Published:Updated:

உயர் நீதிமன்ற விழாவுக்கு முதல்வர் போகாதது ஏன்?

திகுதிகு நிமிடங்கள்

பிரீமியம் ஸ்டோரி
##~##

நீதித் துறைக்கும் தமிழக அரசுக்கும் இடையே உரசல்கள் சகஜம்தான். கடந்த தி.மு.க. ஆட்சியில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த கலவரத்துக்குப் பிறகு, அரசியல் சதுரங்கமாகிவிட்டது சென்னை உயர் நீதிமன்றம்!

 உயர் நீதிமன்றத்தில் மாற்று​முறைத் தீர்வு மையக் கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த 16-ம் தேதி நடைபெற்றது. 'சொத்துக் குவிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட முதல்வர் ஜெயலலிதா, இந்த விழாவில் கலந்துகொள்ளக் கூடாது!’ என்று  தி.மு.க. வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்த... பதிலுக்கு, அ.தி.மு.க. வழக்கறிஞர்களும் மல்லுக்கு நின்றார்கள். இதனால், 'ஜெயலலிதா வருவாரா... இல்லையா?’ என்ற பரபரப்புடனே விழா தொடங்கியது. கொஞ்ச நேரத்தில் ஜெயலலிதா விழாவைப் புறக்கணித்தது உறுதியாகத் தெரிய வரவே, சலசலப்பு இல்லாமல் நடந்து முடிந்தது நிகழ்ச்சி.

''முதல்வர் வருகைக்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையில், அவர் ஏன் வரவில்லை?''

உயர் நீதிமன்ற விழாவுக்கு முதல்வர் போகாதது ஏன்?

என்று சீனியர் வழக்கறிஞர்கள் சிலரிடம் கேட்டோம். ''உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளைக்கொண்ட சில கமிட்டிகள் இயங்கி வருகின்றன. அதில் முக்கியமானது, நிர்வாக கமிட்டி. நீதிமன்ற நிர்வாகம், கொள்கை முடிவுகள் போன்றவற்றை இதுதான் முடிவு செய்யும். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு அடுத்த இடத்தில் இருக்கும் நீதிபதிதான், இந்த கமிட்டிக்குத் தலைவர். இப்போது அல்டமாஸ் கபீர் தலைவராக இருக்கிறார். அவருக்குக் கீழே உறுப்பினராக இருப்பவர் தலைமை நீதிபதி கபாடியா. அடுத்த இடத்தில் இருப்பவர் நீதிபதி ரவீந்திரன். அல்டமாஸ் கபீர்தான், இவர்கள் எடுக்கும் முடிவைத் தீர்மானிப்பார்.

இதைப்போலவே, ஒவ்வொரு உயர் நீதிமன்றத்திலும் கமிட்டிகள் இருக்கின்றன. சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பாலுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் எலிப்பி தர்மா ராவ்தான் கமிட்டியின் தலைவர். அவருக்கு கீழே இக்பாலும், அடுத்து முருகேசனும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

உயர் நீதிமன்ற நிகழ்ச்சியில் முதல்வர் கலந்து கொள்ளப்போவதாக அறிவிப்பு வந்ததுமே, மத்திய அரசின் வழக்குகளுக்கு ஆஜராகும் வக்கீல் ஒருவர், உச்ச நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற கமிட்டிகளுக்கு ஒரு கடிதம் எழுதினார். 'முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு நடைபெறும் பெங்களூரு தனி நீதிமன்றத்தை உருவாக்கியது உச்ச நீதிமன்றத்தின் நிர்வாக கமிட்டிதான். ஜெயலலிதா மீது அந்த வழக்கு நடந்துகொண்டு இருக்கும் சூழ்நிலையில், அவர் விழாவில் கலந்துகொண்டால், நிர்வாக கமிட்டியின் உறுப்பினர்களான நீதிபதிகள் எப்படி மேடையில் அமர முடியும்? அதோடு, சமச்சீர்க் கல்வி தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் சென்னை நீதிமன்றத்தில் நடக்கிறது!’ என்று கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். ஆனால், அதற்குள் ஜெயலலிதாவிடம் தேதி வாங்கி அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டுவிட்டன. 'தமிழக அரசு நிதியுதவி செய்து இருப்பதால்தான், ஜெயலலிதா அழைக்கப்பட்டார்’ என்று உயர் நீதிமன்றம் விளக்கம் கொடுத்தது. பிரச்னை பெரிதாவதை விரும்பாததால் முதல் நாளே, 'முதல்வர் விழாவுக்கு வராமல் இருப்பது நல்லது’ என்று கேட்டுக்கொண்டார்கள். ஆனால், முதல்வரிடம் இருந்து எந்த ரியாக்ஷனும் இல்லை.

உயர் நீதிமன்ற விழாவுக்கு முதல்வர் போகாதது ஏன்?

கார்டனில் இருந்து உயர் நீதிமன்றம் வரை அவரை வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. அதே சமயம், வழக்கறிஞர்கள் எதிர்ப்பு காட்டிவிடக் கூடாது என்பதற்காக, நீதிமன்றத்தில் முதல்வரின் வருகைக்காகப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தது காவல் துறை. மேடையில் இக்பாலுக்கு அடுத்த இடத்தில் ஜெயலலிதாவுக்கு ஸீட் போட்டு இருந்தார்கள்.

உயர் நீதிமன்ற விழாவுக்கு முதல்வர் போகாதது ஏன்?

நீதிபதிகள் அல்டமாஸ் கபீர், சதாசிவம், இக்பால், எலிப்பி தர்மா ராவ், ஜோதிமணி, முருகேசன், நாகப்பன் ஆகியோரும் நீதிமன்ற வளாகத்தில் ஓர் அறையில் அமர்ந்து இருந்தனர். ஒருவேளை, ஜெயலலிதா விழாவில் கலந்துகொண்டால், 'மேடை ஏற மாட்டோம்’ என்று அவர்கள் முடிவு எடுத்து இருந்தார்கள். ஆனால், கடைசி நேரத்தில் ஜெயலலிதா வரவில்லை. அதனால், எந்தப் பிரச்னையும் நடக்கவில்லை...'' என்றார்கள்.

ஜெயலலிதா வர மாட்டார் என்பது, அமைச்சரான செந்தமிழனுக்குக்கூட தெரியாது. அ.தி.மு.க. வழக்கறிஞர்களிடம் பேசியபோது, ''தி.மு.க. ஆட்சியில் உயர் நீதிமன்றத்தில் மோதல் வெடித்த பிறகு, சில மாதங்களிலேயே அம்பேத்கர் சிலை திறப்பு விழா அதே வளாகத்தில் நடைபெற்றது. இதில் 'கருணாநிதி கலந்துகொள்ளக் கூடாது’ என்று வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினார்கள். அதையும் மீறி கருணாநிதி வர, அவர் மற்றும் நீதிபதிகள் முன்பே வக்கீல்கள் தாக்கப்பட்டார்கள். அப்படிப்பட்ட விரும்பத்தகாத செயல்கள் நடந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் அம்மா வரவில்லை!'' என்கிறார்கள்.

என்ன காரணம் சொல்லப்பட்டாலும் ஜெயல​லிதாவின் இமேஜுக்கு ஒரு திருஷ்டிப் பொட்டு தான்!

- எம்.பரக்கத் அலி, படங்கள்: சு.குமரேசன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு