Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

யார் இந்த சுகேஷ் சந்தர்? வெளிவராத பின்னணி! #VikatanExclusive

சுகேஷ் சந்தர்

டெல்லியில் கைதுசெய்யப்பட்ட சுகேஷ் சந்தர், அரசியல் கட்சியினரின் புரோக்கர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இவர் மீது ஏற்கெனவே பல வழக்குகள் நிலுவையில் இருப்பதாக, போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரண்டு அணிகள் உருவாகின. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சசிகலா அணி வேட்பாளர் டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் அணி வேட்பாளர் மதுசூதனன் ஆகியோர் போட்டியிட்டனர். அப்போது, இரட்டை இலைச் சின்னத்துக்கு இரண்டு அணிகளும் உரிமைகோரியதால், சின்னம் முடக்கப்பட்டது. இதனால், டி.டி.வி.தினகரன் தொப்பி சின்னத்திலும் மதுசூதனன் மின்கம்பம் சின்னத்திலும் போட்டியிட்டனர். வாக்காளர்களுக்கு அதிகளவில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதால், தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டது.

இந்தச் சூழ்நிலையில், சின்னத்தை மீட்க இரண்டு அணிகளும் பல்வேறு முயற்சியில் ஈடுபட்டுவருகின்றன. இதுதொடர்பாக, இன்று தேர்தல் ஆணையம் இரு அணிகளைச் சேர்ந்தவர்களிடம் விசாரணை நடத்தும் சூழ்நிலையில், டெல்லியில் சுகேஷ் சந்தர் என்பவரை டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் கைதுசெய்துள்ளனர். அவரிடம் இருந்து ஒருகோடியே 30 லட்சம் ரூபாயும் இரண்டு சொகுசு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைதான சுகேஷ் சந்தரிடம் டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் துருவித் துருவி விசாரணை நடத்தினர். அப்போது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

டி.டி.வி.தினகரன்

இதுகுறித்து, டெல்லி போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "இரட்டை இலைச் சின்னத்தை மீட்டெடுக்க, சசிகலா அணி தரப்பில் குறுக்குவழியில் முயற்சிகள் நடப்பதாக எங்களுக்கு ரகசியத் தகவல்கள் கிடைத்தன. அதன்பேரில், சசிகலா அணியினரின் நடவடிக்கைகளைக் கண்காணித்தோம். அப்போது, சசிகலா தரப்பிலிருந்து பிரபல புரோக்கர் சுகேஷ் சந்தர் என்பவரிடம் தொடர்பு கொண்டது தெரியவந்தது. உடனடியாக அவரது போன் உரையாடல்கள், நடவடிக்கைகளைக் கண்காணிக்கத் தொடங்கினோம்.

சுகேஷ் சந்தர், டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருக்கும் தகவல் எங்களுக்குக் கிடைத்தது. உடனடியாக அவர் தங்கியிருந்த ஓட்டலுக்குச் சென்று, அவரது அறையில் அதிரடியாக சோதனை நடத்தினோம். அப்போது, சுகேஷ் சந்தர் அறையில் கட்டுக்கட்டாக 2000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் ஒருகோடியே 30 லட்சம் இருந்தன. அதைக் கைப்பற்றி, சுகேஷ் சந்தரிடம் விசாரணை நடத்தினோம்.  
தனியறையில் சுகேஷ் சந்தரிடம் விடிய விடிய நடத்தப்பட்ட விசாரணையில், இரட்டை இலைச் சின்னத்தை மீட்டெடுக்க டி.டி.வி.தினகரன் தரப்பில் 60 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டது. அட்வான்ஸாக ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டது. சின்னத்தை மீட்டெடுக்க தேர்தல் ஆணையத்தில் சில அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதைக் கேட்டு, நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். அடுத்து, அவர் சொன்னத் தகவல் வியப்பை ஏற்படுத்தியது. 

தேர்தல் ஆணையத்தில் உள்ள கறுப்பு ஆடுகளுக்கு இந்தப் பணத்தைக் கொடுக்கவே டெல்லி வந்ததாகவும் சுகேஷ் சந்தர் தெரிவித்தார். உடனடியாக அவரை கைதுசெய்தோம். அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், டி.டி.வி.தினகரன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம். இதுதொடர்பாக டி.டி.வி.தினகரனிடம் விசாரணை நடத்த உள்ளோம். இதற்காக, டெல்லி போலீஸார் சென்னை  வர உள்ளனர்" என்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பணம்

இதுகுறித்து, பெயரைக் குறிப்பிட விரும்பாத டெல்லி போலீஸ் உயரதிகாரி ஒருவர், "சுகேஷ் சந்தருக்குப் பல பெயர்கள் உள்ளன. சுகேஷ் சந்தரா, சுகேஷ் சந்திரசேகர் என அவரை அழைப்பதுண்டு. சுகேஷ் சந்தர், பெங்களூரைச் சேர்ந்தவர். இவருக்கும் பிரபல நடிகை ஒருவருக்கும் நெருங்கிய பழக்கம் இருக்கிறது. மேலும், சுகேஷ் சந்தர் மீது ஏற்கெனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. 2013ல் விபத்தில் சுகேஷ் சந்தர் சிக்கியபோது, அவரது இடது கையில் நான்கு விரல்கள் துண்டிக்கப்பட்டன. 

சுகேஷ் சந்தர், அனைத்து அரசியல் கட்சியினருக்கும் புரோக்கராக இருந்ததாக எங்களது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர் மீது சுகேஷ் சந்தர்பொருளாதார குற்றப்பிரிவில் அதிகமான வழக்குகள் உள்ளன. சென்னையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரிடம்கூட கோடிக்கணக்கான ரூபாயை வாங்கி இவர் ஏமாற்றியுள்ளார். பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொடுப்பதிலும் சுகேஷ் சந்தருக்கு தொடர்பு உள்ளது. சுகேஷ் சந்தரிடமிருந்து பறிமுதல்செய்யப்பட்ட சொகுசு காரில், எம்பி ஒருவரின் ஸ்டிக்கர் ஓட்டப்பட்டு இருந்தது. அதுதொடர்பாகவும் விசாரணை நடத்திவருகிறோம்.

சுகேஷ் சந்தரிடம், டி.டி.வி.தினகரன் தரப்பினர் போனில் பேசிய ஆடியோ, எங்களுக்கு ஆதாரமாக உள்ளது. இதனால், சுகேஷ் சந்தர் யார் என்று தெரியாது என டி.டி.வி.தினகரன் சொல்வது முற்றிலும் பொய். டி.டி.வி.தினகரன் மீது 170 ஐ.பி.சி, 120 பி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதனால், விசாரணைக்குப் பிறகு டி.டி.வி.தினகரன் கைதுசெய்யப்படவும் வாய்ப்புள்ளது" என்றார். 
சுகேஷ் சந்தரிடம் டி.டி.வி.தினகரன் தரப்பில் பேசிய நபர் யார் என்று டெல்லி போலீஸ் உயரதிகாரியிடம் கேட்டதற்கு, 'வழக்கு விசாரணையில் இருப்பதால், பதில் சொல்ல முடியாது. இருப்பினும், அந்த நபர் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். டி.டி.வி.தினகரன் தரப்பு, கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக சுகேஷ் சந்தரிடம் தொடர்பில் இருந்து வந்ததாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தொடர்பில் இருந்தவர்களின் பட்டியலைத் தயாரித்துவருகிறோம். மேலும், சுகேஷ் சந்தரின் கூட்டாளிகள் குறித்தும் விசாரணை நடந்துவருகிறது' என்று அவர் தெரிவித்தார். 

சுகேஷ் சந்தர் கைதுகுறித்து அ.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், 'அவர் யார் என்றே எனக்குத் தெரியாது. அப்படியொரு நபரை நான் சந்திக்கவில்லை' என்று தெரிவித்தார். ஆனால், டி.டி.வி.தினகரனுக்கும் சுகேஷ் சந்தருக்கும் தொடர்பு இருப்பதற்கான அனைத்து ஆதாரங்களும் சிக்கியிருப்பதாக, டெல்லி குற்றப்பிரிவு போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. கைதான சுகேஷ் சந்தரை டெல்லியில் உள்ள நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த உள்ளார். 

சுகேஷ் சந்தர் மீதுள்ள குற்றச்சாட்டுக்கள்

 1. கடந்த 2003-ம் ஆண்டு தமிழகத்தில் உள்ள முன்னணி கட்சித் தலைவரின் பேரன் என்று கூறி சுகேஷ்சந்தர் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு.

 2. கடந்த 2010ல் சென்னையில் இரண்டு தொழிலதிபர்களிடம் பல லட்சம் மோசடி செய்த குற்றச்சாட்டு.  மோசடி செய்வதற்காக சிவப்பு விளக்கு பொருத்தப்பட்ட விலை உயர்ந்த கார்களில் வலம் வருவார்.

 3. மலையாள திரைப்பட நடிகை ஒருவரிடம் திரைப்பட வாய்ப்புகள் வாங்கித்தருவதாக கூறி மோசடி செய்துள்ளார். அடுத்து அந்த நடிகையுடன் நெருக்கமாகப் பழகியுள்ளார். 

4. கடந்த 2013-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்.அதிகாரி என்று கூறி 19 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட நடிகை, சுகேஷ் சந்தர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 

 5.சென்னையில் உள்ள வங்கியில் 19 கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார்.

6.கர்நாடகாவில் ஆணுறை கான்டிராக்ட்ர் வாங்கித் தருவதாக பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக புகார். 

- எஸ்.மகேஷ் 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close