Published:Updated:

திருமயம்... போலி நகை... அடகு... 8.5 லட்சம்... கில்’லேடி... மறைக்கும் வங்கி ஊழியர்கள்?!

புதுக்கோட்டை அருகே, திருமயம் ஸ்டேட் வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து, ரூ. 8.5 லட்சம் வரையிலும் மோசடி நடைபெற்றுள்ளது. நகை அடகுவைத்த பெண்ணிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமயம் ஸ்டேட் வங்கி
திருமயம் ஸ்டேட் வங்கி

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில், பாரத ஸ்டேட் வங்கிக் கிளை செயல்பட்டுவருகிறது. சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். இந்த நிலையில், நேற்று வங்கி நகை மதிப்பீட்டாளர், நகைகளைச் சரிபார்த்து லாக்கரில் வைக்கும் போது, 41 பவுன் 2 கிராம் அளவிலான (330 கிராம்) நகைகள் கவரிங் நகைகளாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, இதுபற்றி வங்கி மேலாளரிடம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

திருமயம்
திருமயம்

இதையடுத்து, வங்கி நிர்வாகம் தரப்பிலிருந்து திருமயம் போலீஸாருக்கு புகார் சென்றுள்ளது. புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், வங்கி அருகே பூக்கடை நடத்திவரும் மூங்கித்தாம்பட்டியைச் சேர்ந்த ஆரியமாலா என்பவர்தான் அடகு வைத்திருப்பது எனத் தெரியவந்ததால், அவரிடம் போலீஸார் தொடர்ந்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், நள்ளிரவு வரை ஆரியமாலாவிடமும் வங்கி அதிகாரிகளிடமும் விசாரணை நடைபெற்றது. தொடர்ந்து நேற்றும் விசாரணை நடத்தப்பட்டது.

இதுபற்றி போலீஸாரிடம் கேட்டபோது, ''வங்கி சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, குறிப்பிட்ட நேரத்தில் பெண் ஒருவர் அதிக அளவிலான நகைகளை அடகு வைத்துவிட்டு வருவது தெரியவந்தது. உடனே, அந்தப் பெண் பற்றி விசாரித்ததில், அவர் பெயர் ஆரியமாலா என்பதும் வங்கி அருகே நீண்டகாலமாகப் பூக்கடை நடத்திவருகிறார் என்பதும் தெரிய வந்தது. இதுபற்றி அவரிடம் விசாரணை நடத்தினோம். தனக்கு அறிமுகமே இல்லாத நபர் ஒருவர் வந்ததாகவும், அவர் இந்த வங்கியில் தனக்கு வங்கிக் கணக்கு இல்லை என்றும், தன் நகைகளை அடகு வைத்துத் தரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதால் அடகு வைத்ததாகக் கூறினார்.

திருமயம் காவல் நிலையம்
திருமயம் காவல் நிலையம்
கொதிப்பில் வங்கி ஊழியர்கள்! | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 22/10/2019

”அவசரத் தேவை என்று கேட்டதால், நானும் நகைகளை அடகு வைத்துக் கொடுத்தேன். அது போலி நகையா என்பது குறித்து எல்லாம் எனக்குத் தெரியாது. வாங்கி வந்த பணத்தை அந்த மர்ம நபரிடமே கொடுத்துவிட்டேன்'' என்று ஆரியமாலா கூறியுள்ளார். சரியாக அறிமுகம் ஆகாத நிலையில் அந்த நபரை நம்பி ஆரியமாலா எப்படி நகைகளை அடகு வைத்துக் கொடுத்தார் என்பது பற்றி விசாரணை நடத்துகிறோம். நகைகளை அடகு வைக்கும்போது, நகை மதிப்பீட்டாளர் இல்லை. கேஷியர்தான் நகையைப் பெற்றுக்கொண்டு பணத்தைக் கொடுத்துள்ளார்.

ஆரியமாலாவின் அறியாமையையும், வங்கி நகை மதிப்பீட்டாளர் இல்லாத நேரத்தையும் நோட்டமிட்டு, திட்டமிட்டே மர்ம நபர் இந்த மோசடியில் ஈடுபட்டாரா இல்லை, வங்கி அதிகாரிகளுக்கு ஏதேனும் தொடர்பு இருக்குமா என்றும் விசாரிக்கிறோம்" என்றார். இந்தத் தகவல் வெளியில் கசியவே, பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வங்கி முன்பு திரண்டனர்.

திருமயம் டிஎஸ்பி தமிழ்மாறன்
திருமயம் டிஎஸ்பி தமிழ்மாறன்

இதுகுறித்து அந்தப் பகுதி பொதுமக்களிடம் கேட்டபோது, “நகை மதிப்பீட்டாளர் இல்லாமல் ஏன் நகைகளை அடகு வாங்க வேண்டும். நாங்கள் பலரும் இங்கு நகை அடகு வைத்திருக்கிறோம். கடுமையான பாதுகாப்புகளுக்கு மத்தியில் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. மொத்த நகைகளையும் மீண்டும் ஒருமுறை வங்கி நிர்வாகம் மதிப்பீடுசெய்து பார்க்க வேண்டும். வங்கி அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் இதுபோன்ற சம்பவம் நடந்திருக்காது. போலீஸார் முறையாக விசாரிக்க வேண்டும்" என்றனர்.

இதுபற்றி திருமயம் டிஎஸ்பி தமிழ்மாறனிடம் கேட்டபோது, "வங்கி நிர்வாகம் கொடுத்த வாய்மொழித் தகவலின் அடிப்படையில், முதல்கட்டமாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஆனாலும், வங்கி மேலாளரிடமிருந்து போலி நகைகள் குறித்த புகார், எழுத்துபூர்வமாக வரவில்லை. தொடர்ந்து, வங்கி நிர்வாகம் புகார் அளிக்கும் பட்சத்தில், அந்தப் பெண் மற்றும் வங்கி அதிகாரிகளிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்படும்" என்றார்.

வங்கி அதிகாரிகளிடம் பேச முயன்ற போது, ‘அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை’ என்றனர். ‘வாய்மொழியாகப் புகார் அளிக்கப்பட்டு, இத்தனை விஷயங்கள் நடந்திருக்கிறதே’ என்று விசாரித்தபோது, மேலாளர் இல்லாமல் எதுவும் பேச முடியாது என்று முடித்துக்கொண்டனர்.

திருமயம் ஸ்டேட் வங்கி
திருமயம் ஸ்டேட் வங்கி
ஆடம்பர வாழ்க்கை; விலையுயர்ந்த கார்கள்! - கேரள வங்கிகளில் நூதன மோசடி செய்த தாய் - மகன்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, புதுக்கோட்டை பஞ்சாப் நேஷனல் வங்கியில் கோடிக்கணக்கில் வங்கி நகைகள் கொள்ளை போன வழக்கில் உள்ள மர்ம முடிச்சுகள் இன்னும் அவிழ்க்கப்படமால் உள்ளன. இந்த நிலையில்தான், மீண்டும் ஒரு வங்கி மோசடி, வாடிக்கையாளர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.