Published:Updated:

`2 நாட்களாக மாயம்; கிணற்றில் சடலமாக மீட்பு' -ஆடு மேய்க்கச் சென்ற சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்?

மல்லி காவல் நிலையம்
மல்லி காவல் நிலையம்

தங்கையுடன் ஆடு மேய்க்கச் சென்ற 9 வயது சிறுமி மாயமான நிலையில், 2 நாள்களுக்குப் பின் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது வேண்டுராயபுரம் கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி -ராஜலட்சுமி தம்பதிக்கு 9 மற்றும் 5 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். இதில், சகோதரிகள் இருவரும் கடந்த 1-ம் தேதி, வீட்டின் அருகே ஆடு மேய்க்கச் சென்றுள்ளனர்.

உயிரிழந்த சிறுமி
உயிரிழந்த சிறுமி

ஆடு மேய்த்துக்கொண்டிருந்தபோதே, வீட்டுக்குப் போய்விட்டு வருவதாகத் தன் தங்கையிடம் கூறிவிட்டுச் சென்ற மூத்த சகோதரி, இரண்டு மணி நேரத்துக்கு மேல் ஆகியும் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த தங்கை வீட்டுக்குச் சென்று, ``அக்கா வீட்டுக்குப் போயிட்டு வர்றேன்னு சொன்னா. ரொம்ப நேரம் ஆகியும் வராததுனால நான் வீட்டுக்கு வந்துட்டேன். அக்கா எங்கே?” என்று கேட்டுள்ளார்.

`அவ இன்னும் வீட்டுக்கு வரலியேம்மா' எனச் சொல்லி, பெற்றோரும் உறவினர்களும் தேடியுள்ளனர். வழக்கமாக அச்சிறுமி விளையாடச் செல்லும் வீடுகளுக்குச் சென்று தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து, மகளைக் காணவில்லை என மல்லி காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

சிறுமியின் உடல் மீட்கப்பட்ட கிணறு
சிறுமியின் உடல் மீட்கப்பட்ட கிணறு

புகாரின் அடிப்படையில் காவல்துறையினர், சிறுமியைக் கடந்த 2 நாள்களாகத் தேடி வந்தனர். இந்நிலையில், இன்று அதிகாலை வீட்டின் அருகிலிருந்த கிணற்றிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. தீயணைப்புத் துறையினர் சந்தேகப்பட்டுத் தேடியபோது, அங்கு சிறுமியின் சடலம் கிடந்துள்ளது. பின்னர் சிறுமியின் உடல், சிவகாசி அரசு மருத்துமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

`அச்சிறுமியின் வீட்டுக்கும் ஆடு மேய்க்கச் சென்ற பகுதிக்கும் இடையே சுமார் 1 கி.மீ தூரம் உள்ளது. சிறுமி மீட்கப்பட்ட கிணற்றுக்கும் வீட்டுக்கும் 2 கி.மீ தூரம் உள்ளது. அக்கிணற்றின் கைப்பிடிச்சுவர் 3 அடி உயரம் உள்ளது. இதனால், சிறுமி தவறி விழுந்திருக்க வாய்ப்பில்லை.

அந்தக் கிணறு
அந்தக் கிணறு

சிறுமி வீடு திரும்பியபோது தூக்கிச் சென்று வன்கொடுமை செய்யப்பட்டு, கிணற்றுக்குள் உடல் வீசப்பட்டதா என்ற சந்தேகமும் உள்ளது. இதுபோன்ற பல கோணங்களில் விசாரணை செய்துவருகிறோம்” என்கின்றனர் போலீஸார்.

கடந்த ஜனவரி 24-ம் தேதி, சிவகாசி அருகிலுள்ள கொங்கலாபுரத்தில், பள்ளி முடிந்து மாயமான 8 வயது சிறுமி பிரித்திகா, மறுநாள் சித்துராஜபுரம் காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார்.

கிணறு உள்ள பகுதி
கிணறு உள்ள பகுதி

சிறுமியின் தந்தை சுந்தரத்துடன் நன்கு பழகிய அதே பகுதியைச் சேர்ந்த துணிப்பை தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்த அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த மஜம் அலி சிறுமியை வன்கொடுமை செய்து கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இச்சம்பவம் நடந்த சில நாள்களிலேயே, அதே பகுதியில் மற்றுமொரு சிறுமி கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு