Published:Updated:

''அப்பாவி தமிழர்களைக் கண்டுகொள்ள ஆளே இல்லையா?''

விகடன் விமர்சனக்குழு

விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா!

##~##

தென்னை மரத்தில் தேள் கொட்டினால், பனை மரத்தில் நெரிக்கட்டும் என்பார் களே... அதுபோல இருக்கிறது சிங்கப்பூருக்கு வேலைக்குச் சென்ற தமிழர்கள் நிலைமை! 

கடந்த 8-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் ஓணாங்குடியைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் சிங்கப்பூர் 'லிட்டில் இந்தியா’ எனப்படும் தேக்காவில் நடந்த விபத்தில் பலியானார். ஸ்பாட்டில் கூடிய தமிழர்கள் சிலர் பிரச்னை செய்ய... அது கலவரமாக உருவெடுத்தது. கலவரத்தில் ஈடுபட்டவர்கள் கைது, ரிமாண்ட் என அடுத்தடுத்த அதிரடிகளில் இறங்கியது சிங்கப்பூர் அரசு. அது இப்போது பிழைப்புத் தேடிப்போன தமிழர்கள் பலருக்கும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.

இப்படித் திருப்பி அனுப்பப்பட்டவர்களில் ஒருவரான புதுக்கோட்டை மாவட்டம் வெட்டன்விடுதியைச் சேர்ந்த முருகானந்தம் என்பவரைச் சந்தித்தோம். ''கடந்த ஏழு வருசமா சிங்கப்பூர்ல எலெக்ட்ரிக்கல்

''அப்பாவி தமிழர்களைக் கண்டுகொள்ள ஆளே இல்லையா?''

வேலை செஞ்சுகிட்டு இருக்கேன். கடந்த 8-ம் தேதி எங்க ஊர்க்காரர் ஒருத்தர் சிங்கப்பூர்ல இருந்து ஊருக்குப் போறதால, அவருக்கான பொருட்கள் வாங்குறதுக்காக தேக்காவுக்குப் போயிருந்தேன். அப்பதான் அங்கே பிரச்னை நடந்திருக்கு. இது எனக்குத் தெரியாது. நானும் அவரும் வீட்டுக்குத் தேவையான சாமான்களை வாங்கிட்டு இருக்கும்போது, அங்கே கலவரம் நடந்துகிட்டு இருக்குன்னு என் நண்பர்கள் எனக்கு போன் பண்ணாங்க. உடனே நாங்க, தேக்காவுல இருக்குற என்னோட ரூமுக்குப் போயிட்டோம். மறுநாள் வழக்கம்போல வேலைக்குப் போயிட்டேன்.

அடுத்த நாள் 10-ம் தேதி அதிகாலை மூணு மணிக்கு போலீஸ் வந்து என்னை எழுப்பி உங்ககிட்ட விசாரிக்கணும்னு சொன்னாங்க. நானும் அவங்களோட போலீஸ் ஸ்டேஷன் போனேன். அங்கே இருந்த தமிழ் பேசத் தெரிஞ்ச போலீஸ்காரர், 'நீ ஞாயிற்றுக்கிழமை தேக்காவுக்குப் போயிருந்தியா?’ன்னு கேட்டார். 'ஆமா... போயிருந்தேன்’னு சொன்னேன். உடனே, 'அப்ப நீயும் அந்தக் கலவரத்துல ஈடுபட்டிருப்பே’ன்னு சொன்னாங்க. 'எனக்கும் கலவரத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் பொருள் வாங்க போன கடைகளில் எல்லாம் கேமரா இருக்கு. அதுல நாங்க எத்தனை மணிக்கு எங்கே இருந்தோம்னு பதிவாகியிருக்கும். அதை பார்த்துக்கங்க’ன்னு சொன்னேன். அதையெல்லாம் அவங்க காதுல வாங்காததோட, ஒட்டுமொத்த தமிழர்களையும் கேவலமா பேசினாங்க. அப்புறம் ஏதோ எழுதிட்டு என்னைத் திருப்பி அனுப்பிட்டாங்க.

திரும்பவும் நாலு நாள் கழிச்சு என்னை அழைச்சு கிட்டுப் போய் விசாரிச்சாங்க. நான் சொன்னதை அவங்க ஏத்துக்கலை. 'நீயும்தான் கலவரத்துல ஈடுபட்டிருக்கே’ன்னு சொல்லிட்டு, கடந்த 17-ம் தேதி ஜெயிலுக்குக் கொண்டுபோயிட்டாங்க. அங்க போனதும்தான், என்னை மாதிரி நிறைய தமிழர்களை இதே மாதிரி அங்கே கொண்டுவந்து வெச்சிருந்தது தெரிஞ்சது.

ஜெயில்ல இருந்த தமிழ் போலீஸ்காரர் ஒருத்தர், 'உங்க யாருக்கும் எந்த தண்டனையும் கிடையாது. ஆனால், எல்லாரையும் ஊருக்கு அனுப்பப் போறாங்க. யாரும் பயப்பட வேணாம்’னு சொன்னாரு. 'நாங்க யாருமே எந்தத் தப்புமே செய்யல. அப்புறம் எதுக்கு ஊருக்கு அனுப்புறீங்க?’ன்னு கேட்டோம். 'அதெல்லாம் எனக்குத் தெரியாது’ன்னாரு. அப்புறம் அந்த நாட்டு நீதிபதி ஜெயிலுக்கு வந்தார். அவரும், 'நீங்கள் தவறு செய்திருக்கிறீர்கள்’ என்று சொல்லிட்டு போயிட்டார். என்ன ஏதுன்னு விசாரிக்கல.

''அப்பாவி தமிழர்களைக் கண்டுகொள்ள ஆளே இல்லையா?''

அப்புறம் நம்ம நாட்டு தூதரக அதிகாரி வந்தார். அவர் எங்களோட முகவரிகளை மட்டும் விசாரிச்சுட்டுப் போயிட்டார். என்ன ஏதுன்னுகூட கேக்கல. தப்பே செய்யாம இவ்வளவு பேர் ஜெயிலுக்குள்ள இருக்கோம். இது தொடர்பா நம்ம நாட்டு அரசிடம் பேசுறேன்னோ, ஆறுதலான வார்த்தையோ அவர்கிட்ட இருந்து வரல.

19-ம் தேதி என்னை விமானத்துல ஏத்தி அனுப்பிட்டாங்க. என்னோட சேர்த்து 53 பேரை அனுப்பப்போறதா சொல்லியிருக்காங்க. வறுமையில வாடியிருக்கும் நாங்க, சோறு கஞ்சி நிம்மதியா குடிக்கணும்னுதான் பொழப்பு தேடி வெளிநாடு போறோம். அங்கே போற நம்மளுக்கு நம்ம நாட்டு தூதரகம்தான் ஒரே சொந்தம். அவங்களும் கைவிட்டு, நம்ம நாட்டு அரசாங்கமும் கைவிட்டுருச்சுன்னா நாம யாருகிட்ட சொல்றது.

தப்பே பண்ணலைன்னாலும் ஊருக்குள்ள நான் ஏதோ தப்பு பண்ணிட்டு திரும்பிவந்த மாதிரி கேவலமா பாக்குறாங்க. வீட்டுலேயும் அப்படித்தான் நிலைமை இருக்கு. எங்களை நம்பி கடனெல்லாம் நிறைய வாங்கி வெச்சிருக்காங்க. அதையெல்லாம் எப்படி அடைக்கப் போறேன்னே தெரியல'' என்று கலங்கினார்.  

தேக்கா கலவரம் தொடர்பாக மொத்தம் 35 பேர் கைது செய்யப் பட்டிருந்தனர். அவர்களில் ஏழு பேர் மீதான குற்றச்சாட்டுகள் சமீபத்தில் விலக்கிக் கொள்ளப் பட்டுள்ளன. முருகானந்தம் உள்ளிட்ட 53 நபர்களை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பி வைத்துவிட்டனர்.

அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட துணைத் தூதர் தேவயானிக்காக வரிந்துகட்டி களத்தில் இறங்கியிருக்கும் இந்திய அரசாங்கம், இந்த அப்பாவி தமிழர்களையும் கண்டுகொள்ளுமா?

- வீ.மாணிக்கவாசகம்