Published:Updated:

என்கவுன்டர்கள் ஜாக்கிரதை!

மரண தண்டனை விதித்த நீதிமன்றம்!

பிரீமியம் ஸ்டோரி

'என்கவுன்டர்’ என்ற சொல்லுக்குப் பின், காக்கிகளின் எத்தனையோ மறைமுகக் கொலைகள் ஒளிந்து கிடக்கின்றன. அரசாங்கத்துக்கு ஆகாதவர்களை, ஆளும் வர்க்கத்தில் இருக்கும் அரசியல்வாதிகளின் வளர்ச்சிக்குக் குடைச்சல் தருபவர்களை, தங்களுக்கு வேண்டாதவர்களை காவல் துறையினர் 'தற்காப்பு’ என்ற பெயரில் சட்டத்தின் துணையுடன் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். பாட்னா விரைவு நீதிமன்றம் கடந்த செவ்வாய் அன்று 'போலி என்கவுன்டர் செய்த காவல் துறை ஆய்வாளருக்கு மரண தண்டனை' எனக் கொடுத்த தீர்ப்பால் இந்தியாவில் உள்ள பல 'என்கவுன்டர்’ ஸ்பெஷலிஸ்ட்களும் ஆடிப்போய் இருக்கிறார்கள்.

என்கவுன்டர்கள் ஜாக்கிரதை!

என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்கள் இதுபோல வாங்கிக்கட்டிக்கொண்டது, பலமுறை நிகழ்ந்துள்ளது. 2009-ம் ஆண்டு, உத்தரகாண்ட் மாநிலத்தில் எம்.பி.ஏ படித்துவந்த ரன்பீர்சிங் என்ற 22 வயது மாணவரை, கொள்ளைச் சம்பவம் ஒன்றில் சம்பந்தப்பட்டிருந்தார் என போலீஸார் சந்தேகித்ததால், அவரைச் சுட்டுக் கொன்றனர். அதன்பின் உண்மை தெரியவர, இதை மறைக்க துப்பாக்கிச் சண்டை ஒன்று அங்கு நடந்ததாக போலியாக ஜோடித்து, வழக்கை மூடப் பார்த்தார்கள். அதன்பின் இந்த வழக்கை கையில் எடுத்த சி.பி.ஐ அதிகாரிகள் உண்மையை வெளிக்கொண்டு வந்தனர். இதனை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், 18 போலீஸ்காரர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

2010-ம் ஆண்டு காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் ஊடுருவியதாக மூன்று பேரை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர். பின்னர், அவர்களை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் என்றும் ராணுவம் அறிவித்தது. பின்னர், சுட்டுக் கொல்லப்பட்ட மூவரும் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் பாரமுல்லா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களின் பெயர் ஷாஜாத் அகமது கான், ரியாஸ் அகமது கான், முகமது சயீஃப் எனவும் தெரிய வந்தது. பல மனித உரிமை அமைப்புகளும் அரசியல் கட்சிகளும், 'அது போலி என்கவுன்டர்’ எனக் கூறி, விசாரணை நடத்த வலியுறுத்தி மும்முரமாகப் போராட்டங்களை நடத்தின. இதனால், காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிகளில் சுமார் இரண்டு மாதங்கள் இயல்பு நிலை பாதித்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக சோபூர் நீதிமன்றம் விசாரித்த பின், குற்றம்சாட்டப்பட்ட இரு அதிகாரிகள் உள்பட ஆறு பேரையும் ராணுவப் பணியில் இருந்து வெளியேற்றி தீர்ப்பளித்தது.

என்கவுன்டர்கள் ஜாக்கிரதை!

இந்த நிலையில் பாட்னா விரைவு நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு, காவல் துறையினரை கடுமையாக எச்சரித்திருக்கிறது.

பாட்னா நகரில் விகாஸ் என்ற மாணவன் முதலில் டெலிபோன் பூத்துக்குச் சென்று போன் பேசியிருக்கிறான். கடைக்காரர் கமலேஸ் குமார் கவுதம், அந்த மாணவனுக்கு மீதித் தொகையை சரியாகக் கொடுக்காததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. உடனே விகாஸ் தனது நண்பர்களான பிரசாந்த், ஹிமான்ஸ் யாதவ் ஆகியோரையும் அந்த டெலிபோன் பூத்துக்கு அழைத்துவந்து வாக்குவாதம் செய்தான். அப்போது அங்கு கமலேஷ§டன் கூடியிருந்த ஆறு கடைக்காரர்களும், சரமாரியாக மூவரையும் அடித்து உதைத்து தாக்க ஆரம்பித்தனர். தகவலின் பெயரில் அங்கு வந்த காவலர் அருண்குமார் சிங், காவல் ஆய்வாளர் ஷாம்சே ஆலாமியிடம் இவர்களை ஒப்படைத்து இருக்கிறார்கள். ஷாம்சே தனது துப்பாக்கியை எடுத்து சம்மீலன் மார்க்கெட்டிலேயே ஈவு இரக்கம் இல்லாமல், மூவரையும் தலையில் சுட்டுத்தள்ளினார்.

சுட்டுத்தள்ளிவிட்ட பின் அவருக்கு உண்மை தெரியவர, போலி என்கவுன்டர் வழக்கை இப்படி பதிவு செய்கிறார். ''2002 டிசம்பர் மாதம் 28-ம் தேதி சம்மீலன் மார்கெட்டில் ரவுண்ட்ஸ் வந்துகொண்டிருந்தோம். அப்போது அங்கு வந்த ரவுடி கும்பல் கடைக்காரர்களைத் தாக்கி கொலைசெய்ய முயற்சி செய்துவிட்டு, கொள்ளையடிக்கப் பார்த்தது. நாங்கள் அதற்குள் போய் அந்த மூன்று பேர் கும்பலைத் துரத்திப்பிடித்து 'என்கவுன்டர்’ பண்ணினோம்'' என வழக்கை மூட முயற்சி செய்ய, பாட்னா நகர் முழுவதும் போராட்டம் வெடித்தது. அதன்பின் 2003-ம் ஆண்டு ஷாம்சே கைது செய்யப்பட்டதில் இருந்தே, அவருக்கு ஜாமீன் வழங்கவில்லை. இந்த வழக்கை முதலில் உள்ளூர் காவல் துறை விசாரிக்க, எதிர்ப்புகள் அதிகமாகின. சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டு, பிறகு சி.பி.ஐ வசம் வந்த பின்னால்தான் ஒவ்வொன்றாக விசாரித்து எழுத, 'இது போலி என்கவுன்டர்’ என்பது வெட்ட வெளிச்சமானது.

அந்த மூன்று பேரும் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த மாணவர்கள். விகாஸ், பீகாரில் உள்ள ஏ.என் கல்லூரியில் பி.எஸ்ஸி. படித்துக்கொண்டிருந்தவர். பிரசாந்த்தும் ஹிமான்ஸும் பாட்னாவில் உள்ள ஆர்.பி.எஸ். கல்லூரி மாணவர்கள். இவர்களுக்கும் ரவுடி கும்பலுக்கும் எந்தத் தொடர்புமே கிடையாது என விசாரணையில் தெரியவர, தப்ப முடியாதபடி அந்த போலீஸ் அதிகாரிகள் மாட்டிக்கொண்டனர்.

12 ஆண்டுகளாக விரைவு நிதிமன்றத்தில் நடந்துவந்த இந்த வழக்கில், நீதிபதி ரவிசங்கர் கடுமையான சொற்களுடன் காவலர்களுக்கு எச்சரிக்கை விடுத்து, கடந்த 25-ம் தேதி தீர்ப்பு வழங்கினார். சாஸ்திரி நகர் காவல் ஆய்வாளர் ஷாம்சே அலாமுக்கு மரண தண்டனையும், அவருடன் இருந்த போலீஸ் கான்ஸ்டபிள் அருண்குமார் சிங்குக்கும் அந்த ஆறு கடைக்காரர்களுக்கும் ஆயுள் தண்டனையும் வழங்கித் தீர்ப்பளித்திருக்கிறார்.

இந்தத் தீர்ப்பு குறித்து விகாஸின் தந்தை குப்தா, ''குற்றவாளிகள் அவர்கள் விதைத்ததை அவர்களே அறுவடை செய்திருக்கிறார்கள்'' என்றார்.

காவலர் தங்கள் துப்பாக்கியால் ஒரு அப்பாவியின் உயிரைப் பறித்தால், அது ஒருநாள் அவருடைய உயிருக்கே உலை வைக்கும் என்பதே இந்தத் தீர்ப்பு சொல்லும் பாடம்!

- நா.சிபிச்சக்கரவர்த்தி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு