Published:Updated:

ராத்திரி ரவுண்ட் அப்!

ராத்திரி ரவுண்ட் அப்!

பிரீமியம் ஸ்டோரி

காபியை நான் குடித்துவிட்டு அங்கிருந்து கிளம்பும்வரை, அந்தப் பெண்ணின் பார்வை மட்டும் அடிக்கடி என் பக்கம் திரும்பியபடியே இருந்தது. எப்படியும் சீக்கிரமே அந்தப் பெண்ணிடம் இருந்து கால் வரும் என்ற நம்பிக்கை மட்டும் எனக்குள் இருந்தது.

ஒருநாள் இரவு...

சைதாப்பேட்டை பாலம் அருகே ஒரு வாட்டர் பாக்கெட் வாங்கிக் குடித்தேன். ஏதோ வித்தியாச டேஸ்ட்டில் இருந்தது. கொஞ்ச நேரத்தில் வயிற்றில் 'கடமுட'வென சத்தம். குமட்டிக்கொண்டு வந்தது. ஒரு பக்கெட் அளவுக்கு வாந்தி. அப்படியே ஒரு ஓரமாக உட்கார்ந்துவிட்டேன். ''சென்னையின் பல இடங்களில் சுகாதாரம் இல்லாமல் வாட்டர் பாக்கெட், வாட்டர் கேன் தயாரிக்கப்படுகின்றன'' என்று முகப்பேரில் உள்ள சமூக ஆர்வலர் 'ஆர்.டி.ஐ' பாலாஜி என்னிடம் சொல்லியிருக்கிறார். அப்படி எதுவும் பிரச்னையான தண்ணீரை வாங்கிக் குடித்துவிட்டேனோ என்று யோசித்தேன். 'நடுராத்திரியில்தான் இந்த மாதிரியான போலி வாட்டர் கேன் ஃபேக்டரிகள் இயங்குகின்றன’ என்றும் அவர் சொன்னது ஞாபகம் வந்தது.

ராத்திரி ரவுண்ட் அப்!

பாலாஜிக்கு போன் போட்டேன். புழல் ஏரிக்கரைக்கு வரச் சொன்னார். உடனே புறப்பட்டேன்.

அம்பத்தூரை ஒட்டியுள்ள புறநகர் ஏரியா அது! அங்கே பைக்கில் காத்திருந்தார் பாலாஜி. எனது பைக்கை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு, பாலாஜி பைக்கில் தொற்றிக்கொண்டேன். ஒரு தெருவின் முனையில் வண்டியை நிறுத்தி என்னை இறங்கச் சொன்னார். அங்கே வாட்டர் கேன் கம்பெனி ஒன்றில் தண்ணீரை நிரப்பிக்கொண்டு இருந்தார்கள்.

''இது இலவசமா பட்டா கொடுக்கப்பட்ட இடம். இதை கமர்ஷியலுக்குப் பயன்படுத்தவே கூடாது. இங்கே 400 அடி ஆழத்துல மூன்று போர் போட்டு தண்ணீரை உறிஞ்சுறாங்க. இந்தப் பகுதி மக்கள் பல தடவை புகார் பண்ணிட்டாங்க. அதிகாரிகளும் வந்து பார்த்து சீல் வெச்சாங்க. கொஞ்ச நாள்ல மறுபடியும் பிசினஸை ஆரம்பிச்சிட்டாங்க. உள்ளே என்ன நடக்குதுன்னு பார்த்​துட்டு வரு​வோம். வாங்க...'' என்று சொல்லிக்​கொண்டே நடந்தார் பாலாஜி. நானும் அவரைப் பின்தொடர்ந்தேன்.

நாங்கள் உள்ளே நுழைந்த சமயத்​தில் எதிர்​பட்ட ஒருவரிடம், ''ஒரகடத்துல இருந்து வர்றோம். ஒரு விசேஷத்துக்குத் தண்ணீர் கேன் வேணும்'’ என்று ஆரம்பித்தேன்.

''மினிவேன் நீங்களே புடிச்சுகிட்டு வந்திடுங்க. ஒரு கேன் விலை 23 ரூபா. எவ்வளவு கேன் வே​ணும்​னாலும் எடுத்துக்​கோங்க...'' என்றவரிடம், ''தண்ணீ சுத்தமா இருக்கும்ல்ல...'' என்று கேட்டேன்.

''உள்ளே போய் பா​ருங்க..! எவ்வளவு லேட்டஸ்ட் மிஷின்களை வெச்சு தயாரிக்கிறோம்'' என்று பளீரென பதில் வந்தது. சீல் வைக்கப்பட்ட கம்பெனி மீண்டும் இயங்குவது உறுதியாகத் தெரிந்தது. வந்ததற்கு அடையாளமாக அவரிடம் ஒரு விசிட்டிங் கார்டை வாங்கிக்கொண்டு புறப்பட்டோம்.

வெளியே வந்ததும், திருவள்ளூர் கலெக்டர் வீர ராகவ ராவுக்கு எஸ்.எம்.எஸ்-ல் நான் பார்த்ததை சில வரி​களில் டைப் செய்து, உண்மையா என்று விசாரிக்கச் சொல்லிவிட்டுப் பறந்தேன். அந்த நேரத்திலும் அவர் உடனே எஸ்.எம்.எஸ்-ஸை படித்துவிட்டு, ''என்ன ஆந்தையாரே? சென்னையைத் தாண்டி எங்க திருவள்ளூர் மாவட்டத்துல புகுந்துட்ட போல இருக்கே...'' என்று சிரித்தபடி கேட்டார்.

''யெஸ் சார்... அப்படியே எல்லா ஊருக்கும் கிளம்ப வேண்டியதுதானே!'' என்று சொன்னேன். அவரும் விசாரிப்​பதாகச் சொன்னார். அதே நேரம் கால் வெய்ட்டிங்கில் இன்னொரு கால் வந்தது. பார்த்தால் காபி ஷாப் பார்ட்டி. கலெக்டரிடம் பேசி முடித்ததும் அந்தப் பெண்ணுக்குத் திரும்பக் கூப்பிட்டேன். ''ஹாய்... எப்படி இருக்கே... அமிஞ்சிக்கரை ஸ்கைவாக் பக்கத்துல வெய்ட் பண்றேன் வர்றீங்களா?'' என்று கேட்டார். தோ... வந்துட்டேன் என்றபடி வண்டியை முடுக்கினேன்.

ஸ்கைவாக் பார்க்கிங்கில் வண்டியை நிறுத்திவிட்டு மாலுக்குள் என்ட்ரி ஆனேன். நைட் ஷோ சினிமா ஆரம்பித்திருப்பார்கள். மாலுக்குள் கடைகள் சாத்தப்பட்டு இருந்தன. என் பின்னால் வந்து, ''ஹாய்...'' என்று தோளைத் தட்டினார் அந்தப் பெண். நானும் 'ஹலோ’ சொன்னேன். ''காபி ஷாப்ல அந்த நேரத்துல தனியா உட்கார்ந்து இருந்தீங்களா... உங்களைப் பார்க்கவே பரிதாபமா இருந்துச்சு... (என்னை?) அதான் கம்பெனி கொடுப்போமேன்னு நம்பர் வாங்கினேன்...'' என்று படபடவென பேசினார் அந்த ஏஞ்சல்.

''உங்க பேரு என்ன? என்ன பண்ணிட்டு இருக்கீங்க... அன்னைக்கு உங்கக்கூட இருந்தவரு யாரு?'' கேள்விகளை அடுக்கினேன்.

''நான் ஹாசினி. யாரு காபி ஷாப்ல என்கூட இருந்தாரே அவரா... அவரு என்னோட புது கஸ்டமர். அன்னைக்கு ராத்திரி அவரோட இருந்தேன். அதுல உனக்கும் எதுவும் பிரச்னையா?'' -கடகடவென சிரித்தார்.

''இல்ல... அவரை எங்கேயோ பார்த்த மாதிரி இருந்துச்சு. அதான் கேட்டேன்'' என்றேன்.

''அவரை எங்காவது கவர்ன்மென்ட் ஆபீஸ்ல பார்த்திருப்ப... அங்கேதான் எங்கேயோ வேலை பார்க்கிறதா சொன்னாரு. சின்ன பசங்களை இப்போ நம்பவே முடியறது இல்லை. போற போக்குல எங்காவது நம்பரைக் கொடுத்து​டுறானுங்க. அதனால இப்போ 40-க்கு மேல இருக்கிறவங்க மட்டும்தான் நம்ம கஸ்டமர். அவங்கதான் பொறுப்பா இருக்காங்க. எந்தத் தொல்லையும் கொடுக்கிறது இல்லை... சரி... இதுக்கு மேல இங்கே நின்னுட்டு இருந்தா செக்யூரிட்டி விரட்டுவாரு... வா வெளியில கிளம்பலாம். வண்டியை எடு!'' என்று என்னைப் பேசவே விடாமல் பேசினார் ஹாசினி.

பார்க்கிங்கை நோக்கி நடந்தோம். பார்க்கிங்கில் வண்டியை எடுத்துக்கொண்டு இருந்த இன்னொரு பெண்ணைப் பார்த்ததும், ''ஹாய் சுகுணா...'' என்று அவரை நோக்கி ஓடினார் ஹாசினி. நான் தயங்கியபடி நின்றேன். அந்தப் பெண்ணிடம் ஏதோ சிரித்துப் பேசியபடி இருந்தவர், திடீரென என்னை சைகைசெய்து கூப்பிட்டார். நான் அவர்கள் பக்கத்தில் போனேன். ''இவரு என்னோட ஃபிரண்ட்... இவ என்னோட க்ளாஸ்மெட் சுகுணா!'' என்று பரஸ்பரம் அறிமுகம் செய்துவைத்தார் ஹாசினி.

''உங்க ஹஸ்பெண்ட் வரலையா சுகுணா?'' என்று கேட்டேன். என்னை சைகையால் அடக்கினார் ஹாசினி. அதை கவனித்த சுகுணா, ''விடு ஹாசினி... அவரு யதார்த்தமா கேட்டுட்டாரு. இதுல என்ன தப்பு இருக்கு? எனக்கு டிவோர்ஸ் ஆகிடுச்சுங்க. என்னைக் கல்யாணம் பண்ணிக்கொடுத்தவனைப் பத்தி வீட்டுல எல்லாம் விசாரிச்சிருக்காங்க. ஆனா, அவன் ஒரு ஹோமோ என்பது கல்யாணத்துக்கு அப்புறம்தான் எனக்குத் தெரிஞ்சுது...'' என்று சொல்லி அதிரவைத்தார் சுகுணா.

''சரி, காபி சாப்பிட்டுகிட்டே பேசலாமா?'' என்று ஹாசினி கேட்க... வண்டியில் அங்கிருந்து கிளம்பினோம். சுகுணா வண்டியில் ஹாசினி ஏறிக்கொண்டார். (இதுதான் நேரம்!) அங்கிருந்து கோயம்பேடு செல்லும் வழியில் ஒரு காபி ஷாப்புக்குள் புகுந்தோம். ஹாசினியே ஆர்டர் செய்தார்.

சற்று நேர மௌனத்தை உடைத்தார் சுகுணா. ''எனக்கு ஒருத்தனை கல்யாணம் பண்ணி வெச்சாங்க பாருங்க... அவனுக்கு சம்பளம் மாசம் 60 ஆயிரம். ஐ.டி கம்பெனியில வேலை பார்க்குறான். கல்யாணமாகி மூணு மாசமா என்னை அவன் தொடவே இல்லை. நானும் ஏதேதோ பண்ணிப் பார்த்தேன். அவன்கிட்ட எந்த ரியாக்ஷனும் இல்லை.

எனக்குத் தெரிஞ்ச சைக்காலஜிஸ்ட்கிட்ட விசாரிச்சேன். அவர் சில டெஸ்ட்களை செஞ்சுப் பார்க்கச் சொன்னாரு. செஞ்சுப் பார்த்தேன். மாட்டிகிட்டான். இன்னொரு ஆளை தனியா வீடு புடிச்சு தங்க வெச்சிருந்தான். வெளி உலகத்துக்கு மட்டும்தான் நான் அவனுக்கு மனைவி. மத்தபடி எல்லாமே அவன்கூடத்தான்.

ஒருநாள் வீட்டுல இருந்த கம்ப்யூட்டரை நான் ஆன் பண்ணினேன். மெயில் ஓப்பன் பண்ணியதும், அவனோட மெயில் தானாக ஓப்பன் ஆச்சு. கடைசியா லாக்-அவுட் பண்ணாம க்ளோஸ் பண்ணிருப்பான்போல இருக்கு. அதுல பார்த்தா, இவனோட அழகை வர்ணிச்சு ஒருத்தன் மெயில் அனுப்பிருக்கான். அதுக்கு இவன் அவனோட அழகை வர்ணிச்சு மெயில் அனுப்பிருக்கான். அதுல, குறிப்பிட்ட ஒரு மெயில்தான் எனக்கு தூக்கிவாரிப் போட்டுச்சு...'' என்று சுகுணா சொல்ல... காபி வந்தது.

''அப்படி என்ன மெயில் அது?'' - நான் கேட்டேன்.

''என் வீட்டுக்காரன் இன்னொருத்தனுக்கு அனுப்பினதுல, 'நானும் நீயும் இப்போ வாழுற மாதிரியே கடைசி வரைக்கும் ஒண்ணா இருக்கணும். நான் ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணிகிட்டேன். நீயும் அதே மாதிரி கல்யாணம் பண்ணிக்கோ. உனக்கும் கல்யாணம் ஆன பிறகு, புதுசா வர்ரவளுங்ககிட்ட பேசி நாம எல்லோரும் ஒரே வீட்டுல இருக்கலாம். அதுதான் நமக்கு வசதியா இருக்கும். உன் பொண்டாட்டிக்கு நீ புள்ளையைக் கொடு. என் பொண்டாட்டிக்கும் ஒரு புள்ளையை நீயே கொடு. அந்தப் புள்ளைங்களை நான் பார்த்து ரசிக்கணும்’ என்று எழுதியிருந்தான்.''

''இப்படில்லாம்கூட அபத்தமா இருப்​பாங்களா?'' என்றேன் காபியை உறிஞ்சியபடி.

''ஹோமோவுல இரண்டு கேரக்டர் உண்டாம். ஒண்ணு... 'டாமினேட்டிங் பார்ட்னர்'. அதாவது, இந்த கேரக்டர் உள்ள​வன் உறவு விஷயத்துல ஒரு ஆணாக நடந்துக்குவான். ஆணோடவும் பெண்​ணோடவும் உறவு வெச்சுக்குவானாம். இவன் ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் பிரச்னை இல்லை. ஆனா, இரண்டாவது கேரக்டர்தான் ரொம்பவும் டேஞ்சர். இவங்களை 'சப்மிஸ்ஸிவ் கேரக்டர்'னு சொல்லுவாங்க. லேடி மாதிரி பிகேவ் பண்ணுவான். பொண்ணுங்ககூட நெருங்க மாட்டான். எனக்குத் தாலி கட்டினவன் இரண்டாவது கேரக்டர்.

இவனை ஆதாரத்தோடு பிடிக்கணும்னு புது சிம்கார்டு வாங்கினேன். ஹோமோ பார்ட்டிகளுக்காக சில வெப்சைட் இருக்கு. நானும் ஹோமோபோல ஒரு போஸ்ட் அதுல போட்டேன். எனக்கு ஏராளமான ரிப்ளை வந்துச்சு. அதுல என் புருஷனும் அடக்கம். நான் அவனுக்கு ரிப்ளை பண்ணினேன். என் புது செல் நம்பரைக் கொடுத்தேன். அதுக்கு மெசேஜ் பண்ண ஆரம்பிச்சான். அந்த ஆதாரத்தை வெச்சுதான் அவனைப் பிடிச்சேன். ரெண்டு வீட்டுலயும் பேசி, பல பிரச்னைகளுக்குப் பிறகு டிவோர்ஸ் ஆனது...'' என்று சொல்லி முடித்தார் சுகுணா.  

காபிக்கு பில் கொடுத்தது ஹாசினி. வெளியில் வந்தோம். ''நான் சுகுணாவோட கிளம்புறேன். இன்னொரு நாள் மீட் பண்ணுவோம்...'' என்று ஹாசினி கிளம்ப... அடுத்த செய்தி இரை தேட ஆரம்பித்தேன்.

ராத்திரி ரவுண்ட் அப்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு