Published:Updated:

காவலர்கள் காட்டுமிராண்டித்தனம் நியாயப்படுத்தும் அரசாங்கம்!

பி.பி எகிற வைக்கும் உ.பி. கற்பழிப்பு!

பிரீமியம் ஸ்டோரி

ஆதிக்க சாதித்தனம்... போலீஸ் அத்துமீறல்... அரசியல் அதிகாரத்தின் ஒடுக்குமுறை... இவையெல்லாம் இன்றைய இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக எப்படி பின்னிப் பிணைந்து செயல்படுகின்றன என்பதற்கு உதாரணம் உத்தரப்பிரதேசம், கத்ரா சகோதரிகள் கற்பழிப்பு விவகாரம்.

காவல் துறையினர் செய்த இந்த வன் செயலுக்கு அந்த மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் சொன்ன விளக்கம்தான் அதிர்ச்சிகரமானது.

''நம் நாட்டில் கற்பழிப்பு என்பது அன்றாட நிகழ்வாகிவிட்டது. எல்லா மாநிலத்திலும் கற்பழிப்பு நடக்கிறது. அதில் உத்தரப் பிரதேசம் பெரிய மாநிலம் என்பதால், இங்கு கற்பழிப்பு எண்ணிக்கை அதிகமாக இருப்பது சாதாரணம்தான். ஊடகங்கள்தான் இதைப் பெரிதுபடுத்துகின்றன'' என்று பொறுப்பற்ற பதிலைச் சொல்லியிருக்கிறார் அகிலேஷ் யாதவ்.

காவலர்கள் காட்டுமிராண்டித்தனம் நியாயப்படுத்தும் அரசாங்கம்!

அவரது கட்சியைச் சேர்ந்த மற்றத் தலைவர்களும் அமைச்சர்களும் மன்னன் எவ்வழியோ நாங்களும் அவ்வழியே என்பதுபோல், அகிலேஷ் யாதவின் பொறுப்பற்ற கருத்தை மிஞ்சும் அளவுக்குப் பேசிக்கொண்டு இருக்கின்றனர்.

உத்தரப்பிரதேச மாநிலம், பதூன் மாவட்டம், உஷைத் பகுதியில் அமைந்துள்ள கத்ரா கிராமத்தில் வசித்துவந்தனர்  தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவர். ஒருவரின் வயது 14. மற்றொருவரின் வயது 15. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, தங்கள் வீட்டில் கழிப்பறை இல்லாத காரணத்தால் அருகில் உள்ள மறைவான பகுதிக்குச் சென்றார்கள். நீண்ட நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பவில்லை. இதையடுத்து பதறிப்போன பெற்றோர்கள், உஷைத் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க முயன்றுள்ளனர். போலீஸ்காரர்கள் புகாரை வாங்கவில்லை. போராடிப் பார்த்துவிட்டு, அழுதபடியே இரவைக் கழித்துள்ளனர். மறுநாள் காலை. அவர்கள் வீட்டில் இருந்து சரியாக 250 மீட்டர் தொலைவில் இருக்கும் மாமரத்தில் இரண்டு பெண்கள் துப்பட்டாவால் கழுத்தைக் கட்டி தொங்கவிடப்பட்டு இருக்கின்றனர் என்ற தகவல் கிடைத்தது. பதறியடித்துப் போய் பார்த்தபோது, தூக்கில் தொங்கிய இரண்டு பெண்களும் இவர்களின் மகள்கள். உடனடியாக அந்தப் பகுதி மக்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.  சம்பவ இடத்தில் இருந்து, கூப்பிடு தூரத்தில் இருந்த போலீஸ்காரர்கள் யாரும் வரவே இல்லை. சாக்குப்போக்குச் சொல்லி காலம் கடத்தினர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். அதன் பிறகு சாவகாசமாக வந்த போலீஸை நோக்கி மக்களின் ஆத்திரம் திரும்பியது. மரத்தில் தொங்கிக்கொண்டிருந்த பெண்களின் உடலை போலீஸ்காரர்கள் கைப்பற்ற மக்கள் அனுமதிக்கவில்லை.

பகுஜன் சமாஜ்வாடி கட்சி சட்டமன்ற உறுப்பினர் நீரஜ் மவுரியா, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரிஜ்பால் சாக்கியா ஆகியோர் வந்து போராட்டக்காரர்களை சமாதானம் செய்துள்ளனர். அதன் பிறகே, போலீஸ்காரர்கள் பிணங்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்ப முடிந்தது. கிட்டத்தட்ட 12 மணி நேரம், மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த இரண்டு சிறுமிகளின் பிணங்களை சுற்றிலும் உட்கார்ந்து, போராடிக்கொண்டு இருந்தவர்களுக்கு இடையே, 'எங்கள் பிள்ளைகளின் உடல்களை இறக்குங்கள்’ என்று அந்தப் பெற்றோர் கதறியது உச்சக்கட்டக் கொடுமை. பிரேதப் பரிசோதனைக்குப் பிறகுதான் இரண்டு பெண்களும் கற்பழிக்கப்பட்டு,  உயிருடன் தூக்கில் ஏற்றப்பட்ட கொடூரம் தெரியவந்தது. விவகாரம் ஊடகங்களில் வெளியாகி விஸ்வரூபம் எடுத்தது. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத், 'உ.பி மாநில அரசைக் கலைக்க வேண்டிவரும்’ என்ற தொனியில் கொஞ்சம் காட்டமாக எச்சரித்து அறிக்கைவிட்டார். அதன் பிறகுதான் நடவடிக்கைகளை மாநில அரசு கொஞ்சம் வேகமாக முடுக்கியது.

விசாரணையில், இரண்டு பெண்களையும் கற்பழித்துக் கொலை செய்தது உஷைத் காவல் நிலைய காவலர் சர்வேஷ் யாதவ், பப்பு யாதவ், பிரிஜேஷ் யாதவ் உள்ளிட்ட ஏழு பேர் என்பது தெரியவந்துள்ளது. அதனால்தான் புகாரை உஷைத் காவல் நிலையத்தில் வாங்கிக்கொள்ளவில்லை. இதையடுத்து உடனடியாக சர்வேஷ், பப்பு, பிரிஜேஷ் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். முதல் நாள் இரவு அந்தச் சிறுமிகளின் பெற்றோரிடம் புகாரை வாங்க மறுத்த காவலர்கள் ரஷ்பால் யாதவ், ராம் விலாஸ், சத்ரபால் யாதவ் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.  குற்றவாளிகள் மீது சதித் திட்டம் தீட்டியது, கொலை, பாலியல் வல்லுறவு உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. மாநிலம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 42 ஐ.பி.எஸ்., 66 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைப் பந்தாடி உள்ளது மாநில அரசு. அதிலும் குறிப்பாக நான்கு ஐ.ஜி-க்கள் மற்றும் 10 டி.ஐ.ஜி-க்கள் வேறு மாநிலங்களுக்கு விரட்டி அடிக்கப்பட்டு உள்ளனர். இப்போது இந்த நடவடிக்கைகளை தங்களின் சாதனையாக மாநில அரசு சொல்லிக்கொண்டு இருக்கிறது. அத்துடன் கருணைத் தொகையாக ஐந்து லட்சம் ரூபாயை மாநில அரசு அந்தக் குடும்பத்துக்கு அறிவித்தது. ஆனால், சிறுமிகளின் பெற்றோர் அதைப் பெற்றுக்கொள்ளவில்லை.

''சி.பி.ஐ விசாரணை தேவை. கொலைகாரர்களை கைதுசெய்து உரிய தண்டனை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்காமல், கொலைகாரர்களின் சார்பில் நஷ்ட ஈடு கொடுப்பது எந்த விதத்திலும் ஈடாகாது'' என்று அவர்கள்  கொந்தளித்துள்ளனர்.

வழக்கம்போல், இந்த விவகாரத்தில் மாநில அரசியல் சூடுபிடித்துள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில், ராகுல் காந்தி பாதிக்கப்பட்ட பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். நீதி கேட்டுப் போராட்டங்கள் சூடுபிடித்துள்ளன.

கண் கெட்ட பின்பு இன்னும் எத்தனை முறைதான் சூரிய நமஸ்காரங்களோ?

- ஜோ.ஸ்டாலின், நா.சிபிச்சக்கரவர்த்தி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு