Published:Updated:

'அவ்ளோ அக்கறைன்னா காசு கொடுங்க!' சீண்டிய ஷோபா டேக்கு போலீஸின் பதிலடி

'அவ்ளோ அக்கறைன்னா காசு கொடுங்க!' சீண்டிய ஷோபா டேக்கு போலீஸின் பதிலடி
'அவ்ளோ அக்கறைன்னா காசு கொடுங்க!' சீண்டிய ஷோபா டேக்கு போலீஸின் பதிலடி

'அவ்ளோ அக்கறைன்னா காசு கொடுங்க!' சீண்டிய ஷோபா டேக்கு போலீஸின் பதிலடி

தன் புகைப்படத்தை வெளியிட்டு கேலி செய்த பிரபல எழுத்தாளர் ஷேபா டே-க்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் தவுலத்ராம் ஜோகாவத் பதில் அளித்துள்ளார். 

பிரபல எழுத்ததாளர் ஷோபா டே, அடிக்கடி ட்விட்டரில் சர்ச்சையான கருத்துகளைப் பதிவு செய்து விமர்சனத்துக்குள்ளாவார். எத்தனைமுறை சர்ச்சையில் சிக்கினாலும் அவர் அடங்கியதும் இல்லை. ரியோ ஒலிம்பிக் போட்டியின்போது, ‘‘இந்திய வீரர்கள் பதக்கம் வெல்லவா போகிறார்கள்? ரியோ டீ ஜெனீரோவை சுற்றிப் பார்க்கத்தானே செல்கிறார்கள். அவர்களுக்கு செலவழிப்பது வீண்...'' என ‘ட்வீட்’ செய்திருந்தார்.

வீரர்கள் மட்டுமல்லாது நாடு முழுவதும் இருந்து விளையாட்டு ஆர்வலர்கள், ஷோபா டே கருத்துக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். ஆனாலும், அவர் தன் நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்குவதாக இல்லை. இதுவரை பொதுவான பிரச்னைகள் குறித்து கருத்து தெரிவித்து வந்த அவர், தற்போது தனிநபர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரின் புகைப்படத்தை (அதுவும் தவறான படம்) வெளியிட்டு, அதன் கீழே அவர் எழுதியிருந்த வாசகம், மீண்டும் விவாதப்பொருளாகி உள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் நீமுக் மாவட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருப்பவர் தவுலத்ராம் ஜோகாவாத். இவரது உடல் எடை180 கிலோ. இதனாலேயே, அடிக்கடி இவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் சுற்றுவதைப் பார்த்திருக்க முடியும். கடந்த 21-ம் தேதி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, ‘heavy police bandobast in Mumbai today’ என்று கேலி செய்யும் விதத்தில் ஷோபா டே ஒரு ட்விட் பதிவிட்டிருந்தார். 

ஷோபா டே-வின் பதிவைப் பார்த்த பலரும் அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ‘தனிமனிதர் ஒருவரை அவமதிக்கும் விதத்தில், பிரபல எழுத்தாளர் செயல்படுவது அழகல்ல' என்று கண்டனம் எழுப்பினர். இந்தப் பதிவை பார்த்த மும்பை போலீஸ், ‘இவர் மும்பை காவல்துறையை சேர்ந்தவர் அல்ல. ஷோபா டே போன்றவர்கள் தவறானத் தகவல்களை மக்களிடம் பரப்ப வேண்டாம். உங்களைப் போன்ற பொறுப்பான குடிமக்களிடம் இருந்து பொறுப்புள்ள செயல்பாடுகளை எதிர்பார்க்க்கிறோம்’ என பதிலடி கொடுத்தது. 

இந்த நிலையில், ஷோப டே அவமதித்த போலீஸ் இன்ஸ்பெக்டர் தவுலத்ராம் ஜோகாவாத், ஒரு ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ‘‘நான் அதிகம் சாப்பிடுவதால் குண்டாகவில்லை. இன்சுலின் சுரப்பதில் பிரச்னை இருக்கிறது. கடந்த 1993-ம் ஆண்டு பித்தப்பை அறுவைசிகிச்சை நடந்தது. அதன்பின்னரே உடல் எடை அதிகரிக்க ஆரம்பித்தது'' எனத் தெரிவித்துள்ளார்.

'ஷோபா டேவின்  ட்வீட் உங்களை மனதளவில் பாதிக்கவில்லையா’, எனக் கேட்டபோது, ‘‘நான் குண்டாக இருப்பது குறித்து மேடம் வருத்தப்பட்டால் எனக்கு மேற்கொண்டு சிகிச்சையளிக்க பணம் தரட்டும். நான் சிகிச்சை எடுத்துக்கொண்டு ஒல்லியாகி விடுகிறேன். யாருக்குத்தான் குண்டாக இருப்பது பிடிக்கும்'' என பதில் கேள்வி எழுப்பினார். அத்துடன் தனது பழைய புகைப்படம் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். 

நீமுக் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் மனோஜ் குமார், ‘‘ஜோகாவத் உடல் எடை  வேண்டுமானால் அப்படி இருக்கலாம். ஆனால் பணியில் அவர் சின்சியர் ஆபீஸர் . ஜோகாவத்தின் விசாரணை முறைக்கு நீதிமன்றங்கள் பல முறை பாராட்டு தெரிவித்துள்ளன'' என்றார்.

பொதுவாகவே குண்டாக இருப்பவர்களுக்கு உடல் ரீதியாக பல பிரச்னைகள் இருக்கும் என்பது சாதாரண மக்களுக்குக் கூட தெரியும். ஷோபா டேக்கும் இது நிச்சயம் தெரிந்திருக்கும். அப்படி இருக்க, தனிமனிதர்களை உருவக்கேலி செய்து காயப்படுத்துவது எந்தவிதமான மனநிலையோ? 

-எம்.குமரேசன்

அடுத்த கட்டுரைக்கு