Published:Updated:

கொலைகளுக்கு சாட்சியான ரத்த சதுக்கம்!

தாலிபான் பயங்கரம்

பிரீமியம் ஸ்டோரி

பெண்களுக்கு எதிரான வன்​முறை, பாகிஸ்தான் முழுவதும் ஆதிக்கம் செலுத்துகிறது. பல  கொலைகள் தற்கொலை​களாகவும் விபத்துக்களாகவும் சித்திரிக்கப்பட்டு முற்றுப்புள்ளி வைக்கப்படுகின்றன.

 சில ஆண்டுகளாக இசை மற்றும் சினிமா கலைஞர்களுக்கு மிரட்டல் விடுத்தும், எதிர்ப்பவர்களைக் கொலை செய்துகொண்டும் இருக்கின்றனர் தாலிபான் இயக்கத்தினர். ஸ்வாட் பள்ளத்தாக்கு 2007-2009-ல் தாலி​பான்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. அங்கு, தொலைக்காட்சி பார்ப்பதற்கும், இசை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும், வீட்டுக்குள்​ளேயே திருமணம் போன்ற சடங்குகளில் பாடல்களைப் பாடுவதற்கும் தடை விதித்தனர். ஸ்வாத் பள்ளத்தாக்கில் வாழ்ந்து வந்த இசைக் கலைஞர்களிடம், 'இசை மற்றும் கலைகளை நிறுத்த வேண்டும். இல்லையேல், அங்கிருந்து ஓட வேண்டும்’ என்று எச்சரிக்கை விடுத்தார்கள். இந்தக் காலகட்டத்தில், அங்கிருந்து பல இசைக் கலைஞர்கள் வெளியேறி பெரிய நகரங்களுக்கு ஓடினர். பலர் பாடுவதை நிறுத்திவிட்டு, வேறு தொழில்களை மேற்கொண்டனர்.

கொலைகளுக்கு சாட்சியான ரத்த சதுக்கம்!

இந்த நிலையில், கடந்த ஜூன் 18-ம் தேதி பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள பெஷாவரில், பிரபல பஷ்டோ மொழிப் பாடகி குல்னார் என்கிற முஷ்கனை அவரது வீட்டில் வைத்தே அடையாளம் தெரியாத நபர்கள் சுட்டுக் கொன்றனர். இவரது வயது 38. குல்னாரின் பூர்வீகம் பார் கோட்டி பகுதி. இவரது அண்ணன் அளித்த புகாரின்படி போலீஸார் வழக்குப் பதிவுசெய்து உள்ளனர். முதற்கட்ட விசாரணையின்படி குல்னாரின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேபோன்று கடந்த 2012-ம் ஆண்டு பஷ்டோ மொழிப் பாடகி கஜாலா ஜாவத், மக்கள் மத்தியில் பயங்கரமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டார். அது தொடர்பாக அவரது முன்னாள் கணவர் ஜஹாங்கீர் கான் கைது செய்யப்பட்டார். 'மக்கள் மத்தியில் பாடுவதும், என்னை மறுத்து இரண்டாவது திருமணம் செய்ததும்தான் அவளைக் கொல்லக் காரணம்’ என ஜஹாங்கீர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

2009 ஜனவரியில், பாகிஸ்தானின் பாரம்பரிய நடனக் கலைஞரான ஷாபானா என்ற பெண்மணி, தாலிபான் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். பாகிஸ்தானின் ஸ்வாட் மாவட்டத்தில் உள்ள மின்கோரா நகரின் முக்கியமான இடமான கிரீன் ஸ்குவேர் என்ற இடத்தில், தோட்டாக்களால் செல்லரித்த அவரின் உடல் மீது பண மாலை, அவரது நடன வீடியோ பதிவுகளைக்கொண்ட குறுந்தகடுகள் மற்றும் புகைப்படங்கள் போடப்பட்டு, ஊர் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது. இந்தக் கொலையை தாலிபான் படைதான் செய்தது என்று ஒப்புக்கொண்டு வானொலியில் பேசிய தாலிபான் தலைவர் ஒருவர், 'எங்களுடைய அமைப்பால் இத்தகைய தீமைகளைப் பொறுத்துக்கொள்ள முடியாது’ என்று எச்சரித்தார். 'மற்ற பெண்கள் இத்தகைய நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டது கண்டுபிடிக்கப்பட்டால், ஒவ்வொருவராகக் கொலை செய்யப்படுவார்கள்’ என்றும் மிரட்டினார்.

27 ஏப்ரல் 2010 அன்று பெஷாவரைச் சேர்ந்த அய்மான் உதாஸ் என்ற பஷ்டோ மொழிப் பாடகி தன் உடன்பிறந்த சகோதரர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டார். அவரது விவாகரத்து, மறுமணத்துக்கான திட்டம், மேடைப் பாடகியான அவரது வாழ்க்கை முறை எல்லாம் சேர்த்து குடும்பத்துக்கும் மதத்துக்கும் தீங்கிழைக்கின்றன என்பதற்கான தண்டனை இது. ஸ்வாட் பள்ளத்தாக்கில் உள்ள கிரீன் ஸ்கொயர் பகுதியில் மக்கள் மத்தியில் வைத்துதான் இந்தக் கொலைகளைத் தாலிபான்கள் செய்கின்றனர். அதனால், அந்த இடம் ரத்த சதுக்கம் (blood square) என்று அழைக்கப்படுகிறது.

2012 மே மாதத்தில், கொஹிஸ்தான் மாவட்டத்தில், திருமணம் ஒன்றில் இரண்டு ஆண்கள் மத்தியில் கைதட்டி பாடிக்கொண்டு இருந்த நான்கு பெண்களை அந்தப் பகுதியின் உள்ளூர் பழங்குடி பெரியவர்கள் கொல்ல உத்தரவு பிறப்பித்து, கொன்றும் விட்டனர். நீதிமன்றத்தில் அப்படி ஒரு சம்பவம் நடைபெறவே இல்லை என்று வழக்கு விசாரணையை முடித்தும் விட்டனர். 2012 ஜூலை மாதம் பெண்கள் உரிமை ஆர்வலர் பரிதா அஃப்ரிதி, பெண்கள் மனித உரிமை மேம்பாட்டில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட காரணத்தால் பெஷாவாரில் சுட்டுக் கொல்லப் பட்டார்.

பெரும்பாலும் சொந்த குடும்ப நபர்களால்​தான் இத்தகைய கௌரவக் கொலைகளும் சித்ரவதையும் பெண்கள் மீது ஏவப்படுவதால், அதே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கொலையாளியை மன்னித்துவிடுவது நடக்கிறது. தகப்பன், சகோதரன், கணவன், மகன், மாமன் என்று சகல வடிவிலான ஆண் உறவுகளும் நொடிப்பொழுதில் கொலைவெறித் தாக்குதலை தன் குடும்பத்துப் பெண்கள் மீது ஏவுவதற்கான உரிமையை அளித்திருக்கிறார்கள் இந்த தீவிரவாதிகள்.

இசை, கலை இனிமையானதுதான். ஆனால், எந்த இடத்தில் என்பது அதைவிட முக்கியமானது!

- மா.அ.மோகன் பிரபாகரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு