Published:Updated:

`80 லட்ச ரூபாய், 30 சவரன் நகை!' - - நெல்லை மூதாட்டி கொலையில் 3 மாதங்களுக்குப் பின் சிக்கிய மருமகன்

கொலையான வெள்ளையம்மாள்
கொலையான வெள்ளையம்மாள்

ஏராளமான சொத்துகளுக்கு சொந்தக்காரராக இருந்த 80 வயது மூதாட்டி வெள்ளையம்மாளை சொத்துக்காக மருமகன் மற்றும் பேரன் ஆகியோர் உணவில் விஷம் கலந்துகொடுத்துக் கொன்றிருக்கிறார்கள்.

நெல்லை பெருமாள்புரம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட ராஜகோபாலபுரம் மல்லிகா காலனியில் வசித்து வந்தவர் வெள்ளையம்மாள். 80 வயதான அவர், தன் கணவர் வேலாயுதத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இளம் வயதிலேயே பிரிந்துவிட்டார். 

வெள்ளையம்மாள் வசித்த வீடு
வெள்ளையம்மாள் வசித்த வீடு

வெள்ளையம்மாளுக்கு ஐந்து சகோதரிகள் உள்ளனர். அதனால் அவர்களுடன் வசித்துவந்தார். குடும்பச் சொத்தில் வெள்ளையம்மாளுக்கு இரு பங்குகள் கிடைத்ததால், ஏராளமான சொத்து மற்றும் நகைகளுடன் இருந்துவந்தார். அவரை சகோதரியின் மருமகன் தேவராஜ் என்பவர் பராமரித்துவந்தார்.

மருமகன் தேவராஜ் , வெள்ளையம்மாளிடமிருந்து வீடு கட்டுவதற்காக 60 லட்சம் ரூபாய் வாங்கியிருக்கிறார். வெள்ளையம்மாளின் 30 சவரன் நகைகளையும் வாங்கியுள்ளார். அத்துடன், தன் தம்பி கனகராஜ் என்பவருக்கு 20 லட்சம் ரூபாய்  கடனாகப் பெற்றுக்கொடுத்துள்ளார். ஆனால், அந்தப் பணம் எதையும் அவர்கள் திருப்பிக் கொடுக்கவில்லை. 

விஷம் கொடுத்து கொலை நடந்த வீடு
விஷம் கொடுத்து கொலை நடந்த வீடு

முதுமையில் வாடிய வெள்ளையம்மாளை தேவராஜ் குடும்பத்தினர் சரிவர கவனிக்கவில்லை எனத் தெரிகிறது. அதனால் அதிருப்தியடைந்த அவர், தன் சகோதரிகளின் பேரக் குழந்தைகளிடம் முறையிட்டுள்ளார். அதனால் அருள்மணி என்ற பேரன், தேவராஜிடம் சென்று `பாட்டியிடம் வாங்கிய பணத்தையும் கொடுக்கவில்லை, அவரை சரிவர கவனிக்காமல் இருப்பதும் சரிதானா...’ எனக் கண்டித்துள்ளார்.

அதனால் அதிருப்தியடைந்த தேவராஜ், தன் மகன் ஜான் பிரகாஷிடம் ஆலோசனை நடத்தியுள்ளார். அடுத்த இரு தினங்களில் வெள்ளையம்மாள் மர்மமான முறையில் இறந்துவிட்டார். ஆனால், அவரது சாவில் மர்மம் இருப்பதாகப் பேரன் அருள்மணி மற்றும் உறவினர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர். அதனால் போலீஸார் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்கள்.

பெருமாள் புரம் போலீஸ் ஸ்டேஷன்
பெருமாள் புரம் போலீஸ் ஸ்டேஷன்

உடற்கூறு ஆய்வு முடிவுகள் வெளிவந்த நிலையில், வெள்ளையம்மாள் விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டது தெரியவந்தது. அதனால், மருமகன் தேவராஜை அழைத்து விசாரணை நடத்தியபோது, தானும் தன் மகன் ஜான்பிரகாஷ் என்பவரும் சேர்ந்து வெள்ளையம்மாளுக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்ததை ஒப்புக்கொண்டார்.

தேவராஜை பெருமாள்புரம் காவல்துறையினர் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்கள். வெளிநாட்டில் வேலைக்குச் சென்றுள்ள அவரது மகன் ஜான்பிரகாஷை சொந்த ஊருக்கு வருமாறு போலீஸார் அழைப்பு விடுத்துள்ளனர்.

கைதான தேவராஜ்
கைதான தேவராஜ்

சொத்துக்காக 80 வயது மூதாட்டியை உறவினர்களே உணவில் விஷம் கலந்துகொடுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூன்று மாதங்களுக்குப் பின்னர் உண்மைக் குற்றவாளிகளைக் கைதுசெய்த நெல்லை மாநகர காவல்துறையினருக்கு பாராட்டுகள் குவிகின்றன.

அடுத்த கட்டுரைக்கு