Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குழந்தைகள் காணாமல் போவதற்கான காரணங்களும் தீர்வுகளும்! #WorldMissingChildrensDay

குழந்தை

அமெரிக்காவில் 1979 -ம் ஆண்டு இட்டன் பாட்ஷ் எனும் ஆறு வயது சிறுவன் பள்ளிக்குச் செல்லும்போது காணாமல் போய்விடுகிறான். அவனின் அப்பா ஒரு போட்டோ கிராபர். தன் மகனை எங்கெங்கு தேடியும் கிடைக்கவில்லை. அதனால், அவன் புகைப்படத்தை பல இடங்களில் காட்டித் தேடுகிறார். அதைப் பார்த்த பத்திரிகைகள் இட்டன் பாட்ஷ் படத்தை வெளியிட்டு, தேடுவதற்கு உதவுகின்றன. ஆனபோதும் அந்தச் சிறுவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த தேடலில் கரைந்த இரண்டு ஆண்டுகளில், அங்கு காணாமல் போன குழந்தைகளில் 29 பேரின் உடல்கள் பல்வேறு இடங்களிலிருந்து கிடைக்கின்றன. இது அமெரிக்காவின் அதிர்ச்சி அலைகளை உருவாக்குகிறது. செய்தித்தாள்களில் பரபரப்பான விவாதங்கள் நடந்தேறின.

இந்த விஷயங்கள் அமெரிக்காவின் அப்போதைய அதிபர் ரொனால்ட் ரீகனுக்குச் சென்றடைகின்றன. அவர் இந்தத் தகவல்களைக் கேட்டு அதிர்ச்சியுறுகிறார். 1983 -ம் ஆண்டிலிருந்து, ஆண்டுதோறும் மே 25 நாள் (இட்டன் பாட்ஷ் காணாமல் போன நாள்) சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினமாக கடைபிடிக்கப்படும் என அறிவிக்கிறார். இட்டன் பாட்ஷ் கடத்தப்பட்டு கொலைச் செய்யப்பட்டான் எனும் செய்தி பல ஆண்டுகளுக்குப் பின் கிடைக்கப்பெறுகிறது.

நமது நாட்டிலும் காணாமல் போகும் பல குழந்தைகளின் நிலை என்றே தெரிவதில்லை. தேசிய அளவில் சராசரியாக ஒரு நாளில் 180 குழந்தைகள் காணாமல் போவதாகவும், தமிழகத்தில் காணாமல் போகும் மூன்று குழந்தைகளில் ஒரு குழந்தைப் பற்றிய தகவல்களே தெரிவதில்லை என்றும் கூறப்படுகிறது.  

குழந்தை

குழந்தைகள் எப்படி காணாமல் போவதற்கான காரணங்களும் தீர்வுகளும் என்னவென்று தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கூர்நோக்ககத்தின் மாநில அமைப்பாளரான பேராசிரியர் ஆண்ரூ சேசுராஜிடம் கேட்டோம்.

"குழந்தைகளின் உலகம் ரொம்பவும் தனித்துவமானது. உணர்வுபூர்வமானது. எனவே குழந்தைகளைக் கையாளுவதில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். பெற்றோர் அல்லது பாதுகாவலரிடம் திரும்ப முடியாத நிலையில் இருப்பதையே காணாமல் போவது எனக் குறிப்பிடுகிறோம். பொதுவாக குழந்தைகள் காணாமல் போவதற்கு அடிப்படையான சில விஷயங்களைப் பார்ப்போம்.ஆண்ரூ

முதலில் வீட்டிலிருந்து தொடங்குவோம். குடும்பத்தில் உள்ள அப்பா, அம்மா அல்லது யாரேனும் அந்தக் குழந்தையை வார்த்தையாலோ உடல்ரீதியாகவோ காயப்படுத்தியிருந்தால் அவற்றிலிருந்து விடுபவதற்காக வீட்டை விட்டுச் சென்றுவிடும் முடிவை எடுக்கும். பெற்றோரின் கவனிப்பு தன் மீது கொஞ்சமும் இல்லை எனும் குழந்தைகளும் இந்த முடிவை எடுக்கக்கூடும்.

சில குழந்தைகள், வெளியுலகத்தின் மீதான பிரமிப்பைக் காணும் மனநிலையில் காணாமல் சென்றுவிடும். உதாரணமாக சென்னையைப் பார்க்க வேண்டும் உந்துதல் காரணமாக ரயில் ஏறும் குழந்தைகளைச் சொல்லலாம்.

குழந்தைக் கடத்தல் கும்பலிடம் மாட்டிக்கொள்வதன் மூலம் காணாமல் போவதும் அதிகம் நடக்கிறது. ஏதேனும் ஒரு பொருளைக் காட்டி ஆசை ஏற்படுத்தி தன்னோடு அழைத்துச் செல்லும் மனிதர்களிடம் பல குழந்தைகள் மாட்டிக்கொள்கின்றன.

வேலைக்கு என்று அழைத்துச்செல்லும் குழந்தைகள் காணாமல் போகும் முறை கொடுமையானது. ஒருவர் வீட்டுக்கு வேலைக்கு அனுப்பப்படுகிறது குழந்தை. அந்த வீட்டுக்கு வருபவர் அந்தக் குழந்தை வேலை செய்வதைப் பார்த்து தன் வீட்டு வேலைகளைச் செய்ய அழைத்துச் செல்கிறார் என்று வைத்துக்கொள்வோம். பெற்றோர் தனக்கு நேரடியாக தெரிந்த ஒருவரின் வீட்டுக்கு வேலைக்கு அனுப்பியிருந்தால், அந்தக் குழந்தை எங்கிருக்கிறது என்பது தெரிய வரும். சில பெற்றோர்கள் ஏஜென்ட் மூலம் அனுப்பும்போது இப்படி பல இடங்களுக்கு கை மாறினால் அந்தக் குழந்தை எங்கிருக்கிறது என்பது தெரியாமலேயே போய்விடும். இதுவும் ஒருவகையில் குழந்தை காணாமல் போவதுதான்.

பள்ளியில் ஆசிரியர்கள், பணியாளர்கள், சக நண்பர்கள் இவர்களில் யாரேனும் ஒருவரால் துன்புறுத்தப்படும்போது, அந்தப் பள்ளிக்குத் திரும்பவும் வர அச்சப்பட்டு காணாமல் போவதை பல இடங்களில் பார்க்க முடிகிறது.

குழந்தைகள் காப்பகத்தில் தனக்கு ஒவ்வாமையான சம்பவங்கள் நடக்கும்போது அங்கிருந்து குழந்தைகள் வெளியேறி காணாமல் போய்விடுகின்றனர்.

குழந்தை என்பது 18 வயது வரைக்கும் என்பதால், சற்று வளர்ந்த குழந்தைகள் பற்றியும் பேச வேண்டும். சோஷியல் மீடியா போன்றவற்றில் நட்பாகி, அவர்களைச் சந்திக்கச் செல்வது அல்லது அவர்கள் சொல்லும் ஊர், தகவல் பற்றி அதிகமாக கற்பனை செய்துகொண்டு அதைத் தேடிச் செல்லும் குழந்தைகள் தற்போது அதிகரித்து வருகின்றனர்.

இவையெல்லாம் இல்லாமல், அப்பா, அம்மாவோடு வெளியே செல்லும்போது வழித் தெரியாமல் காணாமல் போகும் குழந்தைகளும் இருக்கின்றனர்.

குழந்தைகள் தானாக ஒருபோதும் காணாமல் போவதில்லை. அப்படியான சூழலை பெரியவர்கள்தான் உருவாக்கிக் கொடுக்கிறோம் என்பதை முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதனால், அவர்கள் காணாமல் போவதற்கான வாய்ப்புகளைக் குறைப்பதும் பெரியவர்களின் கைகளில்தான் இருக்கின்றன. அவை என்னென்ன என்பதைப் பார்ப்போம்.

குழந்தை

குழந்தைகளுடன் சரியான நேரத்தில், முழு ஈடுபாட்டுடன் பழக வேண்டும். இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை உங்கள் குழந்தையுடன் இருப்பவர் எனில், 12 மணி நேரம் உங்கள் குழந்தையோடு இருக்கிறீர்கள் என்பதாக நினைத்துக்கொள்ள கூடாது. அதில் முக்கால் பகுதி நேரம் குழந்தை உறங்கிகொண்டிருக்கும். அதனால், அந்தக் குழந்தை எப்போது உற்சாகமாக இருக்குமோ அந்த நேரத்தில் டிவி. மொபைல் இவற்றை அணைத்துவிட்டு, மனம் விட்டு விளையாடவும் உரையாடவும் செய்ய வேண்டும்.

குழந்தை தான் ஒரு தவறு செய்துவிட்டதாக நினைப்பதைப் பெற்றோருடன் பகிர்ந்துகொள்ளும் அளவுக்குப் பழக வேண்டும். மிகச் சிறிய தவறாக அது இருக்கலாம். அதை அப்பாவிடம்/ அம்மாவிடம் சொல்வது சொன்னால் என்ன செய்வார்களோ... என வீட்டை விட்டு ஓடிப் போகும் முடிவை அது எடுக்கக்கூடும்.

சோஷியல் மீடியாவைப் பயன்படுத்தும் குழந்தை எனில் அவர்கள் யாரோடு பேசுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வதும், அவர்களின் உரையாடலைச் சீர் செய்வது பெரியவர்களின் கடமையே. மேலும், சோஷியல் மீடியாவில் அறிமுகமாகும் நபர்களிடம் பொதுவான விவாதங்களைச் செய்வதோடு நிறுத்திகொள்ள வேண்டும். நம்முடைய தனிப்பட்ட தகவல்கள், புகைப்படங்களைப் பரிமாறக்கூடாது என்பதை அறிவுறுத்த வேண்டும்.

பள்ளி என்பது மதிப்பெண் குவிக்கும் இடமாக மாறிவிடக் கூடாது. குழந்தைகளைக் கண்டிப்பதற்கு முன் அவர்களின் குடும்பச் சூழல், வளரும் பொருளாதாரச் சூழல் ஆகியவற்றைக் கவனிக்க வேண்டும். அதற்கு ஏற்ப அவர்களுடன் பழக வேண்டும். தன்னம்பிக்கை கொடுக்கும் விஷயங்களை அடிக்கடி கூற வேண்டும்.

பெற்றோருடன் வெளியே செல்லும்போது, அவர்களை விட்டு விலகி புதிய இடத்திற்கு சென்று விட்டால், என்ன செய்ய வேண்டும், எந்தெந்த தகவல்களைக் கூற வேண்டும், அதை யாரிடம் கூற வேண்டும் என்பதை குழந்தைகளுக்குக் கற்றுகொடுக்க வேண்டும்.

யாரேனும் புதிய நபர் ஏதேனும் பொருளைக் கொடுத்து அழைத்தால், அது எவ்வளவு விலை மதிப்புமிக்க பொருளாக இருந்தாலும் அவருடன் செல்லக்கூடாது. அவர் கேட்கும் தகவல்களைக் கூற கூடாது என்பதை குழந்தைகளுக்கு வாரம் ஒருமுறையேனும் கூற வேண்டும்.

குழந்தைகளை வேலைக்கு அனுப்புவதை ஒருபோதும் செய்யக்கூடாது. எவ்வளவு சிரமம் என்றாலும் பெரியவர்களே அதை சமாளிக்க வேண்டும்.

குழந்தைகள் மீது பெற்றோர் அன்பு வைப்பதில் கொஞ்சமும் கஞ்சத்தனம் காட்ட மாட்டோம். அதே போல அக்கறையோடு குழந்தைகளுக்குத் தேவையான நேரத்தையும் சரியான உரையாடலையும் வழங்கினால் குழந்தைகள் காணாமல் போவது என்பது அரிதாகி விடும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement