Published:Updated:

`ஒன் டிஜிட்' மார்க்; திட்டிய தந்தை; மாயமான மகன்! -காவல்நிலையத்தில் நடந்த பாசப் போராட்டம்

ஒன் டிஜிட் மார்க் பெற்ற மகனை அப்பா திட்டியதால், வீட்டுக்குச் செல்லாமல் தி.நகருக்குச் சென்ற மாணவனை மீட்டு பெற்றோரிடம் போலீஸார் ஒப்படைத்தனர்.

மாணவனுடன் போலீஸ்
மாணவனுடன் போலீஸ்

சென்னை தி.நகர் பகுதியில் பள்ளிச் சீருடையில் மாணவர் ஒருவர் நேற்று அழுதுகொண்டிருந்தார். அதைப் பார்த்தவர்கள் என்னவென்று விசாரித்தனர். அப்போது அந்த மாணவர், `அப்பா திட்டியதால் பள்ளி முடிந்ததும் வீட்டுக்குச் செல்லாமல் நடந்து இங்கு வந்துவிட்டேன். வீட்டுக்குச் செல்ல வழிதெரியவில்லை' எனக் கூறியிருக்கிறார். இதனால் என்ன செய்வது என்று அங்குள்ளவர்கள் யோசித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த புதுப்பேட்டை ஆயுதப்படை பிரிவில் பணியாற்றும் காவலர்கள் காமாட்சி, கயல்விழி ஆகியோர், அந்த மாணவரிடம் விசாரித்தனர்.

மாணவனுடன் போலீஸார்
மாணவனுடன் போலீஸார்

மாணவர் தெரிவித்த முகவரியை, டி.பி.சத்திரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரவிக்குமாருக்குப் போனில் தகவல் தெரிவித்தனர். உடனே இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், சம்பந்தப்பட்ட மாணவரிடம் பேசி அவரின் அப்பாவின் செல்போன் நம்பரை வாங்கினார். பிறகு மாணவரின் தந்தைக்குப் போன் செய்து விவரத்தைக் கூறினார். மகனைக் காணாமல் ஒவ்வொரு இடமாக தேடிக்கொண்டிருப்பதாக ஆய்வாளரிடம் மாணவரின் தந்தை கண்ணீர்வடித்துள்ளார்.

அதைக் கேட்ட இன்ஸ்பெக்டர் `உங்கள் மகன் கிடைத்துவிட்டான், உடனடியாக காவல் நிலையத்துக்குப் புறப்பட்டு வாருங்கள்' என்று கூறினார். இதையடுத்து, மாணவரை அழைத்துக்கொண்டு காவல் நிலையத்துக்கு வரும்படி ஆயுதப்படை காவலர்களிடம் இன்ஸ்பெக்டர் தெரிவித்தார். மாணவனை அழைத்துக்கொண்டு காவலர்கள் டி.பி.சத்திரம் காவல் நிலையத்துக்கு வந்தனர். மகனைப் பார்த்த பெற்றோர் கதறி அழுதனர். இதையடுத்து, இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், மாணவனை பெற்றோருடன் வீட்டுக்கு அனுப்பிவைத்தார்.

மாயம்
மாயம்

இன்ஸ்பெக்டர் ரவிக்குமாரிடம் பேசினோம். ``மாணவன் கிடைத்ததில், அவரின் அம்மா மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் என அனைவருக்கும் சந்தோஷம்.

காவல் நிலையத்துக்கு வந்த மாணவனின் அப்பாவிடம் விசாரித்தேன். தன்னுடைய பெயர் பாபு என்றும், தனியார் கம்பெனியில் பணியாற்றுவதாகவும் கூறினார். அவருடைய ஒரே மகன் ஸ்ரீராம், சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்துவருகிறான். சமீபத்தில் நடந்த தேர்வில் ஸ்ரீராம், ஒன் டிஜிட்டில் மார்க் பெற்றதால் அவனைத் திட்டியிருக்கிறார். இதனால் மனவேதனையடைந்து, பள்ளி முடிந்ததும் மாலை 3.30 மணியளவில் வீட்டுக்குச் செல்லாமல் நடந்தே தி.நகருக்குச் சென்றுவிட்டார்.

மாமனார், கொழுந்தன் கொலை; கணவர் மாயம்!- மாமியார் கடத்தலால் சென்னைப் போலீஸை மிரளவைத்த மேனகா

பிறகு அந்த மாணவனுக்கு வீட்டுக்குச் செல்ல வழி தெரியவில்லை. அப்போதுதான் ஆயுதப்படை காவலர்கள் கயல்விழியும் காமாட்சியும் மாணவனைப் பார்த்துள்ளனர். அவர்கள் இருவரும் மாணவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கவும் உதவி செய்துள்ளனர். ஓய்வு நேரத்திலும் தங்களின் கடமையை அவர்கள் இருவரும் செய்துள்ளனர். அதே நேரத்தில் மதிப்பெண்கள் குறைவாக பெற்றதற்காக மகனை திட்டாதீர்கள் என்று பாபுவுக்கு அறிவுரை கூறினேன்" என்றார்.

4 மணி நேரமாக மகனைக் காணாமல் பரிதவித்த ஸ்ரீராமின் அம்மாவும் அப்பாவும் காவல் நிலையத்தில் மகனைப் பார்த்ததும் கட்டியணைத்து முத்தமிட்டனர். மகனை மீட்டுக் கொடுத்த ஆயுதப்படை காவலர்கள் காமாட்சி, கயல்விழி ஆகியோருக்கும் ஸ்ரீராமின் பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.