Published:Updated:

குளித்தலைக் கோட்டத்தில் காட்டுமிராண்டிகளின் ஆட்டம்!

ஆறு மாதங்களில் ஆறு பலாத்காரங்கள்...

பிரீமியம் ஸ்டோரி

பொள்ளாச்சி விடுதியில் மாணவிகள் சீரழிக்கப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து நம்மில் பலர் மீள்வதற்குள் கரூர் மாவட்டத்தில் மாணவி ஒருவர் மானபங்கம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது!

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தை அடுத்துள்ள பிச்சம்பட்டியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி. கூலிவேலை செய்து பிழைப்பை நடத்திவரும் இவருக்கு நான்கு பெண்கள். மூத்த மகளுக்குத் திருமணமாகிவிட, மற்றவர்கள் பள்ளியில் படித்து வருகின்றனர். இதில் இரண்டாவது மகள் வினிதா, கிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு தேர்ச்சிபெற்று, தொட்டியத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் அட்மிஷன் பெற்றுள்ளார்.

குளித்தலைக் கோட்டத்தில் காட்டுமிராண்டிகளின் ஆட்டம்!

கல்லூரிக் கட்டணம் செலுத்துவதற்காகப் பெற்றோருக்குச் சிரமம் கொடுக்கக் கூடாது என நினைத்த வினிதா, கரூரில் உள்ள கொசுவலை கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தார். இன்னும் சில தினங்களில் கல்லூரித் தொடங்க இருந்த நிலையில், கடந்த 23-ம் தேதி வேலைக்குச் சென்ற வினிதா, அன்று இரவு 11 மணிக்கு பிச்சம்பட்டி அருகே வெற்றிலைத் தோட்டத்தில் பலாத்காரம் செய்யப்பட்டுப் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

மாணவியின் சாவுக்குக் காரணமானவர்களைக் கைதுசெய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என, வினிதாவின் பெற்றோருக்கு ஆதரவாக புதிய தமிழகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், மக்கள் மறுமலர்ச்சிக் கழகம், சுவாதி பெண்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கரூர் அரசு மருத்துவமனை முன் சாலைமறியலில் ஈடுபட, அந்தப் பகுதியே போராட்டக் களமானது.

வினிதாவின் தாய் நாகவள்ளி, ''எங்களுக்கு நாலும் பொம்பளைப் பிள்ளைங்க. பெரிய பெண்ணை புதுக்கோட்டையில் கல்யாணம் பண்ணிக் கொடுத்தோம். அடுத்து வினிதா, 'அக்காவைப்போல என்னையும் 12-வது முடிச்சதும் கல்யாணம் பண்ணி கொடுத்திடாதீங்க’ன்னு சொல்லுச்சு. அதுக்கு நான், 'வீட்டுல இருக்கிற கஷ்டத்துல காலேஜ் படிக்க வைக்க முடியாதும்மா’ன்னு சொன்னேன். 'லீவு நாள்ல வேலைக்குப் போய், அதில் கிடைக்கிற பணத்தை வெச்சு படிச்சுக்குறேன்’னு சொல்லுச்சு. கரூர்ல இருக்கிற கொசுவலை கம்பெனியில வேலைக்குச் சேர்த்துவிட்டோம். எங்க ஊர்ல இருந்து கரூருக்குப் போகணும்னா இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சித்தலவாய்க்கு சைக்கிள்ல போயிட்டு, அங்கிருந்து பஸ் பிடிச்சுப் போகணும்.

குளித்தலைக் கோட்டத்தில் காட்டுமிராண்டிகளின் ஆட்டம்!

அப்படி திங்கள்கிழமை வேலைக்கு போன வினிதா, ராத்திரி வெகுநேரமாகியும் வீடு திரும்பல. அன்னைக்கு சித்தலவாய் மாரியம்மன் கோயிலில் ஈட்டி எரிதல் திருவிழா. எட்டு ஊர் ஜனங்களும் அங்க கூடுவாங்க. வினிதா திருவிழாவுக்குப் போயிட்டு வீட்டுக்கு வரும்னு இருந்துட்டோம். ரொம்ப நேரமாகியும் வினிதா வரலை. திருவிழா நடக்குற இடத்துல எல்லாம் தேடிப் பார்த்தோம், கிடைக்கலை. அப்போ ஊர்க்காரங்க ஊருக்கு வர்ற வழியில வினிதாவோட சைக்கிளும் பையும் கிடக்குதுன்னு சொன்னாங்க. பதறியடிச்சு ஓடிப்போய் அந்தப் பகுதியில் தேடினோம். சைக்கிள் கிடந்த இடத்துக்கும் கொஞ்ச தூரத்துல...'' என்றவர், தொடர்ந்து பேச முடியாமல் அழுதார்.

வினிதாவின் தந்தை பொன்னுசாமி தொடர்ந்தார்...

''சைக்கிள் கிடந்த இடத்​துக்குப் பக்கத்தில் உள்ள வெற்றிலைக் கொடிக்காலில் வினிதா, சட்டையில்லாமல் பிணமா கிடந்துச்சு. எம்புள்ளையக் கெடுத்து அவளோட துப்பட்டாவாலேயே கழுத்தை இறுக்கி கொலைசெஞ்சுட்டு போயிருக்கானுங்க கொலைகாரப் பாவிங்க. என்னோட பொண்னை சீரழிச்சவங்களைக் கண்டுபிடிச்சி, அவங்களைத் தூக்குல போடணும் சாமி. எம்புள்ளைய நிர்வாணக்கோலத்துல பிணமா பார்த்த கொடுமை வேறு யாருக்கும் வந்துடக் கூடாது'' என கதறினார்.

புதிய தமிழகம் கட்சியின் கரூர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பாண்டியன், ''சமீபகாலமாக ஆதிக்க சாதியினர் வாழும் பகுதிகளில் திருவிழா நடக்கும் சமயங்களில்தான் இதுபோன்ற சம்பவங்கள் அதிகமாக நடக்கின்றன. திருவிழா சமயத்தில் போதையில் இருக்கும் இளைஞர்கள் இப்படி நடந்துகொள்கிறார்கள். திருவிழாவுக்குக் கூடுதலாகப் பாதுகாப்பு போட வேண்டிய காவல் துறை, சம்பவங்கள் நடந்த பிறகு போலீஸாரைக் குவிக்கிறது. இப்படி செய்பவர்களுக்கு ஆளுங்கட்சி ஆதரவு இருக்கிறது. வினிதா கற்பழிக்கப்பட்ட சம்பவத்தில் இந்தப் பிரச்னையில் குற்றவாளிகளைக் காப்பாற்றும் வகையில் ஆளுங்கட்சி அமைச்சர் ஒருவரின் தலையீடு இருப்பதாகத் தெரிகிறது. தமிழக அரசு இந்தப் பிரச்னையில் தலையிட்டு, குற்றவாளிகளைக் கைதுசெய்து, அவர்களுக்குக் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். இல்லையெனில் போராட்டத்தைத் தமிழகம் முழுக்க தீவிரப்படுத்துவோம்'' என காட்டமாக.

சுவாதி பெண்கள் இயக்கத்தின் மாநில துணைச்செயலாளர் பாக்கியம், ''கரூரில் தொழிற்சாலைகள் அதிகமாக உள்ளதால் இங்கு பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகம் அரங்கேறி வருகிறது. அவற்றில் ஐந்தில் ஒரு சம்பவம்தான் வழக்காகப் பதிவு செய்யப்படுகிறது. அந்த வழக்குகளிலும் காவல் துறையினரின் அலட்சியம் காரணமாக குற்றவாளிகள் சீக்கிரம் வெளியே வந்துவிடுகின்றனர்.

கரூர் மாவட்டத்தில் அடுத்தடுத்து வன்கொடுமைகளுக்கு ஆளாகிற பெண்களில் பலர் தாழ்த்தப்பட்ட பெண்கள் என்பதுதான் கொடுமை. வினிதா கொலை நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன், குளித்தலை அருகில் உள்ள கோட்டமேட்டு ஆதிதிராவிட உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் பரளி கிராமத்தைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி ஒருவரை, மாலையில் பள்ளி விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, இளைஞர் ஒருவர் தூக்கிச்சென்று கற்பழித்துள்ளார். இதுதொடர்பாக புகார்

குளித்தலைக் கோட்டத்தில் காட்டுமிராண்டிகளின் ஆட்டம்!

கொடுத்தும் இன்றுவரை அந்தச் சம்பவத்துக்குக் காரணமானவரைக் கைது செய்யவில்லை. மாணவி காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். ஒரு வாரத்துக்கு முன் பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் அருகே மூன்று பேர் கும்பல், ஒரு அரசு பெண் ஊழியரைத் தூக்கிக்கிட்டு போய் பலாத்காரம் செய்து வீசிவிட்டுப் போய்விட்டார்கள். வேலையைக் காப்பாற்றிக்கொள்ள அந்தப் பெண் இந்த சம்பவத்தை வெளியில் சொல்லாமல் மூடி மறைத்துவிட்டார்.

கடந்த ஆறு மாதங்களில் குளித்தலை கோட்டத்தில் ஆறு தலித் மாணவிகள் கற்பழிக்கப்பட்ட சம்பவம், இப்போது வெளிவந்துள்ளது. அதில் ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்டார். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்வதற்குக் காவல் துறையின் மெத்தனமே காரணம்'' என்றார்.

மத்திய மண்டல ஐ.ஜி ராமசுப்பிரமணி, திருச்சி சரக டி.ஐ.ஜி செந்தாமரைக்கண்ணன், திருச்சி எஸ்.பி ராஜேஸ்வரி, புதுக்கோட்டை எஸ்.பி உமா, அரியலூர் எஸ்.பி ஜியாவுல் ஹக் ஆகியோர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து சாலைமறியல் நீடிக்க, திருச்சி எஸ்.பி ராஜேஸ்வரியின் பேச்சுவார்த்தை நடத்தினார். 'குற்றவாளிகளை மூன்று நாட்களுக்குள் பிடித்துவிடுவோம்’ என உறுதியளித்ததன் அடிப்படையில் காலை 10 மணியில் இருந்து நீடித்துவந்த சாலைமறியல் அன்று மாலை 4.30 மணிக்கு முடிவுக்கு வந்தது.

குற்றச்சாட்டுகள் குறித்து மத்திய மண்டல ஐ.ஜி ராமசுப்பிரமணியைத் தொடர்புகொண்டோம். ''இந்த வழக்கில் தீவிரம் உணர்ந்து நானே நேரில் சென்று விசாரணை நடத்தினேன். குளித்தலை டி.எஸ்.பி ஜமீம் உள்ளிட்ட 10 பேர் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணையைத் தொடங்கியுள்ளோம். விரைவில் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்போம். தலித் மாணவிகள் பலாத்காரம் செய்யப்படுவது குறித்து விசாரிக்க உத்தரவிடுகிறேன்'' என்றார்.

பெண்களுக்கு நடக்கும் இந்தக் கொடுமையைத் தடுக்கும் கடமை, முதல்வருக்குக் கூடுதலாகவே இருக்கிறது.

- சி.ஆனந்தகுமார்

படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு