Published:Updated:

கரன்ட் கட்... தோள்பட்டையில் வெட்டு...

அலறிய ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.

பிரீமியம் ஸ்டோரி

ஆளுங்கட்சி எல்.எல்.ஏ மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்படும் அளவுக்கு, தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு கொடிகட்டிப் பறக்கிறது.

சைக்கிள் கடை தொழிலாளியாக இருந்தவர் மானாமதுரை குணசேகரன். கட்சியில் படிப்படியாக உயர்ந்து, தொடர்ந்து இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினர் ஆனார். குணசேகரனின் சமீபத்திய நடவடிக்கைகளால் அவருக்கு தொகுதியில் சொந்தக் கட்சியினர் இடையே கடும் எதிர்ப்பு.  இந்த நிலையில் அவர் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல் சிவகங்கை மாவட்டத்தையே அதிரவைத்துள்ளது.

கரன்ட் கட்... தோள்பட்டையில் வெட்டு...

மானாமதுரை அண்ணா சிலை அருகே வைகை ஆற்றின் கரை பகுதியில் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு இருந்தது. மானாமதுரை பேரூராட்சியில் தீர்மானம் கொண்டுவந்து அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவுசெய்தனர். அப்போது உருவான தடங்கல்களை செம்மையாகச் சமாளித்தார் வெள்ளத்துரை. அந்தப் பகுதியில் வசித்துவந்தவர்கள், இப்போது வேறு இடங்களில் வாழ்ந்துவருகின்றனர்.

அந்த ஆக்கிரமிப்புப் பகுதியில்தான் மானாமதுரை நகர அவைத்தலைவராக இருந்த தெய்வசிகாமணி

கரன்ட் கட்... தோள்பட்டையில் வெட்டு...

என்பவரது வீடு இருந்தது. அவர் மறைந்த பின், அவருடைய குடும்பத்தினர் வேறு இடத்துக்கு மாறும் நிலை ஏற்பட்டது. அப்போது தெய்வசிகாமணியின் மகன் யோகேஸ்வரன் மற்றும் அவருடைய சகோதரி சத்யா ஆகியோர் எம்.எல்.ஏ குணசேகரனிடம், 'எங்களுக்கு நாங்கள் வசித்த அதே இடத்தில் பட்டா வாங்கித்தாருங்கள்’ என்று கேட்டுள்ளனர். 'கொஞ்ச நாள் போகட்டும். வாங்கித்தருகிறேன்’ என்று குணசேகரன் கூறியுள்ளார். இது நடந்து எட்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனாலும், குணசேகரன் உதவி செய்யவில்லை என்ற கோபம் அந்தக் குடும்பத்துக்கு இருந்துள்ளது.

''இந்த நிலையில் கடந்த 6-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை ஏழு மணி அளவில் அண்ணா சிலை அருகே உள்ள தனது நண்பரான சோமன் என்பவரது தொண்டு நிறுவன அலுவலகத்துக்கு குணசேகரன் காரில் வந்துள்ளார். அங்கு சோமனுடன் குணசேகரன் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு தனது நண்பர்கள் ஆறு பேருடன் குடிபோதையில் வந்த யோகேஸ்வரன், 'ஜமாபந்தி நேரம்தான் இது. இப்பகூட எங்களுக்கு அந்த இடத்துக்கு பட்டா வாங்கித்தர முடியாதா? நீ ஏன் எம்.எல்.ஏ-வா இருக்க?’ என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றியபோது, கரன்ட் கட் ஆகியுள்ளது. அடுத்த நிமிடமே தனது நண்பர்களுடன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் குணசேகரனை வெட்டியுள்ளார் யோகேஸ்வரன். தடுக்கி கீழே விழுந்த குணசேகரனின் தோள்பட்டையில் வெட்டு விழுந்தது. இருட்டில் யாரை வெட்டுகிறார்கள் என்று தெரியாமல் காப்பாற்ற முயன்ற சோமனுக்கும் அவருடைய அண்ணன் ஆறுமுகத்துக்கும் வெட்டு விழுந்தது. சத்தம் கேட்டு அருகில் நின்ற அவருடைய  டிரைவர் உள்ளிட்டவர்கள் ஓடிவந்ததைப் பார்த்தும், இந்த கும்பல் அங்கிருந்து தப்பியுள்ளது'' என்றனர் விவரம் அறிந்தவர்கள்.

தலையிலும் தோள்பட்டையிலும் வெட்டுபட்ட குணசேகரனை அவசர அவசரமாக மானாமதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை செய்தனர். அவரை மேல்சிகிச்சைக்காக மதுரை கொண்டுசெல்ல முடிவுசெய்யப்பட்டது. உடனே 108 ஆம்புலன்ஸுக்கு போன் செய்தனர். ஆனால் ஒரு மணி நேரம் ஆகியும் ஆம்புலன்ஸ் வரவில்லை. இந்தக்  கடுப்பில் அங்கு வந்த சிவகங்கை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னிஸை முற்றுகையிட்டு, ''ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-வை வெட்டி இருக்காங்க. இன்னும் ஆம்புலனஸ்கூட வரலை. நீங்க எதுக்கு பாதுகாப்புக்கு இருக்கீங்க?'' என்று எகிறினர் அவரது ஆதரவாளர்கள். அதன்பின் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மதுரை கொண்டுசெல்லப்பட்டார் குணசேகரன்.

சிவகங்கை மாவட்ட காவல் துறை, குற்றவாளிகளைத் தேடும் பணியில் தீவிரம் காட்டினர். அன்று இரவே சம்பவத்தில் தொடர்புடைய சசிகுமார், கார்த்திக், அஜித்குமார், கார்த்திக் ஆகிய நான்கு பேரை கைதுசெய்தனர். முக்கியக் குற்றவாளிகளான யோகேஸ்வரனும் பாலமுருகனும் 9-ம் தேதி மதுரையில் சரண்டர் ஆனார்கள்.

ஆனால். இந்த விவகாரம் இடப்பிரச்னையால் வந்தது அல்ல என்ற பேச்சும் மானாமதுரை முழுவதும் உலாவருகிறது.

நம்மிடம் பேசிய அ.தி.மு.க பிரமுகர் ஒருவர், ''எம்.எல்.ஏ-வா குணசேகரன் இருந்தாலும், கட்சியில் இவர் ஓரம்கட்டப்பட்டுத்தான் இருந்தார். இவருக்கும் யூனியன் சேர்மன் மாரிக்கும் பிரச்னை இருந்தது. அதோடு, மாவட்ட செயலாளரும் எம்.பி-யுமான செந்தில்நாதனையும் இவர் பகைத்துக்கொண்டார். அதனால், கட்சி நிகழ்ச்சிகள் குறித்து யாரும் அவருக்கு எந்தத் தகவலும் தெரிவிப்பது இல்லை. நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்துக்கு காரைக்குடிக்கு அம்மா வந்தபோது, இவரை பொக்கே கொடுக்கவிடாமல் தடுத்துவிட்டனர். இவர் வகிக்கும் ஒன்றியச் செயலாளர் பதவிக்கும் ஆபத்து இருந்து வந்தது. மேலும், வைகை ஆற்றில் மானாமதுரையில் தடுப்பணை கட்டும் பணியில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நெருக்கமான ஒருவர் கான்ட்ராக்ட் எடுத்துள்ளார். அந்தத் தடுப்பணை கட்டும் விவகாரத்தில் இவருக்கும் அந்த கான்ட்ராக்டருக்கும் பிரச்னை இருந்தது. இதுதவிர தலித் மக்களை அவமதித்தார் என்ற புகாரும் வாசிக்கப்படுகிறது. இப்படி ஊர் எல்லாம் விரோதம் சம்பாதித்து வைத்திருந்தார். இதோடு இவர் பெண்கள் விஷயத்தில் ரொம்ப வீக். இது கட்சிக்காரர்களுக்கு மட்டும் இல்லை; ஊருக்கே தெரியும். இதுதான் இந்த சம்பவத்துக்குக் காரணமா என்றும் யோசிக்கிறார்கள்.

சில நாட்களுக்கு முன் மானாமதுரை ரயில்வே பகுதியைச் சேர்ந்த கிளங்காட்டூர் மற்றும் ஆவாரங்காடு ஆகிய இரண்டு கிராமங்களுக்கு இடையே பிரச்னை. இந்த இரண்டு கிராமங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு காவல் துறை சிலரை கைதுசெய்தது. அந்தப் பிரச்னையில் கிளங்காட்டூரில் இருக்கும் அவருக்கு நெருக்கமான பெண்ணின் தரப்புக்கு ஆதரவாக இவர் காவல் துறையில் பேசவில்லை என்ற கோபம் அந்தப் பெண்ணின் தரப்புக்கு இருந்தது. அந்தப் பெண்ணின் பையனும் யோகேஸ்வரனும் நண்பர்கள். இந்தக் கூட்டு உடன்படிக்கைதான் எட்டு மாதங்களுக்கு முன் எழுந்த பட்டா பிரச்னையை இப்போது உசுப்பிவிட்டுவிட்டது. பெண்கள் விவகாரம் வெளியே தெரியாமல் காவல் துறை காய் நகர்த்தி வருகிறது'' என்று அதிர்ச்சியான தகவலை அடுக்கினார்.

கரன்ட் கட்... தோள்பட்டையில் வெட்டு...

சிவகங்கை டி.எஸ்.பி-யான மோகன்ராஜிடம் இதுகுறித்து பேசியபோது, ''இது முழுக்க பட்டா கிடைக்கவில்லை என்ற கோபத்தின் வெளிப்பாடுதான். அந்தப் பையன் குடிபோதையில் இவருக்கு போன் பண்ணி இருக்கிறான். போதையினால்தான் விவகாரம் எல்லை மீறிப் போய்விட்டது. அந்தப் பையனின் அக்கா சத்யா, போலீஸில்தான் வேலை பார்க்கிறார். சம்பவத்துக்கு முன் அவரிடமும் போனில் பட்டா விஷயமாக எம்.எல்.ஏ பேசியிருப்பது தெரியவந்துள்ளது. மற்ற விவகாரங்களை விசாரித்து வருகிறோம்'' என்றார்.

சம்பவத்துக்குக் காரணம் மது போதையா, மங்கை போதையா காவல் துறைதான் கண்டுபிடிக்க வேண்டும்.

- அபுதாஹிர்

படங்கள்: எஸ்.சாய்தர்மராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு