அருணாசலேஸ்வரர் கோயிலில் பிரச்னைகள் நடப்பது வழக்கமாகி வருகிறது. தீவனம் வழங்காமல் மாடுகள் இறந்தது, பிரசாதக் கடை பிரச்னை என கடந்த ஓராண்டாக ஏராளமான பிரச்னைகள் அணிவகுக்கின்றன. இப்போது பல கோடி ரூபாய் மதிப்புள்ள சாமான்களை சில லட்சங்களுக்கு ஏலம்விட்ட பிரச்னையும் சேர்ந்துள்ளது.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான, பயன்பாட்டில் இல்லாத

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இரும்புத் தகடுகள், இரும்புக் கதவுகள், பழைய கதிர் அடிக்கும் இயந்திரம், தேர் பேரல்கள், தேர் அச்சுகள் என 27,480 கிலோ இரும்புப் பொருட்களும், உயர்ரக மரங்களில் செய்யப்பட்ட மரத் திம்மைகள், தேர்மிதி மரங்கள், மரக் கதவுகள், ஜன்னல்கள், உடைந்த தேர் சக்கரங்கள், பழுதடைந்த மர யாளிகள், பழுதடைந்த தெப்பங்கள், தேர் முட்டுக்கட்டைகள் உட்பட 37,780 கிலோ அளவுக்கு மரச் சாமன்களும் கடந்த 19-ம் தேதி காலையில் ஏலம் விடப்பட்டது. 'பல கோடி ரூபாய்கள் மதிப்புள்ள மரச் சாமான்களை வெறும் 27 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளது’ என்று ஆன்மிகவாதிகளிடம் பெரிய சர்ச்சைப் பேச்சு பரவியுள்ளது.
இந்த ஏலப் பிரச்னை பற்றிப் பேசிய கோயில் ஊழியர்கள் சிலர், ''கோயிலில் வேலை பார்க்கும் முக்கியமான அதிகாரி ஒருத்தர்தான் இவ்வளவு பிரச்னைகளுக்கும் காரணம். பல கோடி ரூபாய் மதிப்புள்ள யாளிகள், தேர் அச்சுக்களை மரக் குப்பையோட குப்பையாகப் போட்டு ஏலத்துக்குக் கொண்டுவந்தார். வியாபாரிகளோட கூட்டுச் சேர்த்துதான் அந்த அதிகாரி இந்த வேலையைச் செய்தார். ஆனால், அவர் கூட்டுவைத்து ஏலம் எடுக்க வந்திருந்த வியாபாரிகளைவிட, வேற ஒரு வியாபாரி

அதிகமான தொகைக்கு ஏலம் போட்டார். இதனால், ஏலம் கை நழுவிப்போய்விடும் என்ற எண்ணத்தில், 'பல கோடி ரூபாய் மதிப்புள்ள யாளிகளை ஏலம் எடுத்தவர்களுக்குக் கொடுக்கக் கூடாது’ என இணை ஆணையர் திருமகளிடம் சொல்லவே, ஏலம் விடப்பட்ட பொருட்களை அப்படியே நிறுத்தி வைத்திருக்கிறார்கள்'' என்றார்.
மரச் சாமான்களை ஏலம் எடுத்தவரான கந்தர்வக்கோட்டையைச் சேர்ந்த மர வியாபாரி ஜவகரிடம் இதுபற்றி கேட்டோம். ''இரண்டு லட்ச ரூபாய்க்கான வரைவோலையுடன்(டி.டி), மரச் சாமான்களுக்கான ஏலத் தொகையாக ஒரு கிலோவுக்கு 72 ரூபாய் குறித்து, மூடி முத்திரையிட்ட கவரில் வைத்து ஏலப் பெட்டியில் போட்டேன். எனக்கு எதிராக ஏலம் கேட்க வந்திருந்த எல்லா வியாபாரிகளும் ஒன்றாக சேர்ந்து சிண்டிகேட் அமைத்து, ஒரு கிலோ மரத்துக்கு 28 ரூபாய் நிர்ணயம் செய்து ஏலப் பெட்டியில் போட்டிருந்தார்கள். வெளிப்படையா ஏலம்விடும்போது, நான் எந்தவிதமான கேள்விகளும் கேட்கவில்லை. அவர்களே 25 ரூபாயில் ஆரம்பித்து, ஏலத்தை 40 ரூபாய் 50 காசுகள் வரை கொண்டுவந்தார்கள். நான் அப்போதும் அமைதியாதான் இருந்தேன். இதனால சந்தேகப்பட்ட வியாபாரிகள் என்னிடம், 'நீங்களும் எங்ககூட சேர்ந்துகிட்டா, நாம குறைவான தொகைக்கு எடுத்து, நமக்குள்ள அதிகமா ஏலம்விட்டு, கூடுதலா கிடைக்குற தொகையைப் பிரிச்சுக்கலாம்’ என்று சொன்னார்கள். நான் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், ஏலத்தில் என் தொகை அதிகமாக இருந்ததால், ஏலத்தை எனக்கே கொடுத்துவிட்டார்கள்.
மாலையில் மொத்தப் பணம் 27 லட்சத்தையும் எடுத்துக்கிட்டு கோயில் ஆபீஸுக்குப் போனோம். அப்போது, 'யாளி தவிர்த்து மத்த பொருட்களை எடுத்துக்குங்க. யாளியைத் தவறுதலா கணக்குல காட்டிட்டாங்க’ என்று சொன்னார்கள். 'யாளிகள் இருக்குறதாலதான் இந்த விலை தர முடியும்’ என்று சொல்லி, மீண்டும் மீண்டும் கேட்டுப் பார்த்தோம். இணை ஆணையர் முடியாது என்று சொல்லவும், 'எங்களுக்கு ஏலம் வேண்டாம். டெபாசிட் தொகையைத் திருப்பிக் கொடுத்திடுங்க’ என்று கேட்டிருக்கிறோம். அவர்களின் முடிவுக்காகக் காத்திருக்கிறோம்'' என்றார்.
இந்த விவகாரம் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தெரியவந்தது. ஏதோ முறைகேடு நடப்பதை அவர்கள் உணர்ந்தார்கள். இந்து முன்னணி அமைப்பின் மாவட்டச் செயலாளர் சங்கர், ''100 ஆண்டுகளுக்கு மேல் பழைமையான, விலை உயர்ந்த மரங்களில் செய்யப்பட்ட சிங்கமுக யாளிகள், மரக் குதிரைகள் போன்றவை பொக்கிஷங்களாக வைத்துப் பாதுகாக்கப்பட வேண்டிய பொருட்கள். இவற்றை கோயிலில் இருக்கும் ஊழியர்கள் ஏலம்விட நினைக்கின்றனர். காலங்காலமாக கார்த்திகை மாதத்தில் நடக்கும் 10 நாள் தேர் திருவிழாவில் பயன்படுத்தப்படுபவைதான் சிங்க முக யாளிகளும், மரக் குதிரைகளும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கோயில் தேரில் 16 குதிரைகள் வரை இருந்தன. இப்போது அந்தக் குதிரைகளின் எண்ணிக்கையை இரண்டாகக் குறைத்துவிட்டனர். இப்படிக் குறைக்கப்பட்ட பயன்பாட்டில் இல்லாத விலை உயர்ந்த மரவகைகளில் செய்யப்பட்ட யாளிகள், குதிரைகளைத்தான் இப்போது ஏலம்விட்டனர். கோயில் நிர்வாகத்தைக் கண்டித்து மனுக்கள் கொடுத்தாலோ, ஆர்ப்பாட்டங்கள் செய்தாலோ எந்தவிதமான நடவடிக்கைகளும் இருப்பது இல்லை. ஆகையால், அண்ணாமலையார் கோயில் பொக்கிஷமான யாளிகளை ஏலம்விட்டால் நீதிமன்றத்தை நாடி கண்டிப்பாகத் தடுத்து நிறுத்துவோம்'' என்றார் ஆவேசமாக.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து, அருணாசலேஸ்வரர் திருக்கோயில் இணை ஆணையர் திருமகளிடம் (பொறுப்பு) பேசினோம். ''விலை உயர்ந்த பொருட்கள் தவறுதலாகப் பட்டியலில் சேர்க்கப்பட்டுவிட்டன. அதனால், ஏலத்தை ரத்து செய்துவிட்டோம். யாளி மாதிரியான பொருட்களை நீக்கிவிட்டு, மற்ற மரப் பொருட்களை மட்டும் ஆணையர் அனுமதி பெற்று ஏலம் விடப்படும்'' என்றார்.
விட நினைத்தது ஏலமா, ஏப்பமா? அருணாசலேஸ்வரருக்கே வெளிச்சம்!
- காசி.வேம்பையன், படங்கள்: கா.முரளி