Published:Updated:

'பிரச்னை பண்ணாதீங்க... பணம் தர்றோம்.. மன்னிப்புக் கேட்குறோம்!'

நீதிமன்றம் வந்த மருத்துவமனை பஞ்சாயத்து

குழந்தை பிறக்கும் வீடு எவ்வளவு மகிழ்ச்சியில் இருக்க வேண்டும்! ஆனால், அதற்கு நேர்மாறாக இருக்கிறது கோவையைச் சேர்ந்த தேவேந்திரனின் வீடு. இவரது மனைவி சௌம்யாவுக்கு கடந்த மார்ச் 5-ம் தேதி ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. பிறந்த சில தினங்களில் குழந்தை பார்வையை இழந்துவிட்டதுதான் சோகத்துக்குக் காரணம்!

குழந்தையின் பார்வை பறிபோனதற்குக் காரணம், பிரசவம் பார்த்த மருத்துவமனையின் அலட்சியம்தான் என்று புகார் சொல்கிறார் தேவேந்திரன்.

கோவை குளத்துப்பாளையத்தில் தேவேந்திரனைச் சந்தித்தோம். ''எங்களுக்கு 2012-ம் வருஷம் கல்யாணம் ஆனது. என் மனைவி சௌம்யா கர்ப்பமானதும் ஆவாரம்பாளையத்துல இருக்குற ஐஸ்வர்யா மகளிர் மற்றும் கருத்தரித்தல் மருத்துவமனையில் சோதனை செஞ்சுட்டு வந்தோம். அங்கிருந்த தீபா டாக்டர்தான் தொடர்ந்து பார்த்தாங்க. கடந்த மார்ச் 5-ம் தேதி சௌம்யாவுக்கு வலி வந்தது. மருத்துவமனையில சேர்த்தோம். சிசேரியன் பண்ணி குழந்தையை எடுத்தாங்க. குழந்தை நல்லபடியா இருப்பதா டாக்டர் சொன்னாங்க.

'பிரச்னை பண்ணாதீங்க... பணம் தர்றோம்.. மன்னிப்புக் கேட்குறோம்!'

அடுத்தநாள் காலையிலதான் சௌம்யாவை ரூமுக்குக் கொண்டுவந்தாங்க. ஆனா, குழந்தையை மட்டும் கொண்டுவரலை. 'எங்க ரூல்ஸ்படி மூணு நாள் கழிச்சுதான் குழந்தையை அம்மாகிட்ட கொடுப்போம்’னு சொல்லிட்டாங்க. அதுக்குப் பிறகு எங்ககிட்டயும் குழந்தையைக் காட்டலை.

அதுக்குப் பிறகு கீதாபாரதி என்ற டாக்டர் வந்து குழந்தையைப் பார்த்தாங்க. அவங்களைப் போய் பார்த்தேன். 'குழந்தை நல்லா ஆக்டிவா இருக்கு... எதிர்ப்பு சக்திக்காக போட்டோதெரபில வெச்சிருக்கோம். அதனால, குழந்தையை இப்போ பாக்க முடியாது’னு சொன்னாங்க. மூணு நாட்களுக்குப் பிறகு குழந்தையை தூரத்துல இருந்து பார்க்க விட்டாங்க. அப்போதான் குழந்தையோட வலது கண் வீக்கமா இருப்பது தெரிஞ்சது. டாக்டர்கிட்ட கேட்டதுக்கு, 'அதெல்லாம் ஒண்ணும் இல்ல. கண் டாக்டரை வரச் சொல்லியிருக்கோம். அவர் வந்து பார்ப்பாரு’னு சொன்னாங்க.

கண் டாக்டர் வந்து குழந்தையைப் பார்த்தார். 'குழந்தையோட வலது கண் நோய்த்தொற்றுல பாதிக்கப்பட்டிருக்கு. அது இடது கண்ணுக்கும் பரவ ஆரம்பிச்சிருக்கு’ன்னு சொன்னாரு. அப்போ அந்த மருத்துவமனையில வேற டாக்டர்கள் யாரும் இல்லை. உடனே டாக்டர் தீபாகிட்ட போன்ல பேசினோம். 'நீங்க உடனே பில்லை செட்டில் பண்ணிடுங்க. நாங்க வேற கண் மருத்துவமனைக்குக் கடிதம் தர்றேன். நீங்க அங்கே போய் பாத்துக்கோங்க’னு சொன்னார்.

மறுநாள் காலை பணத்தைக் கட்டிட்டு குழந்தையை கண் மருத்துவமனைக்குக் கொண்டுபோனோம். குழந்தையோட இடது கை மணிக்கட்டுலயும் ஏதோ கட்டுப் போட்டு வெச்சிருந்தாங்க. அதை

'பிரச்னை பண்ணாதீங்க... பணம் தர்றோம்.. மன்னிப்புக் கேட்குறோம்!'

அவிழ்த்துப் பார்த்தா, அந்தப் பகுதி சீழ் பிடிச்சிருந்துச்சு. குழந்தையைப் பார்த்த டாக்டர்கள், 'குழந்தையோட இடது கை மணிக்கட்டுல ஐ.வி. லைனில் சரியாக ஊசி போடாததால, குழந்தைக்கு தொற்று ஏற்பட்டிருக்கு. அது ரத்தத்துல கலந்து கண்ணைப் பாதிச்சிருக்கு. இப்போ குழந்தைக்குப் பார்வை போயிடுச்சு. இனி வர வாய்ப்பு இல்லை’ன்னு சொன்னாங்க. எனக்கு வாழ்க்கையே இருட்டாகிடுச்சு...'' - மேற்கொண்டு பேச முடியாமல் கலங்குகிறார்.

அடுத்து நடந்ததை சௌம்யா சொன்னார்... ''ஐஸ்வர்யா மருத்துவமனையில் எங்க குழந்தையைச் சரியா யாரும் பராமரிக்கலை. பெத்த என்னையே குழந்தையைப் பார்க்க அனுமதிக்கலை. இப்போ வந்து, 'பிரச்னை பண்ணாதீங்க. பணம் தர்றோம்... மன்னிப்புக் கேட்குறோம்’னு சொல்றாங்க. அது எல்லாத்தையும் நான் ஏத்துக்குறேன். என் புள்ளையோட பார்வையைத் திருப்பிக் கொடுத்துடுவாங்களா? அந்த மருத்துவமனை மேல நடவடிக்கை எடுக்கும் வரைக்கும் நாங்க விடமாட்டோம்'' என்று அழுதபடியே பேசினார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக தேவேந்திரன் புகார் அளிக்க, வழக்குப் பதிவுசெய்யாமல் தாமதப்படுத்தியது கோவை காவல் துறை. அவரோ உயர் நீதிமன்றத்தை நாட, அதன் பிறகே  டாக்டர்கள் சந்திரலேகா, தீபா, கீதாபாரதி மீது கொடுங்காயம் விளைவித்தல் என்ற ஒரே ஒரு பிரிவின் கீழ் வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.

''காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் இந்த மருத்துவமனை நிர்வாகிக்கு நெருக்கம். அதனால்தான் போலீஸ் எங்களை இவ்வளவு தூரம் இழுத்தடிக்கிறது'' என்றும் வருத்தப்பட்டார் தேவேந்திரன்.

இதுதொடர்பாக மருத்துவமனையின் நிர்வாகி டாக்டர் சந்திரலேகாவை சந்திக்க பலமுறை முயன்றும் அனுமதிக்கவில்லை. ''இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளதால், இப்போது பேச முடியாது. வழக்கறிஞருடன் ஆலோசித்துவிட்டுச் சொல்கிறோம்'' என்று மருத்துவமனையின் இயக்குநர்களில் ஒருவரும், டாக்டர் சந்திரலேகாவின் கணவருமான வேலுசாமி சொன்னார்.

அந்தப் பச்சிளம் குழந்தைக்கு எப்படியாவது பார்வை கிடைத்துவிட வேண்டும் என்று தேவேந்திரன் - சௌம்யா தம்பதியர் ஒவ்வொரு மருத்துவமனையாக ஏறி இறங்க ஆரம்பித்துள்ளனர். அந்தக் குழந்தைக்கு பார்வை கிடைக்க வேண்டும். இதுபோன்ற மருத்துவமனைகளுக்குப் பாடம் கிடைக்க வேண்டும்!

- ச.ஜெ.ரவி, படங்கள்: தி.விஜய்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு