Published:Updated:

நான்கு ஆண்டுகள்.. 10 பேர் - கோவை சிறுமிக்கு நேர்ந்த துயரம்!

Representational Image
Representational Image

கோவையில் பள்ளி மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சிறுவர்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நேரத்தில், கோவையில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கோவையைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி (15வயது) சில நாள்களாக வயிற்று வலியால் துடித்துள்ளார். இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

கோவை அரசு மருத்துவமனை
கோவை அரசு மருத்துவமனை

அங்கு அவருக்குப் பரிசோதனை மேற்கொண்டபோதுதான், பெற்றோரின் தலையில் இடி விழுந்தது போல அந்தத் தகவல் கிடைத்தது. பரிசோதனையில் சிறுமி இரண்டு மாதம் கர்ப்பமாக இருக்கும் அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது. சிறுமிக்குக் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், திடீரென்று சிறுமியும் அவரது பெற்றோரும் மருத்துவமனையிலிருந்து மாயமாகினர். அதிர்ச்சியடைந்த மருத்துவமனை நிர்வாகத்தினர், இதுகுறித்து போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீஸார் ஒருவழியாக சிறுமியைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து, போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

Representational Image
Representational Image

விசாரணையில், தன்னைக் காதலிப்பதாகக் கூறி நட்புடன் பழகி 17 வயதுச் சிறுவர்கள் உட்பட10 பேர் தனித்தனியாக, வலுக்கட்டாயமாகப் பாலியல் வன்கொடுமை செய்ததாக அதிர்ச்சித் தகவலைக் கூறியிருக்கிறார். அதனால்தான், சிறுமி கர்ப்பமடைந்துள்ளார் என்பது தெரியவந்தது.

இதையடுத்து ஆய்வாளர் அமுதா தலைமையிலான போலீஸார் மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்தவர்களைத் தேடி வந்தனர். இந்நிலையில், கோவையைச் சேர்ந்த கார்த்திக் (23), தனசேகர் (24), சந்தோஷ் (19) மற்றும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் சிறுவர்கள் 4 பேர் என மொத்தம் 8 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சிறுவர்கள் நான்கு பேர் சீர்திருத்த பள்ளியிலும் மற்ற நான்கு பேர் கோவை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

கைது
கைது

இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் இரண்டு பேரை போலீஸார் தேடி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில், இந்தக் கும்பல் 2016-ம் ஆண்டிலிருந்தே சிறுமியைத் தொடர்ச்சியாகப் பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு