Election bannerElection banner
Published:Updated:

திருப்பூரில் கைதான வங்க தேசத்தினர்... இதுதான் காரணம்!

திருப்பூரில் கைதான வங்க தேசத்தினர்... இதுதான் காரணம்!
திருப்பூரில் கைதான வங்க தேசத்தினர்... இதுதான் காரணம்!

திருப்பூரில் கைதான வங்க தேசத்தினர்... இதுதான் காரணம்!

ரிய ஆவணங்கள் இன்றிச் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த ஆறு வங்கதேசத்தினரைத் திருப்பூர் போலீஸார் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.

திருப்பூர் வலையங்காடு பகுதியில் அமைந்திருக்கும் பிரபல தனியார் பின்னலாடை நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துவந்த வங்கதேச நாட்டைச் சேர்ந்த முகமது தெல்வர் உசேன், முகமது சதாதத்,முகமது மம்முனு, ஆசிக், ரசோன்மிலா சத்தார், முகமது பாபு ஆகிய ஆறு நபர்கள் தங்களிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாகத் தங்கிப் பணியாற்றி வந்துள்ளனர்.
இந்தத் தகவலை ஒப்பந்ததாரர் ஒருவர் மூலம் அறிந்த காவல் துறையினர், இன்று ராம் நகர் என்ற பகுதியில் அவர்கள் தங்கியிருந்த வீட்டில்வைத்து அனைவரையும் மடக்கிப் பிடித்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த இந்த ஆறு பேரும், வட மாநிலத்தவர்கள் என்ற போர்வையில் திருப்பூருக்கு வந்து, இங்கு தனியார் நிறுவனங்களுக்கு ஊழியர்களைச் சேர்த்துவிடும் அஜய் என்ற ஒப்பந்ததாரரைச் சந்தித்து வேலை கேட்டுள்ளனர். அவர், இந்த ஆறு பேரையும், யாசின் என்ற மற்றோர் ஒப்பந்ததாரரிடம் அனுப்பிவைத்துள்ளார். யாசின், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர். திருப்பூரில் பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர், பின்னர் திருப்பூருக்கு வேலைதேடி வரும் வட மாநிலத் தொழிலாளர்களுக்கு வேலை ஏற்படுத்தித் தரும் ஒப்பந்ததாரராகவும் இருந்து வருகிறார். அவர், இந்த ஆறு நபர்களையும், திருப்பூர் வலையங்காடு பகுதியில் செயல்பட்டுவரும் பிரபல தனியார் பின்னலாடை நிறுவனத்தில் கடந்த வாரம் வேலைக்குச் சேர்த்துவிட்டுள்ளார்.
 

கடந்த ஒருவாரமாக அந்தப் பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றிவந்த இவர்களிடம், அடையாள அட்டை உள்ளிட்ட சில ஆவணங்களைத் தருமாறு ஒப்பந்ததாரர் யாசின் கேட்க, "நாளை தருகிறோம்'' என்றவாறு மழுப்பியே, மேலும் சில நாள்களைக் கடத்தியிருக்கிறது அந்தக் கும்பல். அதனையடுத்து, அவர்கள் தங்கியிருந்த இடத்துக்கே நேரில் சென்று, உரிய ஆவணங்களை ஒப்படைக்குமாறு வற்புறுத்தியிருக்கிறார் ஒப்பந்ததாரர் யாசின்.

அப்போது, "நாங்கள் வங்கதேசத்தில் இருந்து வந்திருக்கிறோம். எங்களிடம் எந்த ஆவணங்களும் இல்லை. ஆளுக்கு 5,000 ரூபாய் பணம் தருகிறோம். எங்களுக்குத் தேவையான ஆவணங்களைப் போலியாகத் தயாரித்துக்கொள்ளுங்கள்" என்று கூறியிருக்கிறார்கள். ஒப்பந்ததாரர் யாசின், மேற்கு வங்க மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியில் பணியாற்றியவர் என்பதால் உடனே, திருப்பூரில் உள்ள சில கம்யூனிஸ்ட் நண்பர்களைத் தொடர்புகொண்டு இந்தச் சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். உடனே அவர்கள், திருப்பூர் வடக்குக் காவல் நிலையத்துக்கு யாசினை அழைத்துச் சென்று, வங்கதேச தொழிலாளர்களைப் பற்றிய தகவல்களைத் தெரிவிக்க, பின்னர் காவல் துறை உடனடியாகச் சென்று சம்பந்தப்பட்ட ஆறு பேரையும் கைதுசெய்து விசாரணையைத் தொடங்கியிருக்கிறது.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய திருப்பூர் வடக்கு காவல் உதவி ஆணையர் அண்ணாதுரை, ''சம்பந்தப்பட்ட ஆறு நபர்களில் முகமது தெல்வர் உசேனிடம் மட்டும் பாஸ்போர்ட் இருந்திருக்கிறது. மற்றவர்களிடம் எந்தவித ஆவணங்களும் இல்லை. சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் யாசின் மீதும் சந்தேகம் வலுத்துள்ளது. அவரிடமும் தொடர் விசாரணையை நடத்திவருகிறோம். மேலும், திருப்பூரில் வேறு யாரேனும் சட்டவிரோதமாகத் தங்கி, பின்னலாடை நிறுவனங்களில் பணியாற்றுகிறார்களா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்'' என்றார்.

மிகப்பெரிய தொழில் நகரான திருப்பூரில் ஒரு லட்சத்துக்கும் மேலான வட மாநிலத் தொழிலாளிகளும், 300-க்கும் மேற்பட்ட ஆப்ரிக்கர்களும் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு