Published:Updated:

பாலா மீது கொந்தளிக்கும் சிங்கம்பட்டி ஜமீன்!

''சொந்தக்காரப் பையனே இப்படி கொச்சைப்படுத்தலாமா?''

பாலா மீது கொந்தளிக்கும் சிங்கம்பட்டி ஜமீன்!

''சொந்தக்காரப் பையனே இப்படி கொச்சைப்படுத்தலாமா?''

Published:Updated:
##~##

ர்ச்சையில் சிக்கும் திரைப்படங்களின் வரிசை யில் லேட்டஸ்ட் என்ட்ரி... பாலாவின் 'அவன் - இவன்’. இந்தப் படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள் சிங்கம்பட்டி ஜமீனுக்கு எதிராக இருப்பதால், தென் மாவட்டங்களில் சூடு பறக்கிறது. இந்தப் படத்தை தடை செய்யக் கோரி நீதிமன்றத் துக்குப்போய் இருக்கிறது, ஜமீன்தாரின் குடும்பம்! 

'அவன் - இவன்’ திரைப்படத்தில், சிங்கம்பட்டி ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதியை அவமதிக்கும் வகையில் இருக்கிறதாம், சில காட்சிகள். குறிப்பாக, தீர்த்தபதி என்ற ஜமீன்தாரை வில்லன் ஆர்.கே., மாட்டுத் தொழுவத்தில் நிர்வாணமாக்கி அடித்துக் கொலை செய்கிறார். அத்துடன், ஜமீன்தாரின் கட்டுப்பாட்டில் இருக்கும் சொரிமுத்து அய்யனார் கோயிலை அவமதிக்கும் காட்சிகள் இருப்பதும், கூடுதல் உஷ்ணத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பாலா மீது கொந்தளிக்கும் சிங்கம்பட்டி ஜமீன்!

படத்தின் இயக்குநர் பாலாவைக் கண்டித்து நெல்லை, தூத்துக்குடி, மதுரை மாவட்டங்களில், 'சொரிமுத்து அய்யனார் பக்தர்கள்’ என்ற பெயரில் ஒட்டப்பட்டு இருக்கும் கண்டன போஸ்டர்களில், 'சிங்கம்பட்டி ஜமீன்தாரையும், சொரிமுத்து அய்யனார் கோயிலையும் அவமதிக்கும் காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும். படத்தை இயக்கிய பாலா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனிடையே, சிங்கம்பட்டி சமஸ்தானத்தின் இளைய ஜமீன்தார் தாயப்பராஜா இந்த விவகாரத்துக் காக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து உள்ளார். அதில், ''நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், சிங்கம்பட்டி ஜமீன் மூலமாக மருத்துவ மனைகள், கல்விக்கூடங்கள் அமைக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள காரையார் சொரிமுத்து அய்யனார் கோயில், இந்த ஜமீனுக்குப் பாத்தியப்பட்டது. ஆடி அமாவாசை பூஜையின்போது, பல லட்சம் பக்தர்கள் அங்கு கூடுவார்கள். ஆனால், இந்தப் பாரம்பரியம் எதையும் தெரிந்துகொள்ளாமல், ஜமீனையும், கோயிலை யும் அவதூறாகச் சித்திரித்து இருப்பதால், இந்தப் படத்துக்கு தடை விதிக்க வேண்டும்!'' என வலியுறுத்தி உள்ளார்.

ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதியிடம் பேசினோம். ''சிங்கம்பட்டி சமஸ்தானத்துக்கு, ஆயிரம் வருடப் பாரம்பரியம் உண்டு. நாங்கள் சாதி, மத வேறுபாடு பார்க்காமல் எல்லோரிடமும் அன்பாக இருப்பதால், மக்களும் எங்கள் மீது பிரியமாக இருக்காங்க. எனக்கு 80 வயதாகிறது. ஒரு துறவியின் மனநிலைக்குப் போயிட்டேன். அதனால், என் மீது பூவை எறிந்தாலும், கல்லை வீசினாலும் கவலைப்பட மாட்டேன். படத்தில் என்னைத் தவறாக விமர்சனம் செஞ்சிருப்பதாக பலரும் சொன்னதை நான் கண்டுக்கலை. ஆனால், என் மீது பாசம் வைத்திருக்கும் மக்கள் ரொம்பவும் கோபத்தில், வேகத்தில் இருக்காங்க. அதனால் இந்தப் பிரச்னை பெருசாகிருச்சு.

பாலா மீது கொந்தளிக்கும் சிங்கம்பட்டி ஜமீன்!

என்னையும் இந்த ஜமீனையும் பற்றி முன்பின் அறியாதவர்கள் தவறு செய்ய வாய்ப்பு இருக்கு. ஆனா, பாலா எனக்கு உறவுக்காரப் பையன். படம் எடுக்கிற துக்கு முன்னால், என்னிடம் ஒரு வார்த்தை கலந்து பேசி இருக்கலாம். இப்போது இந்த அளவுக்கு ஆன பிறகாவது என்னிடம் பேசி இருக்கலாம். அல்லது அந்தக் கதாபாத்திரம் 'கற்பனையானது’னு கார்டு போட்டு இருக்கலாம். இது எதையும் செய்யலை. அப்படின்னா திட்டமிட்டே இதை செஞ்சதாதானே அர்த்தம். கொதிச்சுப்போன பலர் போராட்டம் நடத்த என்னிடம் அனுமதி கேட்டாங்க. நான்தான்  அவங்களைத் தடுத்தேன். ஆனாலும், மதுரையில் இந்தப் படத்துக்கு தடை கோரி 150 பெண்கள் ரத்தக் கையெழுத்துப் போட்டு முதல்வருக்கு மனு அனுப்பி இருக்காங்க. நான் எவ்வளவோ வற்புறுத்தியும் சமாதானம் அடையாத என் மகன் சங்கராத்மஜன், உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடிவு செஞ்சி ருக்கார்...'' என்றார் ஆற்றாமையுடன்.

இயக்குநர் பாலாவிடம் பேசியபோது, ''ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி என்னுடைய சொந்தக்காரர் என்பது தெரியும். ஆனால், இதுவரை ஒரு முறைகூட அவரை சந்தித்து இல்லை. இப்போது உறவினர் என்று சொல்லிக்கொள்ளும் அவர், படம் குறித்து என்னிடம்தான் பேசியிருக்க வேண்டும். அதைவிட்டு நீதிமன்றத்துக்குப் போயிருக்கிறார். நீதிமன்றம் என்ன சொல்கிறதோ, அதற்குக் கட்டுப்படுகிறேன். படங்களில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் கற்பனையே என்று டைட்டில் கார்டு போட வேண்டும் என்று சொல்வதற்கு இவர்கள் யார்?'' என்றார் ஷார்ப்பாக!

- குணா, ஆண்டனிராஜ்

படங்கள்: எல்.ராஜேந்திரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism