Published:Updated:

ராத்திரி ரவுண்ட் அப்!

ராத்திரி ரவுண்ட் அப்!

பிரீமியம் ஸ்டோரி
ராத்திரி ரவுண்ட் அப்!

நான் ஆந்தை... உங்​களால் 'ஆந்தையார்’ என அன்போடு அழைக்கப்படும் ஆன்ட்ராய்டு மனிதன். ராத்திரி உலகின் ரகசியங்கள் சொல்லும் நடுநிசி நாயகன். இதோ சென்னையின் ஓ.எம்.ஆரில் சிறகடித்து வலம் வருகிறேன். ஓ.எம்.ஆர் என்று அழைக்கப்படும் பழைய மகாபலிபுரம் சாலையை 'அறிவிக்கப்படாத சொர்க்கபுரி... உற்சாகபானப் பிரியர்​களின் உல்லாசபுரி’ என்றெல்லாம் வர்ணிக்கிறார்களே... அது நிஜமா? பின்னிரவுப் பொழுதில் ஜில்லென அடிக்கும் மழைச்சாரலில் சிறகு நனைய அலைந்த அனுபவம் இது.

 அடையார் மத்திய கைலாஷைத் தாண்டிப் பறந்தபோது காற்றில் கலந்து வந்தது முட்டை ஆம்லெட் வாசனை. எனக்கு அது பெரும் இஷ்டம். சிறகை மடக்கி நான் போய் அந்த தள்ளுவண்டிக்காரர் கடையின் முன் நின்றேன். 45 வயதுக்காரர்தான் கடையின் ஓனர். அவரைச் சுற்றி தூக்கம் தொலைத்த நவநாகரிக சாஃப்ட்வேர் யுவ யுவதிகள் கொஞ்சம்கூட கசங்காத ஒயிட்காலர் உடுப்புடன் நின்று கொண்டிருந்தனர். நேரம் நடுநிசியைத் தொட்டுக்கொண்டிருந்தது. 'இந்த மிட்நைட்கூட இவர்கள் புண்ணியத்தில் பட்டப்பகல் ஆகிவிட்டதே!’ என ஆச்சர்யப்பட்டுப் போனேன்.

ஓனருக்கும் என்னைப்போல மூக்கு வியர்த்திருக்க வேண்டும். ''ஹலோ ஆந்தை! என்ன பல வருஷமாக ஆளைக் காணோம்?'' என்றார். அதுவரை பிரட் ஆம்லெட்டை 'லபக்’குவதிலும் கடலை வறுப்பதிலும் கவனமாய் இருந்தவர்கள் சடாரென என்னைத் திரும்பிப் பார்த்தனர். என் தோற்றமும் கெட்-அப்பும் அவர்கள் கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்கும் ஷெர்லாக் ஹோம்ஸை ஞாபகப்படுத்தி இருக்கும் என்பதால், வேகமாக பிரட் ஆம்லெட்டை கபளீகரம் செய்துவிட்டு அங்கிருந்து ஜிவ்வென டேக்-ஆஃப் ஆனேன்.

ராத்திரி ரவுண்ட் அப்!

தூங்கா நகரம் என மதுரையைச் சொல்வார்கள். இனி ஓ.எம்.ஆர் ரோட்டையும் தாராளமாகச் சொல்லலாம். 'இரவா... அது ஈரோடு பக்கம் தூத்துக்குடி பக்கம் போயிடுச்சு?’ என்று வடிவேலு பாணியில் சொல்லும் அளவுக்கு சோடியம், நியான் வெளிச்சத்தில் அந்த சாலையே தங்கச் சாலையாக பகல்போல தகதகத்தது.  ஆந்தை கண்ணையே கூசச்செய்யும் அளவுக்கு ஹெட்லைட் வெளிச்சத்தை பாய்ச்சியபடி ரோட்டில் சீறிப் பாய்ந்துகொண்டிருந்தன வாகனங்கள். அவை பெரும்பாலும் 'கேப்’ என அழைக்கப்படும் சாஃப்ட்வேர் ஆசாமிகளை வீட்டில் போய்விட வாடகைக்கு அமர்த்தப்படும் வண்டிகளாகத்தான் இருந்தன.

அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஜோடிகள் மழையை சாக்காக வைத்து இறுக்கி அணைத்து சூடேற்றியபடி, மினியேச்சர் டிராக்டர் டயர் பொருத்தப்பட்ட பைக்கில் சர்சர்ரென என்னைக் கடந்து சென்றன. அந்தரத்தில் மாடி ரயில் அசுர வேகத்தில் சென்றுகொண்டிருந்தது. தீப்பெட்டியை அடுக்கி வைத்தாற்போல இருபுறமும் மாடி பில்டிங்கள். காது கொடுத்துக் கேட்டும் பாட்டு புரியவில்லை. 'டிஸ்க் டிஸ்க்’ என உள்ளிருந்து ஒலிக்கும் சத்தம் மட்டும், காருக்குள் இருக்கும் யூத்களின் குடும்ப செல்வச் செழிப்பைச் சொல்லாமல் சொல்லின. இங்குதான் செம தீனி காத்திருக்கிறது என பட்சிக்கே பட்சி சொன்னது.

இரைச்சலும் கூச்சலுமாக இரவின் நிசப்தத்தைக் கிழித்துப் பறந்த ஒரு காரை பின்தொடர்ந்தேன். புவி ஈர்ப்பு விசைக்கு சவால் விட்டபடி மரணக்கிணறு விளையாட்டைக் கண்ணில் காட்டியபடி ஏகப்பட்ட 'டர்ன்’களைப் போட்டு சிட்டாய் பறந்துகொண்டிருக்கும் அந்த காரை நெருங்கிவிட்டேன். நிச்சயம் 'உல்லாசங்கா... உற்சாகங்கா’ என யாரோ போதைப் பார்ட்டிகள்தான் உள்ளே இருக்க முடியும். பிஸியான நாவலூர் டோல்கேட்டுக்கு மிக அருகில் ஒரு இடத்தில் கார் ஸ்லோவானதுதான் கவனித்தேன். அது... ஸ்கோடா ஆக்டேவியா கார்! அந்த சொகுசுக் கார் இத்தனை வேகமாக ஓடும் என்பதை இன்றுதான் நானே நேரில் பார்த்தேன். எம்மாடியோவ்...! காருக்குள் இருந்து இருபதுகளை சில மாதங்களுக்கு முன்புதான் கடந்திருப்பார்கள் என நினைக்கவைக்கும் ஐந்து இளைஞர்கள், மூன்று இளைஞிகள் நெருக்கமாய் தள்ளாடி அணைத்தபடி காரில் இருந்து இறங்கினார்கள். (என்ன கணக்குடா இது?) எல்லோர் கண்களிலும் போதையும் காமமும் வழிந்தது. ஆங்கில 'ஓ’ வடிவத்துக்கு விரிந்தது என் கருவிழிகள்.

அவர்கள் ரோட்டை ஒட்டி இருந்த செம்மண் சேறு அப்பிய குறுகலான சாலையில் நடந்து சென்றார்கள். நானும் அவர்கள் பின்னாலே பதுங்கி நடந்தேன். கல்லை எடுத்து உண்டி வில் அடித்தாலும் சொரணை இருக்குமா எனத் தெரியவில்லை. வார்த்தைகள் குழற ஏதேதோ பிதற்றியபடி முன்னேறிப் போய்க்கொண்டிருந்தார்கள். பழம் நழுவி பால் பாயாசத்தில் விழுந்ததுபோல் ஆனது எனக்கு. அப்புறம் என்ன... ஃபாலோ பண்ணிக்கொண்டே நானும் நடந்தேன். பிறகு என்ன நினைத்தார்களோ மீண்டும் மெயின் ரோட்டுக்கே திரும்பினார்கள்.

காருக்குள் யுவதிகள் மட்டும் இருக்க...இளைஞர்கள் மட்டும் பிளாட்பாரத்தில் நடந்தனர். அப்போதுதான் என் ஆந்தை புத்திக்கு உறைத்தது. ஆஹா... இது முன்பு டூரிங் டாக்கீஸ் இருந்த இடமாச்சே! பழைய ஞாபகங்கள் என் நினைவுக்கு வந்தன. 'இந்த நேரத்திலா சினிமா காட்டுகிறார்கள்?’ என்று அவர்களை ஃபாலோ செய்து நானும் அந்த இடத்துக்குள் நுழைந்தால் உள்ளே பிரமாண்ட.... பார்! (அடப்பாவிகளா! ஏற்கெனவே ஏத்துனது பத்தாதுனு இங்கே வந்திருக்கீங்களா?)

மெள்ள அந்த இடத்தை நோட்ட​மிட்டேன். அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிலர் சரக்கடித்துக்கொண்டிருந்​தார்கள். பெரும்பாலும் ஐ.டி இளைஞர்கள். சைட்-டிஷ் சப்ளையர்கள், சர்வீஸ் பாய்ஸ்  எல்லோரும் டிப்-டாப்பாக ஆடை அணிந்து இருந்தார்கள். அந்த போதை யூத்கள் இருட்டு அப்பிய ஒரு மூலையில் போய் செட்டில் ஆனார்கள். நாற்காலிகளில் சரிந்தபடி புகையை இழுக்க ஆரம்பித்தார்கள். (இருக்குற போதை போதாதுனு இது வேறயா!)

சுமார் ஒரு மணிநேரம் கடந்திருக்கும்!

அவர்களோடு வந்த யுவதிகளோ, காரிலேயே காத்திருந்தார்கள். புகைப் பார்ட்டிகள் தள்ளாடியபடியே திரும்பி வந்ததும் காரின் கதவுகள் திறந்தது. 'டோன்ட் வொரி... டோன்ட் வொரி.. பி ஹோப்பி...’ பாடல் சப்தம் காதைக் கிழித்தது. காருக்குள் இருந்து வெளியே யுவதி ஒருவர் தலையை மட்டும் வெளியே நீட்ட... போதைப் பார்ட்டியில் ஒருவர் அவரை முத்த மழையில் நனைய வைத்தார். ஆந்தைக்கே கண்ணு வேர்க்கும் அளவுக்கு காட்சிகள் அரங்கேற அங்கிருந்து விட்டேன் ஜூ... ட்ட்ட்ட்ட்ட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு