Published:Updated:

தமிழ்நாடு டு கர்நாடகா: க்ரைம் ரேட்டிங்கில் டாப்! -ரௌடி வசூர் ராஜா மீது பாய்ந்த 8-வது குண்டர் சட்டம்

ரௌடி வசூர் ராஜா
ரௌடி வசூர் ராஜா

வேலூரைச் சேர்ந்த ரௌடியான வசூர் ராஜா மீது எட்டாவது முறை குண்டர் சட்டம் பாய்ந்திருக்கிறது. இதையடுத்து, திருச்சி சிறையிலுள்ள அவரின் காவல் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

வேலூர் சத்துவாச்சாரி அருகேயுள்ள புதுவசூரைச் சேர்ந்தவர் வசூர் ராஜா. வயது 35. வேலூரில், கத்தி கலாசாரம் பெருகக் காரணமாக இருந்த ரௌடிகளில் சீனியர் கேங்ஸ்டரும் இவர்தான். வசூர் ராஜா மீது கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் உட்பட 40-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. ஏழு முறை குண்டர் சட்டமும் பாய்ந்திருக்கிறது. 2019-ம் ஆண்டு, ஆகஸ்ட் 29-ம் தேதி, மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில், சொகுசு காரில் வந்த ரௌடிக் கும்பல் 50 ரூபாய் கட்டணம் செலுத்த மறுத்து, அங்கிருந்த ஊழியர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது. அந்தச் சம்பவத்தில், கைதுசெய்யப்பட்ட ஆறு ரௌடிகளில் வசூர் ராஜாவும் ஒருவர். மதுரையில் அவர் சிக்கிய பின்னரே, தமிழகம் முழுவதுமுள்ள கூலிப்படை தலைவன்களுடன் வசூர் ராஜாவுக்குத் தொடர்பிருப்பதும் வெளிச்சத்துக்குவந்தது.

வசூர் ராஜா
வசூர் ராஜா

மதுரை சிறையிலிருந்து ஜாமீனில் வந்த வசூர் ராஜாவை கர்நாடகா போலீஸார் பல்வேறு குற்றங்கள் தொடர்பாக கைதுசெய்து, பெங்களூரு சிறையில் அடைத்திருந்தனர். சிறையில் இருந்தபடியே, செல்போன்கள் மூலம் தொழிலதிபர்களையும், வணிகர்களையும் மிரட்டி அவர் பணம் பறித்ததாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து, பெங்களூரு சிறையிலிருந்து ஜாமீனில் வந்த ராஜாவுக்கு ரகசியமாகத் திருமணமும் நடைபெற்றது. அவர் மணமுடித்த பெண்ணும் ஏற்கெனவே குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் எனக் கூறப்படுகிறது. சில தினங்கள் மட்டுமே சேர்ந்து வாழ்ந்த அந்தப் பெண், வசூர் ராஜாவிடமிருந்து பணம், கைத்துப்பாக்கி போன்றவற்றை எடுத்துச் சென்றுவிட்டதாகவும் சொல்கிறது காவல்துறை.

அதேசமயம், வசூர் ராஜா மீதான க்ரைம் ரேட்டும் கூடியது. இந்தநிலையில், சேலம் கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த ரௌடி செல்லதுரை கடந்த ஆண்டு, டிசம்பர் 22-ம் தேதி கொலைசெய்யப்பட்டார். இது குறித்து, கிச்சிப்பாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, கூலிப்படையைச் சேர்ந்த 32 பேரைக் கைதுசெய்தனர். இந்தக் கொலையும் வசூர் ராஜாவின் திட்டத்துடனேயே அரங்கேற்றப்பட்டிருப்பது தெரியவந்ததால், அவரையும் பிடிக்க தேடுதல் வேட்டையில் இறங்கியது சேலம் தனிப்படை.

வசூர் ராஜா
வசூர் ராஜா

போலீஸாரிடம் வழக்கம்போல் சிக்காத வசூர் ராஜா, ஆத்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதையடுத்து, அவர் நீதிமன்றக் காவலில், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்தநிலையில், ஜாமீன் கேட்டு வசூர் ராஜா தாக்கல் செய்திருந்த மனுவையும் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. அதிபயங்கர குற்றவாளி என்பதால் அவரின் காவலை நீட்டிக்க சேலம் மாநகர போலீஸ் துணை கமிஷனர் மோகன்ராஜ், கமிஷனர் நஜ்மல் ஹோடாவுக்குப் பரிந்துரைச் செய்தார். அவரது பரிந்துரையின்பேரில், குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் வசூர் ராஜாவின் காவலை நீட்டித்து மாநகர கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். இதற்கான ஆணை நகலை, திருச்சி சிறையிலுள்ள வசூர் ராஜாவிடம் போலீஸார் வழங்கியுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு