Published:Updated:

'தலை சுத்துதா, மயக்கம் வர்ற மாதிரி இருக்குதா?'

'சிபி' தாண்டவம்

பிரீமியம் ஸ்டோரி

'நான் லவ் மேரேஜ் பண்ணிக்கிட்ட ஆளு, ஒழுக்கம் இல்லாதவன். 27 சின்னப் பொண்ணுங்களோட வாழ்க்கையை சீரழிச்சுருக்கான். என் வாழ்க்கையையும் நாசமாக் கிட்டான். அவன் பொண்ணுங்களைக் கடத்தி வித்துட்டுருக்கான்' - என்று திண்டுக்கல்லைச் சேர்ந்த ரெஜினா சொந்தக் கணவன் மீது இப்படிக் கொளுத்திப்போட்ட விஷயம், கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்துள்ளது.

'தலை சுத்துதா, மயக்கம் வர்ற மாதிரி இருக்குதா?'

ரெஜினாவை சந்தித்தோம். 'எனக்குச் சொந்த ஊர் மதுரை. என்னோட பெரிய அக்கா திண்டுக்கல்ல இருக்காங்க. அதனால, அடிக்கடி நான் திண்டுக்கல் வருவேன். ஒருமுறை திண்டுக்கல் வந்திருந்தப்போ, கடைக்குப் போயிட்டு வந்துட்டுருந்தேன். அப்போ, என் மேல ஒருத்தன் பைக்ல இடிக்கிற மாதிரி வந்தான். அவனைத் திட்டிட்டேன். என்னைத் திரும்பிப்பார்த்தவன், வீடு வரைக்கும் என்னை ஃபாலோ பண்ணிட்டே வந்தான். அதுக்குப் பிறகு அடிக்கடி நான் இருக்கிற இடத்துலயே சுத்த ஆரம்பிச்சான். ஒருநாள் என்கிட்ட வந்து, 'என்னோட பேரு சிபி. உன்னை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. நீயும் என்னை லவ் பண்ணு’ன்னு சொன்னான். நான் முடியாதுன்னு சொல்லிட்டு வந்துட்டேன்.

இன்னொரு நாள் ரோட்டுல என்னை வழிமறிச்சு, பாட்டிலை உடைச்சு கையை அறுத்துக்கிட்டு, 'நீ இல்லைன்னா நான் செத்துடுவேன்’னு அழுதான். பார்க்கவே பாவமா இருந்துச்சு. அதுக்கப்புறம்தான் அவனோட பேச ஆரம்பிச்சேன். 'என்னோட அப்பா இறந்துட்டார். அம்மா இன்னொருத்தர்கூட இருக்காங்க’னு சொன்னான். நானும் அவனை லவ் பண்ண ஆரம்பிச்சேன்.

அடிக்கடி என்னை மதுரைக்கு வந்தும் பார்க்க ஆரம்பிச்சான். அப்படி ஒரு தடவை மதுரைக்கு வந்து, 'அம்மா வந்திருக்காங்க. உன்னை பாக்கணும்னு சொன்னாங்க’னு சொல்லி என் மனசை மாத்தி பைக்லயே திண்டுக்கல்லுக்கு அவனோட வீட்டுக்குக் கூட்டிட்டு வந்தான். ஆனா, வீட்டுல யாருமே இல்லை. 'அம்மா வந்துடுவாங்க... இரு’ன்னு சொல்லி எனக்கு கூல்டிரிங்ஸ் கொடுத்தான். அதைக் குடிச்சதும் எனக்கு தலைசுத்த ஆரம்பிச்சுது. என்னைப் பார்த்து சிரிச்சுக்கிட்டே, 'என்னா... தலை சுத்துதா, மயக்கம் வர்ற மாதிரி இருக்குதா?’னு கேட்டுக்கிட்டே என்னை மாடிக்குத் தூக்கிட்டுப் போனான். என்னால எதுவும் பேச முடியலை. அங்கே வெச்சு என்னைக் கெடுத்துட்டான். எனக்கு நடக்குறதெல்லாம் தெரிஞ்சும், தடுக்க முடியலை.

'தலை சுத்துதா, மயக்கம் வர்ற மாதிரி இருக்குதா?'

என்கூட இருந்ததை செல்போன்ல வீடியோவும் எடுத்திருக்கான். அந்த வீடியோவைக் காட்டி மிரட்டி அடிக்கடி வீட்டுக்கு வரவழைச்சு, என்னை அவனது இச்சைக்கு பயன்படுத்திக்கிட்டான். அதுல நான் கர்ப்பமாகிட்டேன். 'சரி, நாம கல்யாணம் பண்ணிக்கலாம்’னு சொன்னேன். 'முடியாது’ன்னு சொல்லிட்டான். நான் போலீஸ்ல புகார் கொடுத்த பிறகுதான் கோயில்ல வெச்சு என்னைக் கல்யாணம் பண்ணிகிட்டான். கல்யாணத்துக்குப் பிறகு என்னை வீட்டைவிட்டு வெளியே விடவே இல்லை. ஒருநாள் சண்டை வந்ததுல கிரிக்கெட் பேட்ல என் வயித்துல அடிச்சிட்டான். அதுல எனக்கு அபார்ஷன் ஆயிடுச்சு.

சிபியோட ஃபிரெண்ட்ஸ்கிட்டெல்லாம் விசாரிச்சப்போதான் அவனைப்பத்தி சொன்னாங்க. 'உன்னை மாதிரி 27 பொண்ணுங்களை வீட்டுக்கு வரவழைச்சுக் கெடுத்துருக்கான்’னு சொன்னாங்க. அதுமட்டுமில்லாம சிபிகிட்ட சிக்கின பல பொண்ணுங்களை அவன் பெங்களூருல வித்துருக்கான். சிபி சிவப்பா அழகா இருக்குறதால, பொண்ணுங்க இவன்கிட்ட ஈஸியா மாட்டிக்குவாங்க. சிபியோட ஃபிரெண்ட்ஸ் கபிலன், தினேஷ்னு ரெண்டு பேரு இருக்காங்க. அவங்கதான் இது எல்லாத்துக்கும் உடந்தை.

நான் அவன் மேல ஸ்டேஷன்ல புகார் கொடுத்தேன். ஆனா, அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வீட்டுல இருந்து அவனுக்கு சப்போர்ட்டா போன் வரவும், அவன் மேல ஒரு நடவடிக்கையும் எடுக்காம விட்டுட்டாங்க. அப்பறம் நான் மதுரை போயிட்டேன். ஒருநாள் அவனோட வீட்டுக்குப் போனப்போ, பெட்ரூம்ல ஒரு பொண்ணோட இருந்தான். நான் நுழைஞ்சதும் அவ என்னைத் தள்ளி விட்டுட்டு ஓடுனா. அவன்கிட்ட அந்தப் பொண்ணு பத்தி கேட்டப்போ என்னை அடிச்சான்.

என்னை மாதிரியே அனுஷான்னு ஒரு பொண்ணையும் கல்யாணம் பண்ணி ஏமாத்தியிருக்கான். அந்தப் பொண்ணும் போலீஸுக்குப் போய் எந்த நடவடிக்கையும் இல்லை. நான் இப்போ வெளியில வந்து இதைச் சொல்றதால, 'கொலை பண்ணிடுவேன்’னு போன்ல மிரட்டினான். இனியும் அவனை விடக் கூடாது என்றுதான் நான் வெளியில் வந்து போராட ஆரம்பிச்சுட்டேன்!'' என்று ஆவேசமாகச் சொன்னார்.

சிபியைத் தொடர்புகொண்டோம். அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது. ரெஜினா குறிப்பிடும் சிபியின் நண்பர் கபிலனிடம் பேசினோம். 'சிபி எனக்கு ரொம்ப ஜூனியர். ஜிம்முக்குப் போறப்பதான் எனக்குப் பழக்கம். அவங்கப்பா இறந்துட்டார். அவங்கம்மா இங்கே இல்லை. இவனும் இவனோட தம்பி நிதினும் தனியா வீட்டுல இருந்தாங்க. நிதின் ரொம்ப சின்னப்பையன். ஸ்கூல்ல படிச்சுட்டுருந்தான். போன வருஷம் நான் லவ் மேரேஜ் பண்ணிக்கிற சூழ்நிலை வந்தது. அதனால தனியா வீடு தேவைப்பட்டப்போ... சிபியோட வீட்டுல நானும் என் மனைவியும் தங்கினோம். கொஞ்ச நாள்தான் அங்கு தங்கினோம். அதுக்கப்புறம்தான் இந்த ரெஜினாவோட அவனுக்கு தொடர்பு வந்துருக்கு. ரெஜினா சொல்ற மாதிரி அவன் அத்தனை பொண்ணுங்களை ஏமாத்தி கற்பழிச்சுருந்தா ஒரு பொண்ணுகூடவா வெளியே சொல்லாம இருக்கும்? அதில்லாம ஏகப்பட்ட பொண்ணுங்களை கடத்தி வித்துட்டதாகச் சொல்றாங்க. அதெல்லாம் அபாண்டம்.

சிபிக்கு நிறைய கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் இருந்தாங்க. அவன் அன்புக்கு ஏங்கின ஒரு பையன். ரெஜினாவையும் அப்படித்தான் விரும்பியிருக்கான். ரெஜினாவை விட்டுப் பிரிஞ்ச பிறகு அனுஷாங்கிற பொண்ணை லவ் பண்ணினான். ஆனா, அவங்க வீட்டுல இவனுக்கு ஏற்கெனவே கல்யாணம் ஆனது தெரிஞ்சதும் வேண்டாம்னு சொல்லிட்டாங்க. இப்போ கொஞ்ச நாளா நானும் அவன்கூட பேசுறது இல்லை'' என்று சொன்னார்.

இன்னொரு நண்பரான தினேஷிடமும் பேசினோம். 'சிபிக்கு நிறைய பொண்ணுங்க பழக்கம் உண்டு. எந்த நேரமும் போன்ல பொண்ணுங்ககிட்ட பேசிட்டே இருப்பான். ஃபேஸ்புக்ல சாட் பண்ணிட்டே இருப்பான். ஆனா, ஏமாத்தி கெடுத்துட்டான்னு சொல்றதை ஏத்துக்க முடியலை. அவன் வீட்டுல யாரும் இருக்க மாட்டாங்கங்கிறதால சரக்கு அடிக்க அவன் வீட்டுக்குத்தான் போவேன். அப்போ ஒரு பொண்ணுதான் அடிக்கடி அவனைப் பாக்க வரும். நான் டாக்ஸி டிரைவரா இருக்கேன். அவன் பொண்ணுங்களை கடத்தி வித்துட்டான்; அதுக்கு நானும் உடந்தை  என்று ரெஜினா சொல்லிட்டு இருக்கு. இதனால எனக்கு தொழில்ல பிரச்னை ஏற்பட்டுவிட்டது'' என்று வருத்தப்பட்டார்.

'தலை சுத்துதா, மயக்கம் வர்ற மாதிரி இருக்குதா?'

திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி ஜெயச்சந்திரனிடம் இதுபற்றிப் பேசினோம். 'அந்த ரெஜினா இதுவரைக்கும் என்னிடம் புகார் எதுவும் கொடுக்கவில்லை. புகார் கொடுத்தால் நிச்சயம் தனியாக லேடி எஸ்.ஐ-க்களை வைத்து விசாரிக்கச் சொல்கிறேன். மற்றபடி இதில் அரசியல் தலையீடு எதுவும் இல்லை!'' என்றார்.

அமைச்சர் நத்தம் விஸ்வநாதனிடம் இந்த விவகாரம் பற்றி கேட்டோம். ''என் வீட்டில் இருந்து யாரும் காவல் துறைக்கு போன் செய்யவில்லை. என் பெயரை வேறு யாராவது தவறாகப் பயன்படுத்தினார்களா என்று விசாரிக்கிறேன். தவறு செய்தது யாராக இருந்தாலும் காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்கட்டும்'' என்று உறுதியாகச் சொன்னார்.

'சிபி’ தாண்டவத்தை போலீஸ் எப்படி முடிவுக்கு கொண்டுவரப்போகிறதோ?

- ஜி.பிரபு

படங்கள்: வீ.சிவக்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு