Published:Updated:

சரக்கு... சைட்-டிஷ்... டிக்கெட்!

மிரளவைக்கும் மதுபானக் கொலைகள்!

சாராயக் கடையில் வருமானம் பெருகுகிறது என்று அரசாங்கம் நினைக்கிறது. அதனால் போகிற மானத்தை யாரும் நினைப்பது இல்லை. கொலைபோதையைப் பெருக்கிவரும் இந்தக் குடிபோதையால் எத்தனை மரணங்கள்... எத்தனை வன்முறைகள்... எத்தனை அவலங்கள்! கடந்த சில தினங்களில் நடந்த சம்பவங்கள் இவை.

மதுபானக் கொலை 1

டாஸ்மாக் கடையில் சைட்-டிஷ்ஷ§க்கான வாக்குவாதத்தால் பூபதி என்பவர் கொலை செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே உள்ள சிந்தலவாடம்பட்டியில் உள்ள அவருடைய இல்லத்தில் இன்னும் கண்ணீரின் ஈரம் காயவில்லை.

சரக்கு... சைட்-டிஷ்... டிக்கெட்!

அவருடைய மனைவி ஆனந்தியை ஆசுவாசப்படுத்தி பேசினோம். ''என் வீட்டுக்காரர் யாரோட வம்புதும்புக்கும் போக மாட்டாரு. விவசாயம் பாக்குறாரு. என்னைக்காச்சும் ஒருநாள்தான் அலுப்பு தெரியாம இருக்க குடிப்பாரு. அன்னைக்கும் அப்படித்தான் தோட்டத்துல வேலைபாத்துட்டு சத்திரப்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடைக்குப் போயிருக்காரு. பக்கத்துல குடிச்சுக்கிட்டு இருந்த என்னோட ஊரான காளிபட்டியைச் சேர்ந்த கணேசன், என் வீட்டுக்காரர் தட்டுல இருந்து வாழைப் பழத்தை எடுத்தாராம். இதனால வாக்குவாதம் வந்து, கைகலப்பாகிடுச்சு. அப்புறம் அங்க இருந்தவங்க இவங்களை விலக்கிவிட்டிருக்காங்க.

இந்தப் பிரச்னைக்குப் பின்னாடி அவரு வீட்டுக்கு வந்துருக்காரு. நானும் என் மாமியாரும் பக்கத்து வீட்டுல டி.வி பாத்துக்கிட்டு இருந்தோம். கதவு பூட்டியிருந்ததைப் பாத்துட்டு என்னைய தேடி

சரக்கு... சைட்-டிஷ்... டிக்கெட்!

காளிபட்டியில இருக்குற என்னோட அக்கா வீட்டுக்குப் போயிருக்காரு. அங்க நான் இல்லைன்னு தெரிஞ்சுகிட்டு வீட்டுக்குத் திரும்புற நேரத்துலதான், அவர்கிட்ட பிராந்தி கடையில சண்டை போட்டவங்க மடக்கி வம்புக்கு இழுத்திருக்காங்க. கத்திய வெச்சு மூக்க அறுத்து, கட்டிவெச்சு அடிச்சிட்டாங்க. தகவல் தெரிஞ்சு நாங்க அவரை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போற வழியிலேயே செத்துப் போயிட்டாரு'' என்று கலங்கினார்.

இந்த வழக்கை விசாரித்துவரும் சத்திரப்பட்டி இன்ஸ்பெக்டர் இம்மானுவேல் ராஜ்குமாரிடம் பேசினோம். ''பார்ல பூபதியும் கணேசனும் தனித்தனியா குடிச்சிருக்காங்க. கணேசன் தட்டுல இருந்த வாழைப் பழத்தை பூபதி எடுத்துருக்காரு. அதுக்கு கணேசன், 'வேணும்னா கேளு... வாங்கித்தரேன். கேட்காம எடுக்காத’ன்னு திட்டியிருக்காரு. அதுக்கு பூபதி, பாட்டில உடைச்சி கணேசனையும் கூட இருந்தவங்களையும் மிரட்டுனதாகவும், அங்கே இருந்தவங்க இவங்களை சமாதானம் பண்ணி அனுப்பினதாகவும் சொல்றாங்க. அந்த ஆத்திரத்துல பூபதியை, கணேசனும் அவரோட கூட்டாளிகளும் சேர்ந்து கொலை பண்ணிட்டாங்க. அந்த ஏழு பேரில் ஞானசேகர், சுப்ரமணி, முத்துச்சாமி, பெருமாள் ஆகிய நாலு பேரை ரிமாண்ட் பண்ணிருக்கோம். மோகனபிரபு, மணியன் ரெண்டு பேரையும் பிடிக்க தனிப்படை அமைச்சுருக்கோம். வயித்துல காயம்பட்டு கோயம்புத்தூர் ஹாஸ்பிட்டல்ல கணேசன் இருக்காரு'' என்றார்.

மதுபானக் கொலை - 2

இது நெல்லை பயங்கரம்.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள அழகனேரியைச் சேர்ந்தவர், செல்வா. தனியார் பேருந்து நடத்துநர். கடந்த 20-ம் தேதி இவரது பேருந்து கோவில்பட்டியில் இருந்து நெல்லை புதிய பேருந்து நிலையத்துக்கு வந்துகொண்டு இருந்தது. கங்கைகொண்டான் என்ற இடத்துக்கு வந்தபோது, மது போதையின் உச்சத்தில் இருந்த மூன்று பேர் அந்தப் பேருந்தில் ஏறினர். அவர்கள் டிக்கெட் எடுக்க மறுத்து தகராறு செய்துள்ளனர். கோபமடைந்த செல்வா, தாழையூத்து நிறுத்தத்தில் மூவரையும் வலுக்கட்டாயமாகப் பேருந்தில் இருந்து இறக்கிவிட்டார். ஆத்திரம் அடைந்த மூவரும் தங்கள் நண்பர் இசக்கியை அழைத்துக்கொண்டு அங்கிருந்து ஆட்டோவில் வந்து, நடத்துநர் செல்வா மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொளுத்திவிட்டனர்.

சரக்கு... சைட்-டிஷ்... டிக்கெட்!

நெல்லை பேருந்து நிலையத்தில் மக்கள் நடமாட்டம் அதிகம் இடத்தில் நடந்த இந்த சம்பவத்தை நேரில் பார்த்த கடைக்காரர் ஒருவர், ''அந்த பஸ் இங்கே வந்து ஆட்களை இறக்கிவிட்டு நின்னுகிட்டு இருந்தது. கண்டக்டர் செல்வாவும் டிரைவரும் பக்கத்து கடையில் டீ குடிச்சுகிட்டு இருந்தாங்க. அப்போ ஆட்டோவுல வந்த நாலு பேர், அந்த பஸ்ஸுக்கு தீவைக்க முயற்சி செஞ்சாங்க.

அதைப் பார்த்த கண்டக்டர் செல்வா அவர்களைத் தடுத்தார். அப்போது ஒருவன், 'இவன்தான் நம்மை பஸ்ல இருந்து இறக்கிவிட்டான். இவனைக் கொளுத்துங்கடா... அப்பத்தான் இவனுக்கு நாம யாருன்னு தெரியும்’னு சொன்னதும்... பக்கத்துல பெட்ரோல் கேனுடன் இருந்தவன், கண்டக்டர் மேல பெட்ரோலை ஊத்தினான். அதை எதிர்பார்க்காத கண்டக்டர் அங்கே இருந்து தப்பி ஓட முயற்சி செஞ்சார். அவரை விரட்டி, பெட்ரோல் முழுசையும் அவர் மேல ஊத்தினான். இன்னொருத்தன் தீ வெச்சான்.  

அலறித் துடிச்ச கண்டக்டர் செல்வா தரையில விழுந்து புரண்டார். பக்கத்துக் கடைக்காரங்க சாக்கைத் தண்ணீர்ல நனைச்சு அவரோட உடல்ல போட்டாங்க. ஆனா, அதுக்குள்ள அவரோட தலை முதல் கால் வரை தீயில வெந்துடுச்சு. அந்தப் பாதகச் செயலை செஞ்சவங்க அந்த இடத்துல இருந்து தப்பி ஓட முயற்சி செஞ்சாங்க. அங்கே இருந்தவங்க, இரண்டு பேரை மடக்கிப் பிடிச்சாங்க. அவங்ககிட்ட நடத்திய விசாரணைக்குப் பிறகு இன்னொரு ஆளையும் போலீஸ்காரங்க பிடிச்சாங்க. தப்பிப் போன இன்னொரு நபரை போலீஸ்காரங்க தேடிகிட்டு இருக்காங்க'' என்றார்.

நெல்லை மாநகர காவல் துறை துணை ஆணையாளர் சுரேஷ்குமார், ''மது போதையில் பேருந்தில் தகராறு செய்த ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த அப்பாத்துரை, பெருமாள், புதுக்கோட்டை கூட்டுடன்காடு கிராமத்தைச் சேர்ந்த வேல்ராஜ் ஆகிய மூன்று பேரை நடத்துநர் செல்வா இறக்கி விட்டுவிட்டார். இதில் ஆத்திரம் அடைந்த மூவரும் தங்களது நண்பரான பொன்.இசக்கி என்பவருடன் புதிய பேருந்து நிலையத்துக்கு வந்து நடத்துநர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்து இருக்கிறார்கள். இதில் பலத்த காயம் அடைந்த செல்வாவை, உடனடியாக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்குத் தீக்காயம் அதிகமாக இருந்ததால், மதுரை மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். ஆனால், சிகிச்சை பலன் இல்லாமல் அவர் உயிரிழந்தார். பொன்.இசக்கி என்பவர் தலைமறைவாக இருக்கிறார். அவரை கைதுசெய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது'' என்றார்.

சமூக ஆர்வலரும் மதுவுக்கு எதிராகத் தொடர்ந்து போராடிவருபவருமான வெங்காடம்பட்டி திருமாறன், ''மது, எந்த அளவுக்கு சமூக அவலத்தை ஏற்படுத்தும் என்பவதற்கு இதுவும் ஓர் உதாரணம். மது போதையின் பிடியில் சிக்கி இளைஞர்கள் தங்கள் உடல்நலத்தை இழப்பதுடன்... கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களிலும் துணிச்சலாக ஈடுபடுகிறார்கள். மது விற்பனையால் அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்தாலும்... மறுபக்கம் சமூக அமைதி சீர்குலைவதுடன், அவர்களின் உடல்நலக்குறைவு காரணமாகப் பல கோடி ரூபாயை அரசு செலவுசெய்ய வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. மதுக்கடைகளின் வாசலில் நிறைய இளைஞர்களையும் சிறுவர்களையும் பார்க்க முடிவது, நமது கலாசாரத்துக்கு விடப்பட்ட சவால். மதுக்கடைகள் மூடப்படும் நாளே, நமக்கு மற்றொரு சுதந்திர தினமாக இருக்கும்'' என்றார் அக்கறையுடன்.

வருவாய் போதையில் இருக்கும் தமிழக அரசு விரைவில் விழிக்க வேண்டும்.

- ஆண்டனிராஜ், உ.சிவராமன்

அடுத்த கட்டுரைக்கு