Election bannerElection banner
Published:Updated:

நீலகிரி: `மாயமான 8 வயது சிறுமி; உறவினரிடம் விசாரணை!’ - 3-வது நாளாகத் தொடரும் தேடுதல் பணி

தேடுதல் பணி
தேடுதல் பணி

8 வயது சிறுமி மாயமான விவகாரத்தில், சிறுமியின் உறவினரான வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரிடம் விசாரணை மேற்கொண்டுவருகிறோம்.

நீலகிரி மாவட்டம் குன்னூர், தூதூர்மட்டம் பகுதியிலிருக்கிறது கிரேக்மோர் தனியார் தேயிலைத் தோட்டம். இந்தத் தோட்டத்தில் தொழிலாளர்களாக வட மாநிலத்தைச் சேர்ந்த லட்சுமணன், சுமன் குமாரி தம்பதியர் வேலை செய்துவருகின்றனர்.

இதே தேயிலைத் தோட்டத்திலுள்ள தொழிலாளர் குடியிருப்பில் வசித்துவரும் இவர்களுக்கு, பிரீத்தி குமாரி என்ற 8 வயது மகள் இருக்கிறார்.

சிறுமி
சிறுமி

கடந்த 21-ம் தேதி வீட்டின் முன்புறம் விளையாடிக்கொண்டிருந்த பிரீத்தி குமாரியைக் காணவில்லை. பதறிய பெற்றோர், அருகிலுள்ள கொலக்கொம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்டு, தேடுதல் பணியைத் தொடங்கினர் போலீஸார்.

சிறுமியைத் தேடும் பணியில் 10 தீயணைப்பு வீரர்கள், ஏழு வனத்துறையினர், 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபட்டு கடந்த மூன்று நாள்களாக தேயிலைத் தோட்டங்களில் தேடிவருகின்றனர். சிறுமியை வனவிங்கு தாக்கியிருக்கலாம் என்ற கோணத்தில் தேடுதலைத் தொடங்கினர்.

தேடும் பணியில்...
தேடும் பணியில்...

ஆனால் சிறுமியின் சித்தப்பாவிடம் விசாரணை மேற்கொண்டதில், முன்னுக்குப் பின் முரணாக அவர் பதில் அளிக்க, அவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இது குறித்து காவல்துறையினர் தரப்பில், ``8 வயது சிறுமி மாயமான விவகாரத்தில், சிறுமியின் உறவினரான வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரிடம் விசாரணை மேற்கொண்டுவருகிறோம். அவர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை அளித்து வருகிறார். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகிறோம்" என்றனர்.

தேடுதல் பணி
தேடுதல் பணி

சிறுமி குறித்து, பெண் தோட்டத் தொழிலாளி ஒருவரிடம் நாம் பேசினோம். ``காணாமல்போன ஜார்க்கண்ட் பாப்பா, பக்கத்து ஸ்கூல்ல நாலாவது வகுப்பு படிக்கிறா. இவங்க அம்மா ,அப்பா வேலைக்கு போனதும் குழந்தைகளோட வீட்டு முன்னாடி விளையாடுவா. அப்படித்தான் அன்னிக்கு வெளையாடிக்கிட்டு இருந்தா. திடீர்னு காணலை. எல்லா இடத்துலயும் தேடிப் பார்த்துட்டோம் கிடைக்கலை. போலீஸும் மூணு நாளா தேடிக்கிட்டு இருக்காங்க. இதுவரை இப்படி ஒரு சம்பவம் இங்கே நடந்ததில்லை. பயமா இருக்கு" என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு