Published:Updated:

மகனைக் காதலித்த பெண்ணை சித்ரவதை செய்த குடும்பம்!

சேலம் காதல் கொடூரம்..!

பிரீமியம் ஸ்டோரி

தன் மகன் வேற்று சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை விரும்புகிறான் என்பதற்காக அந்தப் பெண்ணையும் பெண்ணின் தாயையும் நிர்வாணப்படுத்தி மர்ம உறுப்பில் மது பாட்டில்களையும் குச்சிகளையும் செருகி கொடுமைப்படுத்தி இருக்கிறார்கள் கொடூர மனம் படைத்த கயவர்கள் சிலர். மார்பு மற்றும் தொடை பகுதிகளைக் கடித்துக் குதறியிருக்கின்றன அந்த வெறிபிடித்த மிருகங்கள். அச்சமும் அவமானமும் தாங்க முடியாத அந்த இருவரும் விஷம் குடித்ததால் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கின்றனர்.

மகனைக் காதலித்த பெண்ணை சித்ரவதை செய்த குடும்பம்!

வட மாநிலங்களில் ஏதோ ஒரு மூலையில் இதுபோன்ற சம்பவங்களைப் படித்து அதிர்ச்சி அடைந்திருப்போம். கல்வி மற்றும் கலாசாரத்தில் முன்னேறிய தமிழ்நாட்டில் இந்தச் சம்பவம் நடந்திருப்பது நம்மை எல்லாம் வெட்கி தலைகுனிய வைக்கிறது.

சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை அடுத்த லட்சுமாயூர் கிராமத்தைச் சேர்ந்த ஜீவிதாவும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அவருடைய தாய் மகேஸ்வரியும்தான் இந்தக் கொடூரத்துக்கு உள்ளான பரிதாப ஜீவன்கள். 14 வயதான ஜீவிதா, 10-ம் வகுப்பு மாணவி. இவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த 17 வயதான கல்லூரி மாணவர் தண்டபாணியும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது.)  ஒன்றரை வருடங்களாகக் காதலித்து வந்துள்ளனர்.

வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இவர்களின் காதல் இருவர் வீட்டுக்கும் தெரியவர, கடும் எதிர்ப்பு. இதனால் ஜீவிதா சுமார் மூன்று மாதங்களாக தண்டபாணியுடன் பேசாமல் இருந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 22-ம் தேதி இரவு 12 மணிக்கு தண்டபாணியும் அவரது மாமன் மகன் விஜயகுமாரும் ஜீவிதா வீட்டுக்கு வந்திருக்கிறார்கள். அடுத்து நடந்த சம்பவங்கள் அதிர்ச்சி ரகம்.

நடந்த கொடூரங்களை நேரில் பார்த்த ஜீவிதாவின் பாட்டி லட்சுமி, ''என் மூத்த மகன் முருகன் வயித்து

மகனைக் காதலித்த பெண்ணை சித்ரவதை செய்த குடும்பம்!

பேத்திதான் ஜீவிதா. அன்னைக்கு என் மகன் லாரி கிளீனர் வேலைக்கு வெளியூருக்குப் போயிட்டான். அந்த நேரம் பார்த்து தண்டபாணியும் அவன் மாமன் மவனும் நடு ராத்திரியில் கையில சாராய பாட்டிலோடு வீட்டுக்கு வந்தானுங்க. என் மருமக மகேஸ்வரிகிட்ட 'உன் பொண்ணை நான்தான் கல்யாணம் பண்ணிப்பேன். யார் தடுத்தாலும் முடியாது’ன்னு சத்தம் போட்டுகிட்டு இருந்தான். அதற்கு என் மருமக, 'நீங்க வசதியானவங்க. நாங்க ரொம்ப ஏழைங்க. ரெண்டு குடும்பத்துக்கும் ஒத்து வராது. தயவு செஞ்சு போயிடு’ன்னு சொல்லிட்டு இருந்தா. அதற்கு அந்தப் பையன் 'ஏ ஜீவிதா... நீ என்கிட்ட பேசலைன்னா, இந்த பாட்டில்ல இருக்குற சரக்குல விஷம் கலந்து குடிச்சுட்டு இந்த இடத்துலேயே செத்துப் போயிடுவேன்’னு சொல்லி மிரட்டிட்டு இருந்தான்.

அப்போ திடீர்ன்னு தண்டபாணியோட அப்பா விஸ்வநாதன், அம்மா செல்வி, மாமன்கள் சேட்டு, முனுசாமி, தாய் வழி தாத்தா ஐயம்பெருமாள், ஊர் முக்கியஸ்தர் மகன் ராமகிருஷ்ணன் எல்லோரும் கம்பு, கல்லோட வீட்டுக்கு வந்து  சரமாரியா அடிச்சாங்க. நான் போய் தடுத்தேன். என்னை ஒரே தள்ளா தள்ளிட்டாங்க. அப்புறம் நடந்ததை என்னன்னு சொல்றது?'' என்று வாயைப் பொத்திக்கொண்டு அழுதார்.

சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு, ''என் மருமகளையும், பேத்தியையும் நிர்வாணப்படுத்தி, செங்கல்லால அடிச்சு சித்ரவதை செய்சாங்க. மாடுகளை அடிக்கும் சாட்டையால. உடம்புல எல்லா இடத்தையும் அடிச்சாங்க. மார்புகளை எல்லாம் கடிச்சாங்க. 'இத வெச்சுகிட்டுதானே என் பையனை மயக்குற?’ன்னு சொல்லி... உயிர் நாடியில் சாட்டைக் குச்சியாலும், சாராய பாட்டிலாலும் குத்தி நாசப்படுத்தினாங்க.

ஊரு சனமே வேடிக்கை பார்த்துட்டுதான் இருந்துச்சு. நைட்டு இப்படி செஞ்சது மட்டுமில்லாம, அடுத்த நாள் காலையில வந்தும் நிர்வாணப்படுத்தி கொடுமைப்படுத்தினாங்க. இதையெல்லாம் தாங்க முடியாமதான் விஷத்தைக் குடிச்சுட்டாங்க. இந்தக் கொடுமையைக் கேட்க யாருமே இல்லையா சாமீ?'' என்று கதறி அழுதார்.

இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த மலர்கொடி என்ற பெண், ''சத்தம் கேட்டு ஓடி வந்து பார்த்தோம். தடுத்தா கேட்குற மனநிலையில அவங்க இல்ல. அதுவும் கையில கற்களையும் தடிகளையும் வெச்சிருந்தாங்க. அவங்க பக்கத்துல யாரு போனாலும், உசுருக்கு உத்தரவாதம் இல்ல. அதனால, யாரும் அவங்க பக்கத்துல போகல. விஸ்வநாதன் எங்க பகுதி அ.தி.மு.க. கிளைச் செயலாளர். அதோடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத் தலைவரும் அவர்தான். எங்க ஊருல அவர் வெச்சதுதான் சட்டம். அவரை மீறி யாரும் பேச முடியாது. அதனால் யாரும் தடுக்கப் போகல. அவங்களும் வெளியில சொன்னா நா கூசும் அளவுக்கு சித்ரவதை செஞ்சுட்டாங்க.

தாரமங்கலம் போலீஸ் ஸ்டேஷன்ல இது சம்பந்தமா புகார் கொடுத்திருக்காங்க. 'தேர்தல் முடிஞ்ச பிறகு வா’ன்னு திருப்பி அனுப்பிட்டதால, பயத்துல ரெண்டு பேரும் விஷம் குடிச்சிட்டாங்க. ஊர்க்காரங்க எல்லோரும் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்ட பிறகுதான் கேஸ் போட்டாங்க. பாவம்... இவங்களுக்கு நடந்த கொடுமை வேற யாருக்கும் நடக்கக் கூடாது'' என்றார் இயலாமையோடு.

தண்டபாணியின் தந்தை வழி தாத்தா ஜெயராமன், ''என் மகன் விஸ்வநாதனும் காதல் திருமணம் செஞ்சுகிட்டவன்தான். அதில் இருந்து அவன்கிட்ட பேச்சுவார்த்தையே இல்லாம இருந்தோம். இப்ப ரெண்டு வருஷமாகதான் பேசிட்டு இருக்கோம். அப்ப என் பையன் சாதி மாறி காதலிச்சதைப்போல் இப்ப அவனோட பையனும் சாதி மாறி காதலிச்சிருக்கான். இது என் பையனுக்கு முன்னாடியே தெரியும். இருந்தும் அமைதியா என் பேரனுக்குப் புத்திமதி சொல்லிட்டு இருந்தான். என் பையன் யாரையும் அடிக்க மாட்டான். என் மருமகளோட சொந்தக்காரங்கதான் இப்படி அடிச்சிருக்காங்க. என் பையன் காதலிச்சா இனிச்சது, அவன் பையன் காதலிப்பது கசக்குதுன்னா என்ன அர்த்தம்?'' என்றார்.

பாதிக்கப்பட்ட பெண்களின் உடல்நிலை குறித்து அவர்கள் சிகிச்சைப் பெற்று வரும் சேலம் அரசு

மகனைக் காதலித்த பெண்ணை சித்ரவதை செய்த குடும்பம்!

மருத்துவமனை மருத்துவர்களிடம் விசாரித்தபோது, ''இருவரும் அபாயக் கட்டத்தைத் தாண்டிவிட்டனர். ஆனால், உடல் முழுவதும் இருவருக்கும் பலத்த காயங்கள் இருக்கின்றன. தீவிர சிகிச்சைப் பிரிவில் தீவிர கண்காணிப்பில் வைத்திருக்கிறோம்'' என்றனர்.

இருவரும் குணமடைய வேண்டும் என்று சேலம் பெண்கள் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள், மெழுகுவத்தி ஏந்தி பிரார்த்தனை செய்ததோடு, இந்த அநீதிக்கு நியாயம் கேட்டுப் போராடி வருகின்றனர். அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சாரதா, ''சேலம் மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் ஒன்பது பெண் குழந்தைகள் பாலியல் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறார்கள். இந்தச் சம்பவத்தைப் பொருத்தவரை பாதிக்கப்பட்ட பெண்ணையும் அவரது அம்மாவையும் கொடூரமான முறையில் தாக்கியிருக்கிறார்கள். கண், முதுகு, மார்பு, தொடை, கன்னம், உயிர் நாடியில் எல்லாம் கடுமையாக அடித்திருக்கிறார்கள். உயிர் நாடி கிழிந்து இருந்ததைப் பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதுவிட்டோம். இந்த வழக்கை நாங்கள் எடுத்து நடத்தப் போகிறோம். இந்தக் கொடூரத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் கடுமையான தண்டனை வாங்கித் தராமல் ஓயமாட்டோம்'' என்றார் ஆவேசமாக.  

சேலம் ரூரல் எஸ்.பி-யான சக்திவேலிடம் பேசியபோது, ''இந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் தலைமறைவாகிவிட்டார்கள். அவர்களைத் தீவிரமாகத் தேடி வருகிறோம். ஜீவிதாவைக் காதலித்த பையனை கைது செய்துவிட்டோம். மற்றவர்களைக் கூடிய விரைவில் பிடித்துவிடுவோம்'' என்றார்.

எங்கே போகிறது தமிழகம்?

- வீ.கே.ரமேஷ்

படங்கள்: க.தனசேகரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு