Published:Updated:

குற்றாலத்தைக் காப்பாற்றினால் எதிர்காலத்திலும் குளிக்கலாம்!

குற்றாலத்தைக் காப்பாற்றினால் எதிர்காலத்திலும் குளிக்கலாம்!

இயற்கையைப் பறிகொடுத்துவிட்டு, பின்னர் வருத்தப்படுவது நம் தலையெழுத்து. இயற்கை எழில் கொஞ்சும் ஊட்டி, இப்போது சுற்றுலாத் தலமாக மாறி தன் இயல்பைத் தானே இழந்து, நிலச்சரிவுப் பகுதியாக மாறிக்கொண்டு இருக்கிறது. கொடைக்கானல் மலையில் பெரிய பெரிய கட்டடங்களாகக் கட்டி அதன் உன்னதத்தைக் குலைத்துவிட்டோம். அடுத்து, இதோ குற்றாலம்!

அரசாங்கமும் நீதிமன்றமும் சேர்ந்து குற்றாலத்தைக் காப்பாற்ற கடைசி நேரத்திலாவது வந்துவிட்டன. குற்றாலத்தைச் செம்மைப்படுத்த 33 பரிந்துரைகளை நீதிமன்றம் தெரிவித்தப் பின்னர் விழித்துக்கொண்ட தமிழக அரசு, அருவிகளின் எழிலைப் பாதுகாக்க தன் பங்குக்கு ஆணையம் அமைத்து இருக்கிறது. இந்த அக்கறையை தொடர்ந்து காட்டினால்தான், குற்றாலம் எதிர்காலத்திலும் நமக்குக் கிடைக்கும்.

குற்றாலத்தைக் காப்பாற்றினால் எதிர்காலத்திலும் குளிக்கலாம்!

மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகி ஆர்ப்பரித்து அருவியாகப் பாய்ந்துவரும் குற்றாலம், இயற்கையின் அருங்கொடை. ஒரே மலைப்பகுதியில் இருந்து உற்பத்தியாகி மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி,  செண்பகாதேவி அருவி, தேனருவி, பழைய குற்றால அருவி என பல அருவிகளாகப் பிரிந்து விழுவது குற்றாலத்தின் தனிச் சிறப்பு. இந்த அருவிகளில் குளித்து மகிழ ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்லும் குற்றாலத்தில், அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் பரிதாபமாக இருந்தது. குளிக்க வரும் பெண்கள் உடை மாற்றுவதற்குகூட இடம் கிடையாது. பொது இடங்களில் ஓப்பனாக பாட்டில்களைத் திறந்து குடித்துவிட்டு அதே இடத்தில் உடைத்துச் செல்லும் குடிமகன்களின் தொல்லை மறுபக்கம்.

இந்தச் சூழலில், மதுரையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்கிற வழக்கறிஞர் இதனை சென்னை உயர்

குற்றாலத்தைக் காப்பாற்றினால் எதிர்காலத்திலும் குளிக்கலாம்!

நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்காகத் தொடர்ந்தார். நீதிமன்றம் தலையிட்ட பின்னரே குற்றாலத்துக்கு விடிவு பிறந்திருக்கிறது. 'அருவிகளில் சோப்பு, ஷாம்பூ பயன்படுத்தக் கூடாது. எண்ணெய் குளியல் கூடாது. உடை மாற்றும் அறைகள் தேவை. கழிவுகளை அருவியில் இருந்து செல்லும் நீரில் கலக்கக் கூடாது. மதுபானக் கடைகளை அகற்ற வேண்டும். மது குடித்துவிட்டு குளிக்க அனுமதிக்கக் கூடாது’ என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை நீதிபதிகள் பிறப்பித்தப் பின்னரே, தமிழக அரசும் தனது பங்குக்கு அருவிகளைப் பாதுகாக்கக் களம் இறங்கி உள்ளது.

குற்றால அருவிகளின் மகத்துவம் குறித்து, மேற்குத் தொடர்ச்சி மலையில் மூலிகை ஆராய்ச்சியில் ஈடுபட்டுவரும் சித்த மருத்துவரான மைக்கேல் ஜெயராஜிடம் கேட்டோம். ''குற்றாலத்தைச் சுற்றிலும் இருக்கும் மூலிகைகளைப்போல உலகத்தில் வேறு எந்த இடத்திலும் கிடையாது. அரிய வகை மூலிகைகள் வளர்வதற்கு உகந்த சீதோஷ்ண நிலை இந்த மலைகளில் மட்டுமே இருப்பதுதான் அதற்குக் காரணம். அதனால்தான் இந்த நீரில் குளித்தால் உடலுக்கு உற்சாகம் ஏற்படுகிறது.  

முன்பு வனப்பகுதியில் நிறைய மரங்கள் இருந்தன. காலப்போக்கில் அவை அழிக்கப்பட்டுவிட்டன. மரங்கள் இருந்ததால், மண்திட்டுக்கள் மழை நீரில் அடித்துச் செல்லாமல் பாதுகாக்கப்பட்டன. மரங்களை அழித்ததால், மண் திட்டுக்களும் காணாமல் போய்விட்டன. இதனால், சிறிய மழை பெய்தால்கூட தண்ணீர் ஓடிவிடுவதால், அருவிகளில் அடிக்கடி வெள்ளம் ஏற்படுகிறது. இதைத் தீர்க்க நிறைய மரக்கன்றுகளை வனப்பகுதியில் நட ஏற்பாடு செய்ய வேண்டும். காடுகளைப் பராமரித்தால் மட்டுமே அருவிகளைப் பாதுகாக்க முடியும் என்பதை அரசாங்கம் புரிந்துகொண்டு, அதற்கேற்ற நடவடிக்கையில் உடனடியாக செயல்படுவது அவசியம்'' என்று கூறினார்.

இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டதால், மெயின் அருவிக்கு அருகில் இருந்த டாஸ்மாக் கடை உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டு உள்ளது. சி.சி.டி.வி மூலம் கண்காணிப்பு ஏற்பாடுகள் நடக்கின்றன. மசாஜ் நிலையங்கள் இழுத்து மூடப்பட்டன. கழிப்பறை வசதி, உடை மாற்றும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நம்மிடம் பேசிய சுற்றுச்சூழல் ஆர்வலரான வான்முகில்’ பிரிட்டோ, ''அருவியில் தண்ணீர் கொட்டும் மூன்று மாதங்களுக்குப் பிறகு, இந்தப் பகுதியை அதிகாரிகள் கண்டுகொள்வது இல்லை. அந்த மனோபாவம் முதலில் மாற வேண்டும். சீசன் இல்லாத சமயத்தில் பராமரிப்பு பணிகள் முழுவீச்சில் நடக்க வழிவகை செய்ய வேண்டும். இந்தப் பகுதி மீது அரசு நேரடி கவனம் செலுத்த வேண்டும். மரங்களை யாராவது வெட்டி கடத்தினால், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வனம் இருந்தால்தான் அருவி இருக்கும் என்பதை மக்களுக்குப் புரிய வைக்கும் அளவுக்கு விழிப்பு உணர்வை ஏற்படுத்தினால் மக்களே மரக் கடத்தலைத் தடுப்பார்கள்'' என்றார் அக்கறையுடன்.

அரசின் நடவடிக்கை வெற்று அறிவிப்போடு இல்லாமல் இருந்தால் நல்லது!

- ஆண்டனிராஜ்

படங்கள்: எல்.ராஜேந்திரன்

அடுத்த கட்டுரைக்கு