Published:Updated:

`1 கொலையை மறைக்க 9 கொலைகள்...’ - தெலங்கானா தொழிலாளிகள் உயிரிழப்பில் விலகிய மர்மம்

சடலம் கிடந்த கிணறு
சடலம் கிடந்த கிணறு

தெலங்கானாவில் ஒரு கிணற்றிலிருந்து 9 பேர் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட விவகாரம் திட்டமிட்ட படுகொலை என்பதைக் காவலர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

தெலங்கானாவின் வாராங்கல் பகுதியில் ஒரே கிணற்றிலிருந்து 9 பேரின் சடலங்கள் மீட்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலில் அந்த உயிரிழப்புகள் கொலைய, தற்கொலையா... எனத் தெரியாமல் காவலர்கள் திணறிவந்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக அடுத்தடுத்து நடந்த விசாரணைகள், உயிரிழந்த தொழிலாளி மசூத்தின் வீட்டிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட தடயங்கள் ஆகியவற்றை வைத்து இது கொலையாக இருக்கவே அதிக வாய்ப்புள்ளது எனச் சந்தேகித்த காவலர்கள் அந்த வழியிலேயே விசாரணையைத் தீவிரப்படுத்தினர். இதன் விளைவாக, ஒரு கொலையை மறைப்பதற்காக மேலும் 9 கொலைகள் செய்துள்ள திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

தொழிலாளர்கள்
தொழிலாளர்கள்
மாதிரி புகைப்படம்

20 வருடங்களுக்கு முன்பு மேற்கு வங்கத்திலிருந்து தெலங்கானா வந்த மசூத் என்ற தொழிலாளி வாராங்கலில் தன் மனைவி நிஷா, மகன், மகள் மற்றும் மகளின் 3-வயதுக் குழந்தை ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். ஊரடங்கால் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் போகவே தான் வேலை செய்த கோணிப்பை தயாரிக்கும் தொழிற்சாலையிலேயே ஓர் அறையில் குடும்பத்துடன் தங்கியுள்ளார். அதே தொழிற்சாலையின் முதல் தளத்தில் இவர்களைப் போலவே பீகார் மற்றும் திரிபுராவைச் சேர்ந்த 3 இளைஞர்கள் தங்கியிருந்துள்ளனர்.

கடந்த 20, 21 ஆகிய இரு தினங்களிலும் தொழிற்சாலையிலிருந்த கிணற்றில் தொடர்ச்சியாக இறந்த உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்தச் சம்பவம் நடப்பதற்கு முந்தைய நாள் இரவு, மசூத்தின் வீட்டில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டுள்ளது. அதற்கான தடயங்களையும் காவலர்கள் சேகரித்துள்ளனர். இந்நிலையில் சஞ்சய் குமார் என்ற 30-வயது இளைஞர்தான், அத்தனை கொலைகளையும் செய்துள்ளார் என உறுதி செய்து அவரைக் கைது செய்துள்ளனர் தெலங்கானா போலீஸார்.

தெலங்கானா கொலை
தெலங்கானா கொலை

கொலை நடந்தது மற்றும் சஞ்சய் கைது செய்யப்பட்டது தொடர்பாகத் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்துக்குப் பேட்டியளித்துள்ளார் வாராங்கல் போலீஸ் கமிஷனர் ரவீந்திரன். அதில், `தொழிலாளி மசூத்தின் உறவினரான ரஃபிகா என்ற பெண் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு தன் 3 குழந்தைகளுடன் மேற்குவங்கத்திலிருந்து தெலங்கானா வந்துள்ளார். இங்கு மசூத் வேலை செய்யும் அதே கோணிப் பைகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் அவரும் வேலை செய்து வந்துள்ளார். அப்போது அதே தொழிற்சாலையில் வேலை செய்து வந்த பீகாரைச் சேர்ந்த சஞ்சய் குமார் என்ற இளைஞருக்கு உணவு சமைத்துக் கொடுத்து அதற்கான பணத்தைப் பெற்றுள்ளார்.

இப்படி சஞ்சய்க்கும் ரஃபிகாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. இதையடுத்து ரஃபிகா, தன் குழந்தைகளுடன் சஞ்சய் வீட்டுக்கே சென்று திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் சஞ்சய், தன் மகளுடன் நெருங்கிப் பழகுவதைப் பார்த்த ரஃபிகா அவரை கண்டித்துள்ளார். இனி தன் மகளிடம் பேசக்கூடாது என்றும் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படியும் வற்புறுத்தியுள்ளார். இதனால் ரஃபிகாவின் மகளுடனான தன் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதாக நினைத்த சஞ்சய், ரஃபிகாவை கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார்.

ரயில்
ரயில்
மாதிரி புகைப்படம்

பின்னர், ரஃபிகாவை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி கடந்த மார்ச் 7-ம் தேதி மேற்குவங்க ரயிலில் அவரை அழைத்துக்கொண்டு சென்றுள்ளார். இதனால் ரஃபிகாவும் சஞ்சயை நம்பி அவருடன் சென்றுள்ளார். இருவரும் ரயிலில் பயணித்துக்கொண்டிருக்கும்போது இரவு நேரத்தில் மோரில் தூக்க மாத்திரை கலந்து அதை ரஃபிகாவுக்கு கொடுத்துள்ளார் சஞ்சய். ரஃபிகா அதைக் குடித்துவிட்டு மயக்கமானதும் நள்ளிரவு, யாரும் பார்க்காதவகையில் அவரை ரயிலிலிருந்து கீழே தள்ளி கொலை செய்துள்ளார். பின்னர் அடுத்த ரயில் நிலையத்தில் இறங்கி எதுவும் நடக்காதது போல் வாராங்கல் வந்துள்ளார்.

`மொபைல் சுவிட்ச் ஆஃப், கிணற்றில் 9 சடலங்கள்' - வடமாநில தொழிலாளர்கள் மரணத்தில் நீடிக்கும் மர்மம்

இங்கு வந்த பிறகு ரஃபிகா மேற்குவங்கத்திலேயே தங்கிவிட்டதாகவும் விரைவில் வந்துவிடுவார் என்றும் அவரின் குழந்தைகளுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். இதையடுத்து மசூத்துக்கும் அவரின் மனைவிக்கும் சஞ்சய் மீது சந்தேகம் எழுந்துள்ளது. ரஃபிகா தொடர்பாக சஞ்சயிடம் விசாரித்தபோது அவர்களிடமும் ரஃபிகா மேற்குவங்கத்தில் இருப்பதாகக் கூறியுள்ளார்.

அப்போதும் விடாத அந்த தம்பதி, ரஃபிகாவின் வருகையை உறுதி செய்வதற்காக மேற்குவங்கத்தில் இருக்கும் தங்கள் உறவினர்களுக்கு போன் செய்து விசாரித்துள்ளனர். ரஃபிகா அங்கு வரவில்லை என்பதை அறிந்த அவர்கள், இது தொடர்பாக போலீஸில் புகார் அளித்துவிடுவோம் என சஞ்சயை மிரட்டியுள்ளனர். அந்த நேரத்தில் ஏதோ சொல்லி அவர்களிடமிருந்து தப்பிச் சென்றுள்ளார் சஞ்சய்.

மாத்திரை
மாத்திரை
மாதிரி புகைப்படம்

பின்னர் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், தலைமறைவான சஞ்சய் தன் போனையும் ஸ்விட்ச் ஆஃப் செய்து வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த மே 15-ம் தேதி ஒருவழியாக சஞ்சயை தொடர்புகொண்ட மசூத், மீண்டும் ரஃபிகா தொடர்பாகக் கேள்வியெழுப்பி மிரட்டியுள்ளார். அப்போதும் ஏதோ சொல்லித் தப்பித்த சஞ்சய், இறுதியாகக் கடந்த 20-ம் தேதி மசூத்தின் வீட்டில் நடந்த பிறந்தநாள் பார்ட்டியை அறிந்துகொண்டு அதில் கலந்துகொள்வதற்காக, பாக்கெட் நிறைய 50 - 60 தூக்க மாத்திரைகளுடன் பக்கா பிளானோடு வந்துள்ளார். அந்த பார்ட்டியில் யாரும் பார்க்காத நேரத்தில் உணவில் அனைத்து தூக்க மாத்திரைகளையும் கலந்துள்ளார். பின், அனைவரும் உணவருந்திக்கொண்டிருக்கையில், தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி சஞ்சய் மட்டும் தொழிற்சாலையின் முதல் தளத்தில் உள்ள அறையில் ஓய்வெடுத்துள்ளார்.

`இரவு பார்ட்டி; உடலில் காயங்கள்’ - தெலங்கானா 9 பேர் மரணத்தில் புதிய திருப்பம்

தொடர்ந்து அனைவரும் உணவு சாப்பிட்டு முடித்து நள்ளிரவு மயக்கத்திலிருந்தபோது அனைவரையும் சாக்கில் மூட்டையாகக் கட்டி, தனி ஆளாகத் தூக்கிச் சென்று அருகில் உள்ள கிணற்றில் வீசியுள்ளார். இதில் மசூத் குடும்பத்தினருடன் சேர்த்து பார்ட்டியில் கலந்துகொள்ள வந்த பீகார் இளைஞர்களும் உயிரிழந்துள்ளனர். இந்த அனைத்துக் கொலைகளையும் 3 - 4 மணி நேரத்துக்குள் செய்து முடித்துவிட்டு அதிகாலையில் தன் வீட்டுக்குச் சென்றுள்ளார் சஞ்சய். மசூத்தின் செல்போனை சோதனை செய்ததை வைத்து முதலில் சஞ்சய் மீதுதான் எங்களுக்குச் சந்தேகம் இருந்தது, பின்னர் அங்கு கிடைத்த சிசிடிவி காட்சிகளை வைத்துதான் சஞ்சய் மீதான சந்தேகம் வலுவானது.

தெலங்கானா கொலை
தெலங்கானா கொலை

கொலை நடந்த முந்தைய நாள் மாலை மசூத் வீட்டுக்கு வந்த சஞ்சய் மறுநாள் காலை 5 மணிக்கு மசூத் வீட்டைவிட்டு வெளியேறும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியிருந்தன. அதை வைத்துதான் அவரை பிடித்து விசாரித்தோம், அதில் சஞ்சய் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். அவரை கைது செய்து கொலை வழக்கு பதிவு செய்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

ரயில்வே காவலர்களின் உதவியுடன் ரஃபிகாவின் இறப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது, இதனால் ரயில்வே காவலர்களும் சஞ்சய் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்போது ரஃபிகாவின் 3 குழந்தைகளும் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகக் காவலர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு கொலையை மறைக்க ஒரு குடும்பமே கொலை செய்யப்பட்ட விவகாரம் தெலங்கானாவையே அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது.

News Credit - The Indian Express

அடுத்த கட்டுரைக்கு