Published:Updated:

'முதல் விக்கெட் சாய்ந்துவிட்டது!'

படுகொலைக்குப் பின் பரிமாறிக்கொள்ளப்பட்ட எஸ்.எம்.எஸ்.

பிரீமியம் ஸ்டோரி

'பஹிலி விக்கெட் பட்லி’ என்ற மாராட்டிய வாக்கியத்துக்கு அர்த்தம், 'முதல் விக்கெட் சாய்ந்துவிட்டது’ என்பது. மராட்டிய மாநிலம், புனேவைச் சேர்ந்த மொஹ்சின் சாதிக் ஷேக் என்ற 23 வயது இளைஞனைக் கொலைசெய்த கும்பல், அந்த வெறிச் செயலை வெற்றிச் செய்தியாக தங்களுக்குள் 'பஹிலி விக்கெட் பட்லி’ என்ற வாக்கியத்தை குறுஞ்செய்தியாக அனுப்பித்தான் பகிர்ந்துகொண்டனர்!

ஃபேஸ்புக்கில் தங்களை விமர்சித்து கருத்துப் பதிவுசெய்பவர்களைத் தாக்கியவர்கள், உடமைகளைச்

'முதல் விக்கெட் சாய்ந்துவிட்டது!'

சேதப்படுத்தியவர்கள், போலீஸில் புகார் செய்து அதிகாரத்தைக் காட்டி மிரட்டியவர்கள், இப்போது கொலைசெய்யவும் துணிந்துவிட்டனர். அதற்கு உதாரணம்தான், மொஹ்சின் சாதிக் ஷேக் படுகொலை.

மராட்டிய மன்னர் வீர சிவாஜி, சிவசேனா கட்சித் தலைவர் பால் தாக்கரே பற்றி கடந்த வாரம் ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்-அப் போன்றவற்றில் மோசமாக சித்திரிக்கப்பட்ட படங்களும் செய்திகளும் வெளியானது. இந்தப் படங்களும் செய்திகளும் மும்பை, புனே போன்ற பகுதிகளில் அதிகமானவர்களால் பகிரப்பட்டன. அதனை எதிர்த்து சிவசேனா ஆதரவு அமைப்புகள் கலவரத்தில் குதித்தன. மராட்டிய பகுதியில் பதற்றம் பற்றிக்கொண்டது.

சிவசேனா, ஹிந்து ராஷ்டிரிய சேனா, பாரதிய ஜனதா உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், இஸ்லாமியர்கள்தான் இந்த அவதூறுகளுக்குக் காரணம் என்று சொல்லி (யார் காரணம் என்பது இந்த நிமிடம் வரை உறுதி செய்யப்படவில்லை) கடைகளை அடித்து நொறுக்கினர். பேருந்துகளில் கற்கள் வீசப்பட்டன. சில இடங்களில் தீ வைத்தும் எரிக்கப்பட்டன. இந்தக் கலவரத்தால் மட்டும் 200 பேருந்துகள் நாசமடைந்துள்ளன என்று அரசாங்கத்தின் அதிகாரபூர்வ கணக்குத் தெரிவிக்கிறது. இப்படி கலவரம் கொஞ்சம் கொஞ்சமாக உச்சமடைந்துகொண்டிருந்த நேரத்தில், கலவரக் கும்பலின் கையில் வசமாக சிக்கினார் சாதிக் ஷேக்.

கடந்த 2-ம் தேதி மாலை பள்ளிவாசலில் தொழுகையை முடித்து திரும்பிக்கொண்டிருந்தார் அவர்.  தாடி வைத்திருந்த அவர், தலையில் குல்லாவும் பச்சை நிற பதானி குர்தாவும் அணிந்திருந்தார். டூ-வீலரில் வந்துகொண்டிருந்த சாதிக் ஷேக்கை இழுத்துப்போட்டு ஹாக்கி மட்டையால் கொடூரமாக அடித்தனர். கற்களைக்கொண்டு காயப்படுத்தினர். அவருடைய நண்பர் ரியாஸ் ஓடிப்போய், அமீன் ஷேக், இஜாஸ் யூசுப் பக்வான் ஆகிய நண்பர்களை அழைத்துவந்தார். ஆனால், காப்பாற்ற வந்தவர்களுக்கு தங்களைக் காப்பாற்றிக்கொள்வது பெரும்பாடாகிப் போனது. அந்தத் தாக்குதலில் அவர்களுக்கும் பலத்த காயம். குற்றுயிரும் குலையுயிருமாக மயங்கிவிழுந்த சாதிக் ஷேக்கையும் அவருடைய நண்பர்களையும் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அதில், சாதிக் ஷேக் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிட்டார்.

சாதிக் ஷேக் படுகொலைக்குக் காரணம், ஹிந்து ராஷ்டிரிய சேனா அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான் என்று சொல்லி 17 பேரை காவல் துறை கைதுசெய்துள்ளது. கைதுசெய்யப்பட்ட பலர், ஏற்கெனவே கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டு சிறைக்குச் சென்று வந்தவர்கள். ஹிந்து ராஷ்டிரிய சேனா அமைப்பின் தலைவர் தனஞ்செய் தேசாயும் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் மீதும் பணம் பறிப்பு குற்றங்களில் ஈடுபட்டதாக வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள, புனே காவல் துறை இணை ஆணையர் சஞ்சய் குமார், ''வீர சிவாஜி, பால் தாக்கரே பற்றி அவதூறான செய்திகளை முதலில் அனுப்பியது யார் என்பது பற்றி உறுதியான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. அதைத் தெரிந்துகொள்வதற்கு, அமெரிக்காவில் உள்ள ஃபேஸ்புக் அலுவலகத்துக்குக் கடிதம் எழுதியுள்ளோம். அதுபற்றிய தகவல் வருவதற்கு ஒரு மாதம் ஆகும். இந்தக் கால தாமதத்தைப் பயன்படுத்தி, குற்றவாளிகள் தப்பிவிடக் கூடாது என்பதற்காக கூடுதல் கவனத்துடன் செயல்படுகிறோம்.

சாதிக் ஷேக் கொலை வழக்கில், அவருடைய நண்பர்கள் சொன்ன தகவலை வைத்து முதலில் ஏழு பேரை கைதுசெய்தோம். அவர்கள் கொடுத்த தகவல் மற்றும் டூ-வீலர் ஆவணங்களை வைத்து இன்னும் 10 பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் இந்தக் கொலையைச் செய்துவிட்டு தங்களுக்குள் 'பஹிலி விக்கெட் பட்லி’ என்று குறுஞ்செய்தி அனுப்பியுள்ளனர். அந்த ஆதாரங்களையும் நாங்கள் கைப்பற்றி உள்ளோம். நிச்சயம் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்'' என்று சொல்லியுள்ளார்.  

மாராட்டிய உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.படேல், ''ஃபேஸ்புக்கில் நடந்த அவதூறுக்கும் அந்த இளைஞருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவர் ஒரு அப்பாவி. இந்தப் படுகொலை மதவெறியின் காரணமாகவே நடைபெற்றுள்ளது. புனே காவல் துறையிடம் இந்த வழக்கு பற்றி அறிக்கை கேட்டுள்ளோம். அது கிடைத்த பிறகு, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று சொல்லியுள்ளார்.

ஆனால், இவற்றுக்கு நேர்மாறாக கருத்துத் தெரிவித்துள்ளார் பி.ஜே.பி-யின் புனே தொகுதி எம்.பி-யான அனில் ஷிரோல். ''ஃபேஸ்புக்கில் நடந்த அவதூறுக்கு எதிர்வினை இருக்கத்தானே செய்யும்?'' என்று சொல்லியுள்ளார். அவருடைய இந்தக் கருத்து, 'இது போன்ற காரியங்களைச் செய்பவர்கள் யார்? அவர்களின் நோக்கம் என்ன? எதிர்காலத்தில் அவர்களின் செயல்பாடு என்னவாக இருக்கப்போகிறது?’ என்ற அனைத்து கேள்விகளுக்கும் விடையளிப்பதாக இருக்கிறது!  

- ஜோ.ஸ்டாலின்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு