Published:Updated:

இனி, சாவதைத் தவிர வேறு வழியில்லை!

போலீஸ் டார்ச்சரால் இறந்தாரா பழனிசாமி?

பிரீமியம் ஸ்டோரி
இனி, சாவதைத் தவிர வேறு வழியில்லை!

ரவுடிகளின் அட்டூழியம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து இறந்திருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், போலீஸாரின் தொல்லை தாங்க முடியவில்லை என்று ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு இறந்துபோன சம்பவம் சேலத்தில் நடந்திருக்கிறது.

 சேலம் ஜலகண்டபுரத்தை அடுத்த மலையம்பாளையத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவர்தான், ''போலீஸ்காரர்களின் அட்டூழியம் தாங்க முடியவில்லை. என் குடும்பத்தினரை அடிக்கடி மிரட்டுகிறார்கள்; அடிக்கிறார்கள். அதனால், உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கிறேன். இனி, சாவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை'' என்று, கடிதம் எழுதி வைத்துவிட்டு விஷம் குடித்து இறந்திருக்கிறார். இது தமிழக காவல் துறை வட்டாரத்தில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பழனிசாமியின் மூத்த மகன் சக்திவேல், ''எங்களுக்கு 38 சென்ட் நிலம் இருக்குது. அந்த நிலத்துக்குப் பக்கத்துல எங்க பங்காளி முத்துசாமி குடும்பத்துக்கு 17 சென்ட் இருக்குது. முத்துசாமியின் மகன்கள் பழனிசாமியும் கணேசனும், எங்க நிலத்துல எட்டரை சென்ட் சேர்த்து விற்க முயற்சி செஞ்சாங்க. அப்ப எங்ககிட்ட, 'நிலத்தை விற்கணும்; கையெழுத்துப் போடுங்க’ன்னு கேட்டாங்க. கையெழுத்துப் போட முடியாதுன்னு மறுத்த நாங்க, 'எங்க நிலத்தையும் சேர்த்து வித்துட்டாங்க’ன்னு மேட்டூர் கோர்ட்ல கேஸ் போட்டோம். அதுக்கு அப்புறம் முத்துசாமியோட மகன் பழனிசாமி, 'உங்களை வசமா மாட்டிவிடுறேன் பாரு’ன்னு சொல்லி, எங்க அத்தை மக ஜெயந்திக்கு எங்க நிலத்தையும் சேர்த்து வித்துட்டாரு.

இனி, சாவதைத் தவிர வேறு வழியில்லை!

அந்த ஜெயந்தி, பா.ம.க-வுல மாவட்ட மகளிர் அணித் தலைவியா இருக்காங்க. அவங்க அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, ஜலகண்டபுரம் போலீஸ்காரங்களை விட்டு, கேஸை வாபஸ் வாங்கச் சொல்லி தினமும் மிரட்டினாங்க. ஸ்டேஷன்ல என்னையும் அப்பாவையும் சட்டையைக் கழற்றச் சொல்லி அடிச்சாங்க. எங்க அம்மாவையும் கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டினாங்க. எஸ்.ஐ சிரஞ்சீவிகுமார், சிறப்பு எஸ்.ஐ கோவிந்தன், உளவுப் பிரிவு சிறப்பு எஸ்.ஐ பூமாலை மூவரும்தான் இப்படி டார்ச்சர் செஞ்ச ஆட்கள். அந்த வேதனை தாங்க முடியாம, அப்பா விஷம் குடிச்சு இறந்துட்டாரு. நானும் நடைப்பிணமாகத்தான் இருக்கேன். கண்ணியமா வாழ்ந்த எங்களை இந்த போலீஸ்காரங்க ரொம்ப கேவலப்படுத்திட்டாங்க'' என்று கண்கலங்கினார்.

பழனிசாமியின் மனைவி மீனா, ''கடந்த நாலு மாசமா ஜெயந்தி பேச்சைக் கேட்டுக்கிட்டு இந்த போலீஸ்காரங்க எங்களைச் செய்யாத கொடுமைகளெல்லாம் செஞ்சுட்டாங்க. எங்க வீட்டுக்காரர் கடிதம் எழுதி வெச்சுட்டு இறந்துட்டதைப் பார்த்துட்டு, 'குடும்பப் பிரச்னையிலதான் இறந்துட்டாரு’ன்னு எழுதி கொடுங்கன்னு தொந்தரவு செய்யறாங்க'' என்று கண்ணீர் விட்டார்.

பிரச்னைக்கு மூல காரணம் என்று சொல்லப்படும் முத்துசாமியின் மகன் பழனிசாமியிடம் பேசியபோது, ''அந்த நிலம் எங்க அனுபவத்தில்தான் இருந்துச்சு. பட்டாவைப் பார்க்கும்போதுதான் அவங்க நிலத்துல எட்டரை சென்ட் இருப்பது தெரிஞ்சது. அதை என் கடைசி தம்பி கணேசனுக்குப் பிரிச்சுக் கொடுத்துட்டோம். எனக்கும் இந்தப் பிரச்னைக்கும் சம்பந்தம் இல்லை'' என்றார்.

இனி, சாவதைத் தவிர வேறு வழியில்லை!

இதுபற்றி ஜெயந்தியிடம் கேட்டபோது, ''செத்துப்போனவர் எனக்கு தாய் மாமன். அவங்களுக்கு 10 ஏக்கர் நிலம் இருக்குது. அந்த நிலம் தொடர்பா எங்க அம்மா பாகப் பிரிவினைக் கேட்டு வழக்குப் போட்டிருக்கிறாங்க. அந்தப் பகையை வெச்சுகிட்டு என்கிட்ட அவங்க பிரச்னை செஞ்சாங்க. இப்போ தேவை இல்லாம என்னை இந்த வழக்குல இழுத்துவிடுறாங்க. குடும்பப் பிரச்னையிலதான் எங்க மாமா இறந்திருக்கார். எல்லா உண்மையும் கூடிய சீக்கிரமே வெளிவரும்'' என்றார்.

ஜலகண்டபுரம் எஸ்.ஐ சிரஞ்சீவிகுமாரிடம் கேட்டபோது, ''இது முழுக்க முழுக்க பொய்யான தகவல். பழனிசாமி ஒரு இடத்தில் ஒரு லட்சம் பணம் கொடுத்திருக்கார். அந்தப் பணத்தை அவரோட மகன் சக்திவேல் வாங்கிட்டு வந்துட்டார். 'நான் கொடுத்த பணத்தை நீ எப்படி வாங்கலாம்’னு அப்பாவுக்கும் பையனுக்கும் வாய் தகராறு முற்றி கைகலப்பு ஏற்பட்டதால, பழனிசாமி இறந்துட்டார். அதுக்குப் பிறகு வக்கீல் ஆலோசனையைக் கேட்டு ஃபோர்ஜரியா ஒரு கடிதத்தை ரெடி பண்ணியிருக்காங்க. போலீஸை மிரட்டுறதுக்காக பொய்யான தகவலை பரப்புறாங்க'' என்று அனைத்தையும் மறுத்தார்.

சேலம் எஸ்.பி-யான சக்திவேல், ''இதுபற்றி விரிவாக விசாரணை நடத்த ஓமலூர் டி.எஸ்.பி முத்துகருப்பன் தலைமையில் ஒரு குழுவை நியமித்து இருக்கிறேன். அவர்கள் கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

சீக்கிரம்!

- வீ.கே.ரமேஷ், படங்கள்: க.தனசேகரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு