வெளியிடப்பட்ட நேரம்: 09:49 (28/01/2017)

கடைசி தொடர்பு:09:49 (28/01/2017)

''மாணவிகள் தற்கொலைக்குக் காரணம் மொபைல்!'' - முதல் பெண் துப்பறியும் நிபுணரின் அனுபவம்

மொபைல்

கேரள மாநிலம் திருச்சூரில் வசிக்கிறார் தன்யா மேனன். இந்தியாவின் முதல் பெண் சைபர் க்ரைம் துப்பறியும் நிபுணர் என்ற பெருமைக்குரியவர். 39 வயதாகும் இவருக்கு, ஓர் ஆண் குழந்தைக்கு அம்மாவாக வீட்டிலும் பொறுப்புகள் நிறைய. இதற்கிடையில், மோகினியாட்டம், குச்சிப்புடி நடனங்களை முறைப்படி பயின்ற தன்யா, உலகின் பல மேடைகளில் நடன நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். தன்யாவிடம் பேசினோம்.

''கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தேன். சுப்ரீம் கோர்ட்டில் வழக்கறிஞராகப் பணிபுரிந்த என் தாத்தா, சைபர் க்ரைம் சட்டத்திற்கு நல்ல எதிர்காலம் இருப்பதால் அது தொடர்பாகப் படிக்க பரிந்துரைத்தார். கருத்தரங்கம் ஒன்றில் கலந்து கொண்டு விவரங்களை அறிந்து கொண்டேன். Cyber Law and Intellectual Property Rights in Cyber Space படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றேன். புனேவில் உள்ள Asian School of Cyber Lawல் பணியாற்றினேன்.சைபர் க்ரைம் துப்பறியும் நிபுணர்- தன்யா மேனன்

இப்போது கார்ப்பரேட் ஊழியர்கள், காவல்துறை, மத்திய, மாநில அரசுப் பணியாளர்களுக்கு பயிற்சி வகுப்புகளை நடத்துகிறேன். பல வழக்குகளை விசாரித்து பிரச்னைகள் தீர்வதற்கு உதவுகிறேன்.

கேரளாவில் மூன்று பள்ளி மாணவிகள் வகுப்பறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுவே நான் விசாரித்த முதல் வழக்கு. மற்றொரு பள்ளியில் படிக்கும் மாணவர்கள், அந்த மூன்று மாணவிகள் தங்களுடன் சல்லாபமாக இருந்த புகைப்படங்கள் மொபைல் போனில் இருப்பதைக் காட்டி, ஆசைக்கு இணங்க வற்புறுத்தி, ஒத்துழைக்காவிட்டால் அவற்றை வெளியிடுவோம் என மிரட்டியதால், பயந்துபோன மாணவிகள் குடும்ப கௌரவத்தை காப்பதற்காக தற்கொலை செய்துகொண்டது விசாரணையில் தெரிய வந்தது.

மொபைல் போனை தவறாகப் பயன்படுத்தி மூன்று உயிர்கள் பலியானது மிகுந்த வேதனை அளித்தது. இணையதளம், சமூக வலைதளங்கள் மற்றும் மொபைல் போனில் ஒளிந்திருக்கும் ஆபத்துகளும் வக்கிரங்களும் அதிகம். ஆனால் அவற்றைப் பற்றி அறியாமல் வளர் இளம் பருவத்தினர் இன்னல்களுக்கு ஆளாவதைத் தடுக்க பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு விழிப்பு உணர்வு முகாம்களை நடத்துகிறேன். இந்த நிகழ்ச்சியில் சமூக வலைதளம், வாட்ஸ்அப் போன்ற செயலிகளை பயன்படுத்தும்போது பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விளக்குகிறேன். அதோடு அந்தரங்கமான தகவல்களை பகிர்ந்து கொண்டு பிரச்னைகள் வருவதற்கு நாமே காரணமாகக் கூடாது என்பதையும் புரிய வைக்கிறேன். இதுவரை 400க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளேன்.

சைபர் குற்றங்களை எங்கு புகார் செய்ய வேண்டும், நீதிமன்றத்தில் எத்தகைய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் போன்ற அடிப்படை தகவல்கள், படித்தவர்களுக்குக் கூடத் தெரிவதில்லை. அப்படியானவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கென ஒரு அமைப்பை நடத்தி வருகிறேன். கடந்த 15 வருடங்களில் பல வழக்குகளை விசாரித்து உண்மையை வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறேன். ஒவ்வொரு வழக்கும் மர்ம நாவலின் சுவாரஸ்யத்திற்கும் விறுவிறுப்பிற்கும் சற்றும் குறையாத திடுக்கிடும் சம்பவங்களைக் கொண்டவை.

மோசமான பின்விளைவுகளால் நிழ வாழ்க்கையில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உரிய நியாயம் கிடைக்க உதவுகிறேன். மத்திய, மாநில அரசுகள் சம்பந்தமான தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளையும் கையாண்டிருக்கிறேன். இப்போது ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய 200க்கும் மேற்பட்ட புகார்கள் வருகின்றன. வழக்கின் தன்மையைப் பொறுத்து கட்டணம் வசூலிக்கிறேன்.

ஏன், எதற்கு, எப்படி ஒரு குற்றம் நிகழ்ந்தது என விசாரித்து, குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்துவது என் கடமை. நவீன தொழிற்நுட்பத்திலும் இணையதளத்திலும் ஒளிந்திருக்கும் அபாயத்தை பொதுமக்களுக்கு விளக்குவதும் என் பணி. சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி குற்றவாளிகள் தப்பிவிடாமல் இருக்க காலத்தின் தேவைக்கேற்ப அவ்வப்போது சட்ட திருத்தங்களை செய்ய வேண்டியதும் அவசியம்.

இப்போது டிமானிட்டைசேஷனுக்குப் பிறகு, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் பரவலாகப் பயன்படுத்தப்படுவதில், பிரச்னைகளைத் தவிர்க்க சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.

* ஒவ்வொரு இணையதளமும் தாங்கள் விற்கும் பொருட்களுக்கு ஏற்ப பிரத்யேக வியாபார உத்திகளை பின்பற்றுவதால் விதிமுறைகளை நன்கு அறிந்து கொண்டு பின்னரே ஆன்லைனில் பொருட்களை வாங்க வேண்டும்.

* டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி எதிர்பாராத விதமாக இருமுறை ஸ்வைப் செய்து பணத்தை இழக்கும்போது, உடனடியாக வங்கியின் புகார் எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும்.

* டிரான்சாக்‌ஷன் ஸ்லிப்பில் உள்ள விவரங்கள் விரைவில் அழிந்துவிடும். எனவே அதை ஜெராக்ஸ் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை வாங்கிய பொருளில் ஏதேனும் பிரச்னை என்றால், டிரான்சாக்‌ஷன் ஸ்லிப், அலைபேசிக்கு வந்த எஸ்எம்எஸ், அல்லது வங்கிக் கணக்கு ஸ்டேட்மென்ட் இவற்றை ஆதாரமாகக் கொண்டு நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம். இழந்த பணம் மற்றும் நஷ்ட ஈட்டுத் தொகையும் திரும்பக் கிடைக்க வாய்ப்புண்டு.

* வணிக இணையதளங்கள், ஆன்லைன் வர்த்தகம் குறித்த புகார்கள், செல்போன் ஆர்டர் செய்தால் செங்கல் அனுப்புவது போன்ற செயல்களுக்கு, நுகர்வோர் நீதிமன்றம் மூலம் உரிய நியாயம் பெறலாம்.

மொத்தத்தில், சைபர் உலகம் என்பது வாழ்க்கையை எளிமையாக்க வல்லதுடன், கண்ணுக்குத் தெரியாத, கண் நழுவவிடும் ஆபத்துகளும் நிறைந்தது!"

எச்சரிக்கிறார் தன்யா மேனன்!

-ஆர்.ஶ்ரீதர்


டிரெண்டிங் @ விகடன்