Published:Updated:

'தண்ணி அடிச்சாங்க... அக்காவை தூக்கிட்டுப் போயிட்டாங்க...'

பொள்ளாச்சி கொடூரம்

பிரீமியம் ஸ்டோரி

உத்தரப்பிரதேசத்தில் நிகழந்த பாலியல் பலாத்கார கொடூரத்துக்கு நாம் 'உச்’ கொட்டிக்கொண்டிருக்கும்

'தண்ணி அடிச்சாங்க... அக்காவை தூக்கிட்டுப் போயிட்டாங்க...'

நேரத்தில், பொள்ளாச்சியில் இரண்டு சிறுமிகள் கோரமாக சீரழிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த சம்பவம் நடந்தது ஒரு பள்ளி விடுதியில் என்பது உச்சக்கட்ட கொடுமை.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி பேருந்து நிலையம் அருகே உள்ளது டி.இ.எல்.சி தேவாலயம். இந்த தேவாலயத்தின் சார்பில்  அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி ஒன்று இருக்கிறது. மூன்று மாணவிகள் உட்பட 20 மாணவர்கள் இந்தப் பள்ளியின் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.

11-ம் தேதி நள்ளிரவு திடீரென மாணவிகள் அலறல் சத்தம் கேட்க... அதிர்ந்தெழுந்த சக மாணவர்கள், சத்தம் கேட்ட திசையை நோக்கி ஓடினர். விடுதியை ஒட்டி இருந்த கட்டடத்தின் மாடியில் முனகியபடி, ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்தனர் இரு மாணவிகள். உடனடியாக அவர்கள் இருவரையும் மீட்ட மாணவர்கள், விடுதி நிர்வாகத்துக்குத் தகவல் தர, விஷயம் போலீஸுக்குப் போனது. மாணவிகள் இருவரும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட இரு மாணவிகளும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள். படிப்பறிவில்லாத இந்த மாணவிகளின் குடும்பத்தினர், ''நல்லா பாத்துப்பாங்கன்னுதானே இங்கே அனுப்பி வெச்சோம். இப்படி பண்ணிட்டாங்களே?' என கதறி அழுதனர்.

விடுதி மாணவர்கள் சிலரிடம் பேசினோம். 'நைட் 11.30 மணி இருக்கும். ரெண்டு பேர் வந்தாங்க. கதவை அடிச்சு திறந்து உள்ளே வந்து, கத்தி, பிளேடு எல்லாத்தையும் காட்டி எங்களை மிரட்டி, ஹாஸ்டலுக்குள்ளேயே தண்ணி அடிச்சாங்க. அப்புறம் ரெண்டு அக்காவைத் தூக்கிட்டுப் போயிட்டாங்க. அப்புறம்தான் ஹாஸ்டல் வார்டன்கிட்ட சொன்னோம். எல்லோரும் தேடினாங்க. அப்போதான் பக்கத்துல இருந்த கட்டடத்து மேல இருந்து அக்கா அழுகற மாதிரி சத்தம் கேட்டுச்சு. அங்கே போய் அக்காங்களை அழைச்சுட்டு வந்தாங்க. இதே மாதிரி மூணு நாளுக்கு முன்னாடியும் ரெண்டு பேர் ஹாஸ்டலுக்குள்ள வந்தாங்க. அப்பவே நாங்க சொன்னோம். நாங்க சொன்னதை யாரும் கேட்டுக்கலை' என்றார்கள் படபடப்புடன்.

'தண்ணி அடிச்சாங்க... அக்காவை தூக்கிட்டுப் போயிட்டாங்க...'

மருத்துவ பரிசோதனையில் மற்றுமொரு அதிர்ச்சி. இரண்டு மாணவிகளில் ஒருவர் ஏற்கெனவே பாலியல் கொடுமைக்கு ஆளாகியிருக்கக் கூடும் என மருத்துவ ஆய்வுகள் கூற, ஏற்கெனவே விடுதியில் இப்படியான சம்பவங்கள் நடந்திருக்கக் கூடும் என சந்தேகம் வலுத்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிகளில் ஒருவர் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இந்த விடுதியில் தங்கியிருக்கிறார். மற்றொருவர் சில தினங்களுக்கு முன்னர்தான் விடுதியில் சேர்ந்துள்ளார். சில தினங்களுக்கு முன்னர் சேர்ந்த மாணவிதான் பிறப்புறுப்பில் ரத்தம் வடிய கொடூர வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். மற்றொருவர் ஏற்கெனவே இதுபோன்ற அத்துமீறல்களுக்கு ஆளாகியிருக்கக் கூடும் என்று மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

சம்பவம் குறித்து விசாரிக்கச் சென்ற பொள்ளாச்சி சப் கலெக்டர் ரஷ்மி சித்தார்த்திடம் மாணவிகள் தங்களுக்கு நடந்த கொடூரத்தை விவரிக்க, அவர் மனம் தளர்ந்து மயங்கினார். சிகிச்சைக்குப் பின் இயல்பு நிலைக்குத் திரும்பிய சப் கலெக்டர், 'மாணவிகளுக்கு நடந்திருக்கும் நிகழ்வு மிகவும் கொடூரமானது. இரண்டு மாணவிகளுக்குமே 10 வயதுதான் ஆகிறது. சம்பந்தப்பட்ட விடுதி, முறையாக அனுமதி பெறவில்லை. மாணவிகள் தங்கும் விடுதியில் பெண் வார்டன்கள் இல்லை. போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லை. எனவே இந்த விடுதி மூடப்படும்'' என்றார்.  

சம்பந்தப்பட்ட விடுதி நிர்வாகிகளிடம் பேசினோம். 'இதுபோன்ற சம்பவம் இதுவரை நடந்தது இல்லை. மாணவிகள் பாதுகாப்போடு இருந்தார்கள். எதிர்பாராத விதமாக இப்படி நடந்துவிட்டது. இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்பது தெரியவில்லை'' என்று வருத்தப்பட்டார்கள்.

சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், இது தொடர்பாக சிலரைப் பிடித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மேற்கு மண்டல ஐ.ஜி தேவ ஆசீர்வாதம், எஸ்.பி சுதாகர் ஆகியோர் நேரில் விசாரித்தனர். 'இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் குறித்த சில 'க்ளூ’ கிடைத்துள்ளது. குற்றவாளிகள் வெகு விரைவில் கைது செய்யப்படுவார்கள்' என்று மட்டும் அவர்கள் சொன்னார்கள்.

காவல் துறை கண்துடைப்புக்காக எதையும் செய்யாமல் நிஜமான அக்கறையுடன் செய்ய வேண்டியது அவசியம்!

- ச.ஜெ.ரவி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு