Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘ஒழுக்கம்’ முத்திரையால் இந்தியாவில் அவமானப்படுத்தப்படும் பெண்கள் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

பெண்கள்

ழுக்கம்... வாதங்களால் வீழ்த்த முடியாத பெண்ணை, இந்த ஒரு வார்த்தை சொல்லி வீழ்த்திவிடும் சமூகத்தில் வாழ்ந்துவருகிறோம். குடும்பத்தில் ஆரம்பித்து தெருவில் கடந்து போகும் ஆட்கள் வரை பெண்ணைக் குறிபார்த்து எய்யும் ஒரு வார்த்தை ஒழுக்கம். உங்களுக்குத் தெரியுமா... நம் நாட்டில் 2015ம் ஆண்டு வரை இந்த வார்த்தையைச் சொல்லி அவமானப்படுத்தப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 25.2 சதவிகிதம் என்று?  

 

பெண்கள்

 

ஆண், பெண் சமம் என்பது வாய் வார்த்தையாலும் எழுத்திலும் சொல்லப்படும் சம்பிரதாயமாகவே உள்ளது. உலக அளவில் ஆண்களால் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பல்வேறு அடக்குமுறைகளுக்குப் பெண்கள் ஆளாகின்றனர். பெண்கள் என்றாலே, ஆண்களுக்குக் கட்டுப்பட்டவர்கள் என்ற எண்ணமே மேலோங்கி இருக்கிறது. 

 

இப்படித்தான் ஆடை அணிய வேண்டும், இப்படித்தான் பேச வேண்டும். இப்படித்தான் நடக்க வேண்டும் என எழுதப்படாத சட்டங்களைப் பெண்கள் மேல் இந்தச் சமூகம் திணித்துள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறும்போதும் பாதிப்புக்குள்ளான பெண்ணையே குற்றம் சுமத்தும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்கிறது. சமத்துவம், சமநீதி என்பது ஏட்டளவிலேயே உள்ளது. வரதட்சணை, பெண் சிசுக்கொலை, கருக்கொலை, தற்கொலை, குடும்ப வன்முறை, பெண்களின் ஒழுக்கம் பற்றி பேசுதல் எனப் பல்வேறு வன்முறைகள். பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க பல்வேறு சட்டங்கள் இருந்தபோதும், வெகு சிலரே நீதிமன்றம் ஏறிப் போராடுகின்றனர். தேசியக் குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் அறிக்கையின்படி (என்சிஆர்பி), கடந்த 2015-ம் ஆண்டில் 3 லட்சத்து 27 ஆயிரத்து 394 குற்றங்கள் பதிவாகியுள்ளன. 

 

பெண்களைப் பாலியல்ரீதியாக பார்த்தல், கையைப் பிடித்து இழுத்தல், ஆடையை இழுத்தல், உறவுக்கு அழைத்தல் ஆகியவற்றைக் குற்றங்களாக உச்ச நீதிமன்றம் வரையுறுத்துள்ளது. இத்தகைய குற்றங்களை இழைத்தவர்களுக்கு இந்தியத் தண்டனைச் சட்டம் 354 பிரிவின் கீழ், அதிகபட்சமாக ஐந்தாண்டு சிறைத் தண்டனையும் அபராதமும் உண்டு. 

 

கடந்த 2014-ம் ஆண்டு மட்டும் இந்திய அளவில் குடும்பத்தினர் மற்றும் வெளிநபர்களால் 82 ஆயிரத்து 235 பெண்கள் பாலியல்ரீதியாக அவமானப்படுத்தப்பட்டிருப்பது பதிவாகியுள்ளது. 2015-ம் ஆண்டு 82 ஆயிரத்து 422 பெண்கள் பாலியல் ரீதியாக அவமானப்படுத்தப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாகப் பதிவாகியுள்ள வழக்குகளில் 25.2 சதவிகிதம், குடும்பத்தினர் மற்றும் வெளிநபர்களால் பாலியல் ரீதியாக அவமானப்படுத்தப்பட்ட வழக்குகளாகும். ஒட்டுமொத்த வழக்குகளில் 2.7 சதவிகித பெண்கள், ஒழுக்கத்தின் பெயரால் அவமானப்படுத்தப்பட்டுள்ளனர். 

 

இதுகுறித்து வழக்கறிஞர் சுதா ராமலிங்கத்திடம் கேட்டபோது, ‘‘ஒரு பெண்ணைத் துன்புறுத்துவது, பலவந்தப்படுத்துவது, பாலியல்ரீதியாக சித்தரிப்பது ஆகியவை தண்டனைக்குரிய குற்றங்கள். இம்மாதிரியான நிகழ்வுகள் உலகளவில் தொடர்ந்து நிகழ்ந்த வருகிறது. பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் நீதிமன்றத்தை நாடுவதில்லை. மிகக் குறைந்த அளவினரே நீதிமன்றத்தை நாடுகின்றனர். வழக்குகள் அதிகரிப்பது, பெண்கள் மத்தியில் தைரியமாகத் தட்டிக்கேட்கும் விழிப்புஉணர்வு ஏற்பட்டுள்ளது என்று மட்டுமே பார்க்கக் கூடாது. குற்றங்கள் அதிகரிப்பதை உணர்ந்து தடுக்கும் வழிகளில் முழுவீச்சுடன் ஈடுபட வேண்டும். 

 

சமத்துவம் என்பதை வீடுகளில், பள்ளிகளிலிருந்து தொடங்க வேண்டும். ஆண், பெண் உடல் குறித்த புரிதல் கல்வியாக குழந்தைகளுக்கு வழங்கப்பட வேண்டும். இருவரையும் சமமாகப் பார்க்க வேண்டும் என்ற பார்வையைக் குழந்தைகள் மனதில் விதைக்க வேண்டும். இது, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கடமை. வீடுகளில், சமத்துவத்துக்கு ரோல்மாடலாக பெற்றோர் திகழ்ந்து வழிநடத்த வேண்டும். தவறு நடக்கும்போது தட்டிக்கேட்கும் தைரியம் பெண்களுக்கு வேண்டும். பல சமயங்களில், பெண்கள் தங்கள் வாழ்வே பறிபோனதாக நினைத்து ஒதுங்கிவிடுகின்றனர். தட்டிக்கேட்பதன் வழியே அடுத்து நிகழ இருக்கும் தவறுகளைத் தடுக்கலாம். அடுத்த பெண்களைக் காப்பாற்றுகிறோம் என்ற மனநிலைக்குப் பெண்கள் வரவேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக ஆண், பெண் பாரபட்சமின்றி போராட வேண்டும். இத்தகைய சூழல் முழுமையாக நிலவும்போது, குற்றங்கள் குறையத் தொடங்கும்’’ என்கிறார். 

 

மனித மனங்களில் மாற்றத்தை விதைப்போம்; ஆண், பெண் சமத்துவத்தை அறுவடை செய்வோம்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close