Published:Updated:

மாத்திரைகளைப் பிடுங்கிச் சாப்பிட்ட மகன்?- தனிமையில் தவறான முடிவெடுத்த சென்னை முதியவர்

சென்னையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் மனநலம் பாதிக்கப்பட்ட மகனால் 82 வயதான ஓய்வு பெற்ற அரசு ஊழியர் தினமும் நரக வேதனை அனுபவித்துவந்துள்ளார்.

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்  வீடு
ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீடு

சென்னை ஆழ்வார்ப்பேட்டை திரிவேணி அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருபவர் விஸ்வநாதன் (82). சென்னையில் உள்ள மத்திய அரசு அலுவலகமான சாஸ்திரிபவனில் டைப்பிஸ்ட்டாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரின் மகன் வெங்கட்ராமன் (44). Schizophrenia என்ற மனநோயால் பாதிக்கப்பட்டவர். விஸ்வநாதனும் அவரின் மனைவியும் மகனைக் கவனித்து வந்தனர்.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் விஸ்வநாதனின் மனைவி இறந்துவிட்டார். அதன்பிறகு மகனை விஸ்வநாதன் மட்டும் கவனித்துவந்தார். பணியிலிருந்து ஓய்வு பெற்ற விஸ்வநாதனுக்கு மகனை கவனிப்பதே முழுநேர வேலையானது. இருப்பினும் மகனுக்காகவே அவர் உயிர் வாழ்ந்துவந்தார். முதுமையையும் பொருட்படுத்தாமல் மகன் மீதான பாசத்தால் தன்னால் முடிந்தளவு வெங்கட்ராமனை நன்றாக கவனித்தார் விஸ்வநாதன்.

மாத்திரை - மாதிரி புகைப்படம்
மாத்திரை - மாதிரி புகைப்படம்

தீபாவளியையொட்டி திரிவேணி அடுக்குமாடிக் குடியிருப்பு மகிழ்ச்சியில் திளைத்துக்கொண்டிருந்தது. ஆனால், வீட்டுக்குள் விஸ்வநாதனும் வெங்கட்ராமனும் முடங்கிக் கிடந்தனர். தீபாவளிக்குப்பிறகு விஸ்வநாதன் வீடு திறக்கப்படவில்லை. கடந்த 31ம் தேதி வீட்டுக்குள்ளிருந்து தூர்நாற்றம் வீசியது. இதனால், அந்தக் குடியிருப்பில் உள்ளவர்கள் தேனாம்பேட்டை காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீஸார் அங்கு சென்றனர். பூட்டை உடைத்து உள்ளே சென்ற போலீஸார், அங்கு கண்ட காட்சிகளைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்தனர்.

படுக்கையில் அழுகிய நிலையில் வெங்கட்ராமனின் சடலம் கிடந்தது. அதன்அருகில் மயங்கிய நிலையில் விஸ்வநாதன் கிடந்தார். விஸ்வநாதனை மீட்ட போலீஸார் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். வெங்கட்ராமனின் சடலத்தை மீட்டுப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து நம்மிடம் பேசிய போலீஸ் உயரதிகாரி ஒருவர், ``விஸ்வநாதன், மயக்கத்தில் இருப்பதால் என்ன நடந்தது என்று தெரியவில்லை. மயக்கம் தெளிந்தபிறகுதான் வெங்கட்ராமனின் மரணம் குறித்து அவரிடம் விசாரிக்க முடிவு செய்துள்ளோம். விஸ்வநாதன் குடியிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ளவர்களிடம் விசாரித்தபோது விஸ்வநாதனின் மனைவிக்கு அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்படும். அந்தச் சமயத்தில் அவர் நார்மலாக இருக்க மாட்டார். அதிகளவில் சத்தம் போடுவார். அவரையும் விஸ்வநாதன் கவனித்துவந்தார். 15 ஆண்டுகளுக்கு முன் விஸ்வநாதனின் மனைவி உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார்.

வெங்கட்ராமன், 9வது வகுப்பு வரை படித்துள்ளார். மனநோயால் பாதிக்கப்பட்ட அவரை விஸ்வநாதன் விட்டுக்குள் வைத்து கவனித்துவந்துள்ளார். மனைவியும் மகனும் நோயால் பாதிக்கப்பட்டதால் விஸ்வநாதன் தன் வாழ்க்கை முழுதும் நிம்மதி இழந்தார். வெங்கட்ராமன், நார்மலாக இருக்க தினமும் மாத்திரைகளை விஸ்வநாதன் கொடுப்பார். அதைச் சாப்பிடவில்லையெனில் வெங்கட்ராமன், தன்னை மறந்து செயல்படுவார். அந்த மாத்திரைகளை அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டால் வெங்கட்ராமன் மயங்கியும் விடுவார். இதனால் குறிப்பிட்ட அளவு மாத்திரைகளை மட்டுமே வெங்கட்ராமனுக்கு விஸ்வநாதன் கொடுப்பார். அதிக மாத்திரைகள் வேண்டும் என விஸ்வநாதனிடம் வெங்கட்ராமன் அடம் பிடிப்பார். ஆனால் விஸ்வநாதன், மகனின் நலன்கருதி மாத்திரைகளைக் கொடுக்கமாட்டார். அப்போது, மாத்திரைகளைக் கொடுக்காத விஸ்வநாதனை அடித்து உதைப்பதை வழக்கமாக வைத்திருந்துள்ளார் வெங்கட்ராமன். மகனிடம் அடிவாங்கினாலும் வெங்கட்ராமனின் உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு அதிக மாத்திரைகளை விஸ்வநாதன் கொடுக்க மாட்டார் என்று கூறியுள்ளனர்.

 மரணம்
மரணம்

சம்பவத்தன்று வெங்கட்ராமன் அளவுக்கு அதிகமான மாத்திரைகளைச் சாப்பிட்டிருக்க வாய்ப்புள்ளது. அதனால்தான் அவர் இறந்துவிட்டார். மகன் மயங்கியதும் விஸ்வநாதனும் அதே மாத்திரைகளைச் சாப்பிட்டுத் தற்கொலை செய்ய முயற்சி செய்திருக்கலாம். அவர் குறைந்த எண்ணிக்கையில் மாத்திரைகளைச் சாப்பிட்டதால் அவரின் உயிர் பிரியவில்லை. அவர் மாத்திரைகளைச் சாப்பிடுவதற்கு முன் கடிதம் ஒன்றை ஆங்கிலத்தில் எழுதி வைத்துள்ளார். அதில், `என் சாவுக்கு யாரும் காரணமில்லை. மகனை என்னால் முடிந்தளவு கவனித்தேன். மனவேதனையால் இந்த முடிவை எடுக்கிறேன்' என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விஸ்வநாதன் ஆபத்தான நிலையில் இருக்கிறார். அவருக்கு உறவினர்கள் என யாருமில்லை. இதனால் வெங்கட்ராமனின் சடலத்தை யாரிடம் ஒப்படைப்பது என ஆலோசித்துவருகிறோம்" என்றார்.

ஷூட்டிங் களைப்பு... மயக்கம்... பாத்ரூமில் வழுக்கி விழுந்தார்!- நகைச்சுவை நடிகர் திடீர் மரணம்

இந்தத் தகவல் தெரிந்து விஸ்வநாதனின் உறவினரான சுப்பிரமணியன் என்பவர் மும்பையிலிருந்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தைத் தொடர்பு கொண்டுள்ளார். அவர், சென்னைக்கு வருவதாகக் கூறியுள்ளார். இதனால் அவரிடம் வெங்கட்ராமனின் சடலத்தை ஒப்படைக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர். விஸ்வநாதன் குடியிருந்த வீடு, அவருக்குச் சொந்தமானது. ஆனால், அவர் வாங்கிய பென்சன் தொகை முழுவதையும் மருத்துவச் செலவுக்குப் பயன்படுத்திவந்துள்ளார். மேலும், அவர் செல்போன்கூட பயன்படுத்தவில்லை. அவரின் வீடு முழுவதும் வீசிய தூர்நாற்றம் மற்றும் அங்கு நிலவிய சூழலைப் பார்க்கும் போது விஸ்வநாதன் எப்படி வாழ்ந்திருப்பார் என்பதை போலீஸாரால் ஒருஅளவு யூகிக்க முடிந்தது. தினமும் மகனின் டார்ச்சரால் விஸ்வநாதன், நரக வேதனையை அனுபவித்து வந்ததாக அடுக்குமாடியில் குடியிருப்பவர்கள் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

ஓய்வு பெற்ற அரசு ஊழியரின் வீடு
ஓய்வு பெற்ற அரசு ஊழியரின் வீடு

விஸ்வநாதன் வீட்டுக்குள் சிதறிக்கிடந்த சில மாத்திரைகளை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். இந்த மாத்திரைகளை அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டால் மரணம் அல்லது மயக்கம் ஏற்படும் என்று டாக்டர்கள் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

இந்த மாத்திரைகளைத்தான் விஸ்வநாதனும் வெங்கட்ராமனும் சாப்பிட்டுள்ளனர். மகனைக் கட்டுப்படுத்த மாத்திரைகளைக் கொடுத்த விஸ்வநாதன், அதே மாத்திரைகளைச் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த வழக்கை பொறுத்தவரை வெங்கட்ராமனுக்கு விஸ்வநாதன் மாத்திரைகளைக் கொடுத்தாரா அல்லது அவரே விஸ்வநாதனிடமிருந்து பிடுங்கிச் சாப்பிட்டு மரணம் அடைந்தாரா என்ற கேள்விக்கு மட்டும் போலீஸாருக்கு இன்னமும் விடைகிடைக்கவில்லை.