Published:Updated:

ஜெயேந்திரரை சூழ்ந்த கெரோ!

சாப்பாட்டுக்கே வழி இல்லாம கஷ்டப்படுறோம்!

பிரீமியம் ஸ்டோரி
##~##

ட்சி மாற்றம் ஏற்படும்போது, அரசு,அதிகார மட்டங் களில் மாற்றம் ஏற்படு வதும் சகஜம்தான். அம்மா ஆட்சியில் ஆன்மிக வட்டாரமும் அதற்கு விதிவிலக்கு அல்ல! 

ஜெயலலிதாவின் கடந்த முறை ஆட்சியில் போடப்பட்ட, காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் மேலாளர் சங்கர்ராமன் கொலை வழக்கு, அரசுத் தரப்புச் சாட்சிகளின் தொடர் பல்டியால் சைலன்ட்டாகிக்கிடந்தது. ஆனால் இப்போது, மீண்டும் வேகம் எடுத்துள்ளது. 7 ஆண்டுகள் தொடர்ச்சியான விசாரணைக்குப் பின் தற்போது முடிவுக்கு வர உள்ளது. ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரர், 'தங்களுக்குக் கருணை காட்டுங்கள் என்று போயஸ் கார்டன் கதவைத் தூதுவர்கள் மூலம் தட்டி வருகிறார்கள்!’ என்று சொல்லப்படுகிறது.

இரண்டு நூற்றாண்டுப் பெருமை வாய்ந்த காஞ்சி காமகோடிப் பீடத்துக்கு கடந்த 2004-ம் ஆண்டு முதல் துவங்கியது போதாத காலம்! காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் மேலாளர் சங்கர்ராமன், கடந்த 3.9.2004-ம் தேதி அன்று கோயில் வளாகத்தின் அலுவலக அறையிலேயே படுகொலை செய்யப்பட்டார். அவரைக் கொன்றது யார் என்று போலீஸார் தேட... ஆறுமுகம், தில் பாண்டியன், சதீஷ், தேவராஜ், அருண் ஆகிய ரவுடிகள், 'சங்கர்ராமனை நாங்கள்தான் கொன்றோம்!’ என்று, கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

ஜெயேந்திரரை சூழ்ந்த கெரோ!

போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில், 'அவர்கள் போலிக் குற்றவாளிகள்’ என்று தெரிய வந்தது.

'கூலிப் படைத் தலைவன் கதிரவன் தலைமை யில், சின்னா, அம்பிகாபதி, நண்டு பாஸ்கர், குமார், ஆந்திரா குமார், அணில் குமார், மீனாட்சிசுந்தரம் ஆகியோர்தான் கொலை செய்தார்கள்!’ என்று போலீஸார் கண்டுபிடித்தனர். காஞ்சி மடத்துக்கு நெருக்கமான அப்பு என்பவர் மூலமாகத்தான் இந்தக் கூலிப்படை ஏற்பாடு செய்யப்பட்டது என்றும் போலீஸ் சொன்னது. காஞ்சி சங்கரமடத்தின் கான்ட்ராக்டரான ரவி சுப்பிரமணியம் மூலம் கூலிப் படைக்குப் பணம் கொடுக்கப்பட்டதற்கான ஆதாரங்களையும் போலீஸ் வெளியிட்டது.

இதனைத் தொடர்ந்து, ரவி சுப்பிரமணியம் அப்ரூவரானார். 'ஜெயேந்திரர்தான் ஒரு காரியம் முடிக்க, அப்புவிடம் பணம் கொடுக்கச் சொன்னார்’ என்றார் ரவி சுப்பிரமணியம். 2004, நவம்பர் 11-ம் தேதி ஹைதராபாத்தில் ஜெயேந் திரர் கைதானார். ரவி சுப்பிரமணியத்தின் வாக்குமூலப்படி, சங்கர்ராமனைக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டிய விவகாரத்தில், ஜெயேந்திரரை முதல் குற்றவாளியாகவும், உடந்தையாக இருந்த விஜயேந்திரரை இரண்டாவது குற்றவாளியாகவும் சேர்த்தனர். கொலை செய்யக் காரணமான குற்றவாளிகளாக, சுந்தரேச அய்யர், விஜயேந்திரரின் தம்பி ரகு, அப்பு, கூலிப் படைத் தலைவன் கதிரவன் உட்பட 24 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ஜெயேந்திரரை சூழ்ந்த கெரோ!

2005, ஜனவரி 10-ம் தேதி, ஜெயேந்திரர் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார். அதற்கு மறு நாள் 11-ம் தேதி விஜயேந்திரர், சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் 1,823 பக்கம்கொண்ட குற்றப் பத்திரிகை தாக்கல் ஆனது. மொத்தம் 370 பேர் சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டனர். 712 ஆவணங்கள் காஞ்சிபுரம் நீதிமன்றத் தலைமை நீதிபதி உத்தமராஜ் முன்னிலையில் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டன. ஆனால், 'இந்த வழக்கு, தமிழ்நாட்டில் நடந்தால்... தமக்கு நீதி கிடைக்காது’ என்று சங்கராச்சாரியார், சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்ய... அதன்படி, புதுச்சேரி கோர்ட்டுக்கு வழக்கு மாற்றப்பட்டது. அரசின் சிறப்பு வக்கீலாக தேவதாஸ் ஆஜராக... குற்றவாளிகள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் தினகரன், செந்தில்குமார் ஆஜராகின்றனர்.

முக்கிய சாட்சிகளான, சங்கர்ராமனின் மனைவி பத்மா, மகன் ஆனந்த்கணேஷ் சர்மா, மகள் உமா மைத்ரேயி ஆகியோர்கூட தாங்கள் ஏற்கெனவே சொன்னதை மாற்றிச் சொன் னார்கள். 2009-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ல் நடந்த குறுக்கு விசாரணையின்போது பிறழ் சாட்சிகள் ஆனார்கள்!

அப்ரூவர் ரவி சுப்பிரமணியமும் 'எனக்கு கொலை வழக்கு சம்பந்தமாக ஒன்றும் தெரியாது. போலீஸார் மிரட்டியதாலேயே அப்ரூவர் ஆனேன்’ என்று கூறினார். இப்படி, விசாரிக்கப் பட்ட முக்கிய சாட்சிகள் 189 பேரில் 80 பேர் பல்டி அடித்தனர். சங்கர்ராமனின் மனைவி மற்றும் குழந்தைகள் அந்தர்பல்டி அடித்த தாலும், இந்த வழக்கில் ஆரம்பம் முதல் இன்று வரை ஒரே நிலையில் இருந்தவர், வழக்கின் விசாரணை அதிகாரியான ஏ.டி.எஸ்.பி. சக்திவேல் மட்டும்தான்.  

ஜெயேந்திரரை சூழ்ந்த கெரோ!

இந்த வழக்கின் அரசுத் தரப்பு சாட்சியங் களிடம் விசாரணை மற்றும் குறுக்கு விசாரணை இந்த மாதம் 11-ம் தேதியோடு முழுமையாக நிறைவடைந்ததும், '18-ம் தேதி, அனைத்துக் குற்றவாளிகளும் தவறாமல் கோர்ட்டில் ஆஜராக வேண்டும்’ என்று உத்தரவிட்டார் நீதிபதி ராமசாமி.

அன்றைய தினம் மதியம் 2.42-க்குதான் ஜெயேந் திரர் உட்பட்ட 24 குற்றவாளிகளும் கோர்ட்டில் ஆஜரானார்கள். ஜெயேந்திரர், விஜயேந்திரர், சுந்தரேச ஐயர், ரகு ஆகிய முதல் நான்கு குற்றவாளிகளிடம் மட்டுமே நீதிபதி 554 கேள்விகளைக் கேட்டார். ஆனால், எல்லாக் கேள்விகளுக்கும் 'தெரியாது’ என்றே ஜெயேந்திரர் பதில் சொன்னார். சில கேள்விகள் தொடங்கும்போதே சுவற்றில் அடித்த பந்துபோல, 'தெரியாது’ என்ற பதில் வர... அவர் தரப்பு வக்கீல் ஜெயேந்திரர் காதில் ஏதோ கிசுகிசுத்தார். அதன்பிறகு, 'ஆமாவா, இல்லையா’ என்றே புரியாதபடி மையமாகத் தலையை மட்டுமே ஆட்டி வைத்தார், ஜெயேந்திரர்.

இறுதியில், நான்கு பேர் தரப்பிலும், 'இது ஜோடிக்கப்பட்ட வழக்கு’ என்ற ஒரு அஃபிடவிட் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படவே, 'நால்வரைத் தவிர மற்றவர்களிடம்  மறுநாள் விசாரணை தொடரும்’ என்று நீதிபதி அறிவித்தார்.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பலரும் ஜெயேந்திரர் போகும்போது, கூட்டமாகச் சேர்ந்து காரை மறிக்க முயற்சித்தனர். ''எங்களுக்கு சாப்பாட்டுக்கே வழி இல்லாம கஷ்டப்படுறோம். சாமியைப் பார்க்க விடவே மாட்டேங்கிறாங்க. இன்னிக்கு சாமியைப் பார்க்காமப் போகமாட்டோம்...'' என்று அவர்கள் கொதித்தனர். மடத்துத் தரப்பினர் அவர்களிடம், ''இன்று இரவே இதுகுறித்து உங்களுடன் பேசுகிறோம்...'' என்று உறுதியளித்து சமாதானம் செய்தபிறகே, ஜெயேந்திரர் கார், கோர்ட் வாசலைத் தாண்டி வெளியேறியது!  

- டி.கலைச்செல்வன்

படங்கள்: ஜெ.முருகன், எஸ்.தேவராஜன்

ஆதரவற்றுப்போன அப்ரூவர் ரவி சுப்பிரமணியம்!

சங்கர்ராமன் வழக்கில், கடந்த ஏழு ஆண்டுகளில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகள் 24 பேரும் ஜாமீனில் வெளியே வந்துவிட... அப்ரூவர் ஆன ரவி சுப்பிரமணியம் மட்டும் இன்னும் சிறையிலேயே உள்ளார். இதற்குக் காரணமாக அவர் தரப்பில், ''கடந்த ஆட்சிக் காலத்தில் இந்த வழக்கில் அரசு எந்த அக்கறையும் எடுத்துக்கொள்ளாத காரணத்தால், வெளியில் வந்தால் உயிருக்கு ஆபத்து என்கிற அச்சத்தால்தான் சிறையிலேயே இருந்தார்!'' என்கின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு