Published:Updated:

துரோகம்... மிரட்டல்...மர்ம மரணம்!

ஊனமுற்றவருக்கு நடந்த விபரீத முடிவு

பிரீமியம் ஸ்டோரி

மதுரை பனகல் சாலையில் இருந்த மரத்தில் இரண்டு கால்களும் ஊனமான ஒருவர் தூக்கில் தொங்கிய காட்சி அனைவரையும் திடுக்கிட வைத்துள்ளது. இத்தகைய பரிதாபமான முடிவை எடுத்தவர் பெயர் அண்ணாதுரை!

துரோகம்... மிரட்டல்...மர்ம மரணம்!

அண்ணாதுரையின் சகோதரர் முருகானந்தம் நடந்ததை விரிவாகச் சொனனார். ''என் அண்ணன், போலியோவால் இரண்டு கால்களும்  பாதிக்கப்பட்டவர். அவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள். பனகல் சாலையின் ஓரம் ஹெல்மெட் மற்றும் கண்ணாடிகள் விற்பனை செய்துவந்தார். ஆறு மாதங்களுக்கு முன் அவரது மனைவி லட்சுமி வேறு ஒருவருடன் போய்விட்டார். அதற்குக் காரணமான செபஸ்தியான் என்பவரிடம், கடந்த பிப்ரவரி மாதம் 'ஏண்டா இப்படி பண்ணின?’ என்று வாக்குவாதம் பண்ணியிருக்கிறார். பதிலுக்கு செபஸ்தியான் எனது அண்ணனை அடித்து உதைத்தார். சாலையில் போவோர் நடந்த சம்பவத்தைப் பார்த்து, 'ஒரு ஊனமானவரின் வாழ்க்கையைக் கெடுத்ததும் இல்லாமல் இப்படி பொது இடத்தில் அடிக்கிறாயா?’ என்று செபஸ்தியானை நையப்புடைத்துள்ளனர். மதிச்சியம் காவல் நிலையத்தில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி, அண்ணன் மீது செல்போனையும் பணத்தையும் அடித்துப் பறித்துவிட்டதாக செபஸ்தியான் வழக்கு போடவைத்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, 'இரண்டு கால்களும் ஊனமான இவரா அடித்துப் பறித்தார்? பொய் வழக்கு போட ஒரு முகாந்திரம் வேண்டாமா?’ என்று போலீஸாரை எச்சரித்து, ஜாமீனில் அனுப்ப உத்தரவிட்டார். அடுத்த நாள் காவல் நிலையத்தில் கையெழுத்துப் போடச் சென்றவரை எஸ்.ஐ செல்வராஜ், 'நீதான் அண்ணாதுரையா?’ என்று கேட்டு பூட்ஸ் காலால் உதைத்து கீழே தள்ளி அடித்துள்ளார். அண்ணன் தன் நண்பர்களுக்கு போன் செய்து தன் நிலைமையைச் சொல்ல... அவர்கள் அரசு ராஜாஜி மருத்துவமனையில் அண்ணனை அட்மிட் செய்தனர். பிறகு, ஊனமுற்றோர் அமைப்புகள் மூலம், மாநில மனித உரிமை ஆணையம், உள்துறைச் செயலாளர் என்று 10-க்கும் மேற்பட்ட இடங்களுக்குப் புகார் அனுப்பினர். விவகாரம் பெரிதாவதை அறிந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவரை காவல் துறையினர் சந்தித்து, 'எஸ்.ஐ உன்னைத் தெரியாமல் அடித்துவிட்டார். நீ புகாரை வாபஸ் வாங்கு’ என்று கேட்டனர். அண்ணன் அதற்கு மறுத்துவிடவே, 'போலீஸ்காரன் மீதே புகார் பண்ணினா, உன்னை சும்மா விடுவோமா? கஞ்சா கேஸ், விபசார புரோக்கர் கேஸுன்னு போட்டு உன்னை அழிச்சுடுவோம்’ என்று மிரட்டிவிட்டுச் சென்றனர்.

இதற்கு இடையில் சிகிச்சை பெற்று வீட்டுக்கு வந்து ஒரு மாதம் ஆன பிறகும்,  வழக்கை வாபஸ் வாங்கு என்று தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார் எஸ்.ஐ. இந்த நிலையில் கடந்த 9-ம் தேதி காவல் நிலையத்தில் வைத்து மதியம் மூன்று மணி வரை மிரட்டி இருக்கிறார்கள். அதற்குப் பிறகு அன்று இரவு மர்மமான முறையில் என் அண்ணன் நடுரோட்டில் பிணமாகத் தொங்கினார்'' என்றார் கதறியபடி.

அண்ணாதுரை மரணத்தில் மர்மம் இருப்பதாக தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு சார்பில் புகார் அனுப்பி உள்ளனர். ''மாற்றுத் திறனாளியான அண்ணா துரை எப்படி அவ்வளவு பெரிய மரத்தில் ஏறி தூக்குப் போட்டுக்கொள்ள முடியும்?'' என்பது அந்த அமைப்பினரின் கேள்வி.

எஸ்.ஐ செல்வராஜ் விடுமுறையில் இருப்பதால் சம்பந்தபட்ட காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அழகரிடம் பேசினோம். ''அண்ணாதுரை அவராகத்தான் தற்கொலை செய்துகொண்டார். செபஸ்தியானை, அண்ணாதுரையும் அவருக்கு வண்டி தள்ளுபவரும் சேர்ந்து அடித்து இருக்கிறார்கள். அதனால், வழக்கு போடப்பட்டது. எஸ்.ஐ செல்வராஜ் திடீர் நகருக்குப் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்'' என்றார்.

மன ஊனம்தான் இந்தச் சம்பவத்துக்கு அடிப்படைக் காரணம்!

- சண்.சரவணக்குமார்

படம்: பா.காளிமுத்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு