரசுகள் பேசி, மீன்பிடி ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும். இந்தியக் கடல் பகுதியில் உள்ள மணல் திட்டுகளுக்கு இடையே கால்வாய் தோண்ட வேண்டும். இலங்கையின் வளர்ச்சிக்கு எல்லா வகையிலும் உதவி செய்யும் மத்திய அரசு, தமிழக மீனவர்களுக்கும் நல்லது செய்ய வேண்டும்!'' என்றார்.

சி.ஐ.டி.யு. மீனவர் சங்க மாநில செயலாளர் சி.ஆர்.செந்தில்வேல், ''மீன் பிடித் தடை, புயல், போதுமான மீன்வரத்து இல்லாத காலம் போன்றவற்றைத் தவிர்த்து, வருஷத்துக்கு 70 நாட்கள் மட்டுமே மீன் பிடிக்கச் செல்கிறோம். அந்த நாட்களிலும் இதுபோன்ற பிரச்னை ஏற்பட்டால் எப்படி? இதைத் தவிர்க்க, இரு நாட்டுக் கடல் பகுதிகளிலும் பரஸ்பரம் பிரச்னை இன்றி மீன் பிடித்துக்கொள்ளும் ஒப்பந்தத்தை உருவாக்க வேண்டும்!'' என்றார்.

இலங்கையில் சிறை வைக்கப்பட்டு உள்ள மீனவர் மனோகரனின் மனைவி அமுதா, ''திங்கட்கிழமை விடிஞ்சும் விடியாமக் கடலுக்குப் போனார். மறுநாள் மதியம் வீட்டுக்கு வர வேண்டியவர் வரலை. பிறகுதான், இலங்கை நேவிக்காரங்க பிடிச்சிட்டுப் போனதாத் தகவல் வந்தது. உயிரைப் பணயம்வெச்சு கடலுக்குப் போனாலும் வருமானத்துக்கு உத்தரவாதம் இல்லை. தடைக் காலம் முடிஞ்சும் கடல் கொந்தளிப்பா இருந்ததால், இத்தனை நாளா கடலுக்குப் போகாம இருந்தார். எத்தனை நாளைக்குத்தான் கடன் வாங்கி சமாளிக்கிறதுன்னு சொல்லிட்டு, கடலுக்குப் போனார். இன்னும் அவர் திரும்பி வரலையே...'' எனக் கண்ணீர் சிந்தினார்.

பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் அனுப்பி உள்ளார். 'டெல்லியில் தங்களை சந்தித்துப் பேசியபோதும் இப்பிரச்னை குறித்து விவாதித்தேன். தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் சென்னையில் வந்து சந்தித்த​போதும் விவாதித்தேன். ஆனாலும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பது மிகுந்த துயரத்தில் ஆழ்த்தி உள்ளது’ என்று அதில் கூறியுள்ளார்.

கருணாநிதி பாணியில் கடிதங்களை அனுப்புவதோடு நிறுத்திக்கொள்வாரா, அதிரடிகளில் இறங்குவாரா எனப் போகப் போகத்தான் தெரியும்!

- இரா.மோகன், படங்கள்: உ.பாண்டி 

''மீனவர் சிறைக்கு கடிதம்தான் தீர்வா?''

என்ன செய்ய வேண்டும் ஜெ.?

மீனவர்கள் கைது விவகாரத்தில் ஜெயலலிதா என்ன செய்யவேண்டும் என்பதை ம.தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் சொல்கிறார். ''வங்க தேசப் பிரிவினைக்கு முன், மேற்கு பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் எங்கள் எல்லைக்குள் வந்தால், போலீஸாரைக்கொண்டு சுட்டு வீழ்த்துவேன்!’ என்று முழங்கினார் அப்போதைய மேற்கு வங்க முதல்வர் சித்தார்த்த சங்கர் ரே. அதே நிலையை இன்றைய ஆட்சியாளர்கள் கையாண்டால்தான், இலங்கைக் கடற்படையின் கொட்டத்தை அடக்க முடியும். நம் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை கை வைத்தால், பயிற்சி பெற்ற தமிழக போலீஸாரைக்கொண்டு, அவர்களை சுட்டுத் தள்ள வேண்டும். மத்திய அரசு இறங்கி வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், இதுதான் இறுதித் தீர்வு!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism