Published:Updated:

சொல்லிக்கொடுக்க யாரும் இல்லை... ஒருவர்கூட பாஸ் ஆகவில்லை!

அதிரவைக்கும் பொறியியல் கல்லூரி ரிசல்ட்

பிரீமியம் ஸ்டோரி

இந்தியாவில் அதிகமான பொறியியல் கல்லூரிகளைக் கொண்ட மாநிலம் ஆந்திரா. இரண்டாவது இடத்தில் தமிழ்நாடு இருக்கிறது. அத்தகைய பெருமைக்குரிய தமிழ்நாட்டில், கடந்த ஆண்டு

சொல்லிக்கொடுக்க யாரும் இல்லை... ஒருவர்கூட பாஸ் ஆகவில்லை!

பொறியியல் படிப்பில் சேர்ந்த மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதம்தான் கவலைகொள்ள வைக்கிறது.

2013-ம் கல்வி ஆண்டில் தமிழகம் முழுவதும் உள்ள 506 பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியிருந்தார்கள். இதில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் 140 மாணவர்கள் தேர்வு எழுதி, ஒருவர்கூட பாஸ் ஆகவில்லை. அதேபோல், ஐந்து பொறியியல் கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில்தான் தேர்ச்சி சதவிகிதமே இருக்கிறது. பெரம்பலூரில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் 55 பேர் தேர்வு எழுதி ஒருவர் மட்டுமே தேர்ச்சிபெற்று இருக்கிறார். திண்டுக்கலில் ஒரு கல்லூரியில் 21 மாணவர்கள் தேர்வு எழுதி ஒருவர் மட்டுமே தேர்ச்சி அடைந்திருக்கிறார். காஞ்சிபுரத்தில் ஒரு கல்லூரியில் ஐந்து மாணவர்கள் மட்டுமே தேர்ச்சிபெற்று இருக்கிறார்கள். இப்படி மாவட்டத்துக்கு மாவட்டம் அண்ணா பல்கலைக்கழக ரிசல்ட் பல் இளிக்கிறது.

சொல்லிக்கொடுக்க யாரும் இல்லை... ஒருவர்கூட பாஸ் ஆகவில்லை!

தேர்ச்சி சதவிகிதம் இவ்வளவு குறைந்தது ஏன்? கல்லூரி மாணவர்களிடம் பேசினோம். 'கடந்த ஆண்டு இன்ஜினீயரிங் முடித்தவர்கள்தான் எங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிறார்கள். அவர்களுக்கே சப்ஜெக்டில் பல விஷயங்கள் தெரியவில்லை. சரியான உள்கட்டமைப்பு வசதிகளும் இல்லை. 100 சதவிகித தேர்ச்சி, 100 சதவிகித வேலைவாய்ப்பு என்று விளம்பரப்படுத்துகிறார்கள். அதை நம்பித்தான் நாங்களும் வந்து சேர்ந்தோம். ஆனால், இங்கே வந்த பிறகுதான் எல்லாம் பித்தலாட்டம் என்பது தெரிகிறது. இங்கே படிப்பவர்கள் பாஸ் ஆவதே பெரிய விஷயமாக இருக்கிறது. அப்புறம் எங்கே பிளேஸ்மென்ட் வாங்கித்தரப் போகிறார்கள்? சொல்லிக்கொடுக்கவும் ஆள் இல்லை. லேப் வசதியும் இல்லை. அப்புறம் மார்க் மட்டும் எப்படி வரும்?'' என்று வருத்தத்தோடு கேட்கிறார்கள்.

இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய கல்வி ஆலோசகர் முத்துகுமார், 'தமிழகத்தில் மட்டும் சுமார் 2.5 லட்சம் மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் ஆண்டுதோறும் சேருகிறார்கள். மாணவர்களிடம் இருந்து பணத்தை வாங்குவதில் உள்ள அக்கறை சொல்லிக்கொடுப்பதில் இருப்பது இல்லை. ஆண்டுதோறும் தனியார் பொறியியல் கல்லூரிகள் புற்றீசல்போல முளைக்கின்றன. இந்தக் கல்லூரிகளை ஒவ்வொரு வருடமும் ஆய்வு செய்கிறார்களா என்பதும் தெரியவில்லை. இந்த ஆண்டு தேர்ச்சி சதவிகிதம் குறைந்ததற்கு முக்கியக் காரணம், பொறியியல் படிப்பைச் சொல்லிக்கொடுக்கத் தகுதியான ஆசிரியர்கள் இல்லை.

புதிதாகச் சேரும் மாணவர்களும் கல்வி நிறுவனங்களைத் தேர்ந்தெடுப்பதில் அக்கறை காட்டுவது இல்லை. விளம்பரங்களைப் பார்த்து, எடுத்தோம் கவிழ்த்தோம் என சேர்ந்துவிடுகிறார்கள். கல்லூரிகளும் இதைப் பயன்படுத்திக்கொள்கின்றன. இன்று தமிழகத்தில் தரகு நிறுவனங்களைப்போலவே பொறியியல் கல்லூரிகள் செயல்படுகின்றன.

பொறியியல் கல்லூரிகளில் உள்ள அடிப்படைக் கணிதம் 11-ம் வகுப்பில் இருந்து தொடங்குகிறது. ஆனால், இன்று பெரும்பாலான பள்ளிகள் ப்ளஸ் டூ மதிப்பெண்களுக்காக 11-ம் வகுப்புப் பாடத்தை நடத்தாமல் நேரடியாக 12-ம் வகுப்பு பாடத்தை இரண்டு வருடங்கள் மனப்பாடம் செய்ய வைக்கிறார்கள். இதனால், மாணவர்​களுக்கு புரிந்துகொண்டு படிக்கும் திறன் இல்லாமல் போகிறது. மேற்படிப்புக்கு வரும்போது தடுமாற ஆரம்பிக்கிறார்கள். அனுமதி வழங்குவதோடு தங்கள் கடமை முடிந்துவிட்டது என நினைக்காமல் தகுதியான பேராசிரியர்களைக் கொண்டு பாடம் நடத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் பொறுப்பும் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு இருக்கிறது. இனியாவது அதைச் செய்ய வேண்டும்'' என்றார்.

அண்ணா பல்கலைகழகத்தின் துணைவேந்தர் ராஜாராம் என்ன சொல்கிறார்? 'ஒரு கல்லூரியில் ஒருவர்கூட தேர்ச்சி பெறவில்லை என்பதை அப்படியே பார்க்கக் கூடாது. அந்தக் கல்லூரியில் மொத்தமே 10 அல்லது 15 மாணவர்கள்தான் பயில்வார்கள். அவர்கள் எல்லோரும் தேர்ச்சி பெறவில்லை என்பதால் ஒருவர்கூட தேர்ச்சி பெறவில்லை என்ற தோற்றம் உண்டாகலாம். அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் அனைத்து கல்லூரிகளும் தரமானவை. நாங்கள் அனைத்து கல்லூரிகளையும் கண்​காணித்துக் கொண்டுதான் இருக்கிறோம்'' என்றார் நிதானமாக.

கல்லூரிகளும், மாணவர்களும் தவறை சரிசெய்துகொள்ள வேண்டிய தருணம் இது!

- நா.சிபிச்சக்கரவர்த்தி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு