Published:Updated:

கல்வித் துறையா... கரன்ஸி துறையா

சேலம் சொல்லும் பாடம்!

கல்வித் துறையா... கரன்ஸி துறையா

சேலம் சொல்லும் பாடம்!

Published:Updated:

ஓய்வுபெற 10 நாட்களே இருக்கும் நிலையில் சேலம் முதன்மைக் கல்வி அலுவலர் ஈஸ்வரனை பள்ளி கல்வித் துறை செயலர் சபீதா இடைநீக்கம் செய்திருப்பது தமிழகக் கல்வித் துறை வட்டாரத்தில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

 எதற்காக இந்த அதிரடி?

அரசிடம் பெறப்படும் பல்வேறு நிதிகளை பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் கணக்கில் வங்கியில்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கல்வித் துறையா... கரன்ஸி துறையா

வரவுவைத்து, அந்த நிதியில் இருந்து மாவட்ட அளவில் கலை இலக்கிய விழா, விளையாட்டு விழா, தேர்வு நடத்தும் பள்ளிகளின் செலவுகளுக்கு நிதி வழங்க வேண்டும். ஆனால் ஈஸ்வரன் பதவியேற்ற இரண்டரை ஆண்டுகளில் அந்த நிதியைப் பெற்றோர் ஆசிரியர் கழகக் கணக்கில் வரவு வைக்காமல் பல லட்சம் கையாடல் செய்திருப்பதால்தான் இந்த  இடைநீக்கம் என்கிறார்கள். இதுபற்றி விசாரித்தால் மிரளவைக்கும் பல தகவல்கள் வருகின்றன.

கல்வி அலுவலக வட்டாரத்தில் விசாரித்தபோது, ''2011-ல் சேலம் முதன்மை கல்வி அலுவலராக இருந்த ராஜராஜனுக்கு மாறுதல் கிடைத்ததும், அந்தப் பதவிக்கு வர பல மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் போட்டி போட்டனர். காரணம் சேலம் மாவட்டத்தில் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் என 400 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அதில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கிறார்கள். அவர்களிடம் கல்விக் கட்டணமாக 50 ரூபாய் வீதம் இரண்டு கோடி ரூபாய் வசூலிக்கப்படுகிறது. தவிர, 'தனியார் பள்ளிகளின் கவனிப்பு’ வேறு. ஒரு வருடத்தில் பல தலைமுறைகளுக்கான சொத்துகளைச் சேர்த்து செட்டில் ஆகிவிட லாம். அதனால்தான் சேலத்துக்கு அப்படி ஒரு கடும் போட்டி.

அனைத்துப் போட்டிகளையும் முறியடித்து, பக்கத்து அறையில் டி.இ.ஓ- வாக உட்கார்ந்திருந்த ஈஸ்வரன், அமைச்சர் ஒருவரைப் பிடித்து சி.இ.ஓ-வாகப் பதவி உயர்வு பெற்றார். 2012-13 கல்வி ஆண்டில் ஏற்காடு மான்ட் ஃபோர்ட் பள்ளியில் மாநில அளவில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. அதில் கல்வித் துறை அமைச்சர், விளையாட்டுத் துறை அமைச்சர் மற்றும் பள்ளி கல்வித் துறை செயலர் சபீதா ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது ஒவ்வொரு அரசு மற்றும் தனியார் பள்ளியிடமும் ஐந்து ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை வசூல்வேட்டை நடந்தது. தவிர, அமைச்சர் வருகையைக் காட்டி தனியார் கல்லூரிகளிடம் 'அன்பளிப்பு’ பெறப்பட்டது. கல்லூரி அன்பளிப்பே விழா செலவுகளுக்குப் போதுமானதாக இருந்ததால், பள்ளிகளில் வசூலிக்கப்பட்டத் தொகையை ஈஸ்வரனே முழுசாக ஏப்பம்விட்டார்.

ஆசிரியர் மாறுதலின்போது அரசியல்வாதிகள் 10 இடம் பிளாக் செய்யச் சொன்னால், 15 இடங்கள் பிளாக் செய்து கையாடல் செய்துள்ளார். உபரி ஆசிரியர்கள் பணிநிரவல், பகுதிநேர ஆசிரியர்கள் நியமனம், பள்ளிகள் அனுமதி வழங்கல்... என வசூல் நடத்தியுள்ளார். ஒரு பள்ளிக்கு ஆய்வுக்குப் போனால் சிலபல ஆயிரங்களை சுளையாக வாங்குவார். இப்படி சேலம் கல்வித் துறை,  கரன்ஸி துறையாக மாறியது. தவறுகள் செய்யும் ஆசிரியர்கள் மீது துறைரீதியாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களிடமும் கரன்ஸியை வாங்கிக்கொண்டு கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார். இதனால் தவறு செய்யும் ஆசிரியர்களுக்கு இவர் ரொம்ப செல்லம்.

சமீபத்தில் நடந்த இவரது இரண்டாவது பையன் திருமணத்தை, பல பள்ளிகளிடம் பல லட்சம் நன்கொடை வாங்கி ஜமாய்த்திருக்கிறார். திருமணத்தில் பள்ளி சமையல் கலைஞர்களையும் பள்ளி வேன்களையும் வி.ஐ.பி-கள் தங்குவதற்குத் தனியார் பள்ளி கெஸ்ட் ஹவுஸ்களையும் பயன் படுத்தியிருக்கிறார். இதற்கெல்லாம் பக்கபலமாக இருந்தவர் இவரோடு ஒரே அலுவலகத்தில் பணிபுரியும் கேரளாவைச் சொந்த மாநிலமாக கொண்டவர்தான்'' என்கிறார்கள்.

''இதையெல்லாம் இரண்டு மாதங்களாக லஞ்ச ஒழிப்புத் துறை, தீவிரமாகக் கண்காணித்துக் கொண்டுதான் இருந்ததாம். அவர்கள் உள்ளே புகுந்துவிட்டால் கல்வித் துறையின் மானம் காற்றில் பறந்துவிடும் என்பதாலேயே துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

இதுபற்றி ஈஸ்வரனிடம் கேட்டபோது, ''என்னை எதற்காக சஸ்பெண்ட் செய்தார்கள் என்று எந்த விளக்கமும் இதுவரை பள்ளிக் கல்வித் துறை கொடுக்கவில்லை. அதனால் என்ன காரணத்துக்காக இடைநீக்கம் செய்யப்பட்டேன் என்பது தெரியவில்லை. நான் எந்த தவறும் செய்யாமல் நேர்மையாகத்தான் பணியாற்றினேன். என்மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை'' என்றார்.

கல்வியின் நிலையை நினைத்தால் கதிகலங்குகிறது!

- வீ.கே.ரமேஷ், படம்: எம்.விஜயகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism