Published:Updated:

தெருவில் சுற்றும் பூனைகளுக்கு உணவு... விநோத சட்டத்தால் சிறை செல்லும் 79 வயது மூதாட்டி!

கலிலுல்லா.ச

தெருவில் சுற்றும் பூனைகளுக்கு உணவு வழங்கியதால் 79 வயதான மூதாட்டி ஒருவருக்கு 10 நாள்கள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

நான்சி செகுலா
நான்சி செகுலா

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தின் கார்ஃபீல்டு ஹயிட்ஸ் நகரத்தைச் சேர்ந்த நான்சி செகுலாவுக்கு 79 வயது. அவரது கணவர் 2017-ம் ஆண்டு இறந்த பிறகு வீட்டில் தனியாக வசித்து வருகிறார். அவர் குடியிருக்கும் தெருவில் நிறையப் பூனைகள் சுற்றிக்கொண்டிருக்கும். யாருமே இல்லாமல் தவிக்கும் நான்சிக்கு அந்தப் பூனைகள் ஓர் ஆறுதலாக இருந்தன.

பூனை
பூனை

கருணையில் அடிப்படையில் அந்தப் பூனைகள் சாப்பிட ஏதாவது ஒன்றைக் கொடுப்பார் செகுலா. அப்படி அவர் கொடுத்த உணவுதான், அவருக்கே சிக்கலாகிவிட்டது. அந்த நகரைப் பொறுத்தவரை, தெருவில் சுற்றும் பூனைகளுக்கு உணவைக் கொடுப்பது சட்டவிரோதம். அது மட்டுமின்றி ஏற்கனவே இவர் இத்தகையச் செயலுக்காக அபராதமும் கட்டியுள்ளார். அதனால், இந்தக் குற்றத்துடன் நீதிமன்ற அவமதிப்பும் சேர்ந்துகொள்ள 10 நாள்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளது அங்குள்ள நீதிமன்றம்.

"நான் வளர்த்த பூனைகள் இப்போதில்லை; அவை இறந்துவிட்டன. என் கணவரும் இறந்துவிட்டார். நான் தனிமையில் தவிக்கிறேன். அப்படியிருக்கும்போது எனக்கு இந்தப் பூனைகள்தான் ஆறுதலளிக்கின்றன” என்று ஃபாக்ஸ்8 (Fox 8) செய்தி நிறுவனத்துக்குப் பேட்டி கொடுத்திருக்கிறார் நான்சி. மேலும், "அவை என் வீட்டுக்கு வரும்போது பார்ப்பதற்குப் பாவமாக இருக்கும்; எனவேதான் சாப்பிட எதாவது தருவேன்" எனவும் தெரிவித்துள்ளார்.

பூனை
பூனை

தெருவில் சுற்றும் பூனைகளுக்கு உணவளிப்பது தொடர்பாக அப்பகுதியில் சட்டமொன்று இருப்பதை முன்னர் அவர் அறிந்திருக்கவில்லை. ஏற்கனவே அதற்கான தண்டனையைப் பெற்றிருந்தபோதும் தொடர்ந்து அந்தத் தவற்றைச் செய்ததால் தற்போது சிறைத் தண்டனைக் கிடைத்துள்ளது. இதுகுறித்து அவரும் அவர் குடும்பத்தினரும், "இந்தக் குற்றத்துக்கு இது மிகவும் கடுமையான தண்டனை!" என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.