Published:Updated:

''எங்கள் மதத்தை விமர்சித்துப் பேசினார்''

சுரேஷ்குமார் கொலை... வெளிவரும் காரணம்!

பிரீமியம் ஸ்டோரி

தமிழகத்தில் நடந்துவரும் இந்து பிரமுகர்கள் படுகொலைகளில் ஒரு வழக்கில் முக்கியக் குற்றவாளிகளை மடக்கி​யுள்ளது போலீஸ். கைது செய்யப்​பட்டவர்கள் அளித்ததாகச் சொல்லப்படும் வாக்குமூலங்கள், படு அதிர்ச்சி.

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இந்து முன்னணி செயலாளர் சுரேஷ்குமார். அம்பத்தூர் எஸ்டேட்டில் வெட்டிக் கொல்லப்பட்டார். கடந்த மாதம் 18-ம் தேதி நடைபெற்றது இந்தச் சம்பவம். இதில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கைதுசெய்ய 10 தனிப்படைகள் அமைத்து, ஒரு மாதமாக போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். கொலை சம்பவத்தை நேரில் பார்த்த பக்கத்துக் கடைக்காரர் ரவி சொன்ன அடையாளங்கள், மதுரவாயல் பகுதியில் அநாதையாக நின்ற மோட்டார் சைக்கிள் மட்டும்தான் இந்த வழக்கில் கிடைத்த துப்புக்கள். குற்றவாளிகள் யாரும் சிக்கவில்லை. மதுரை, திண்டுக்கல், பழநி, கோவை, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் போலீஸின் தேடுதல் வேட்டை தொடர்ந்தது.  

''எங்கள் மதத்தை விமர்சித்துப் பேசினார்''

இந்த நிலையில் வெடிகுண்டு வழக்கு ஒன்றில் தேடப்பட்டு வந்த சிலரை பழநியில் போலீஸார் கைதுசெய்தனர். அவர்களிடம் நடந்த தீவிர விசாரணையில் சுரேஷ்குமார் கொலை வழக்குப் பற்றிய தகவல்களும் வந்து விழுந்தன. அதை வைத்து கடலூர் பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த குத்புதீன், பாடியைச் சேர்ந்த நசீர் ஆகியோரை கடந்த 18-ம் தேதி போலீஸார் சுற்றி வளைத்தனர். மேலும், மூன்று பேரை தீவிரமாகத் தேடிவந்தனர். கடந்த 20-ம் தேதி இரவு கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலைச் சேர்ந்த காஜா மொய்தீன், அம்பத்தூரைச் சேர்ந்த 17 வயது மாணவன் ஆகியோர் பிடிபட்டனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் விவரங்களாக போலீஸ் தரப்பில் சொல்லப்படுபவை பதற்றம் ஏற்படுத்துபவையாக உள்ளன.

கைதான நசீர் அளித்ததாகச் சொல்லப்படும் வாக்குமூலத்தில், ''நான் பாடி பகுதியில் செல்போன் கடை நடத்துகிறேன். திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இந்து முன்னணிச் செயலாளர் சுரேஷ்குமாருக்கு இந்தப் பகுதியில் வீடும் அலுவலகமும் இருந்தது. அவர் இந்தப் பகுதியில்தான் அதிக முனைப்புடன் செயல்பட்டு வந்தார். கடந்த  ஆண்டு டிசம்பர் மாதம், அவர்கள் அமைப்பு சார்பில் போடப்பட்ட கூட்டத்தில், பொது மேடையில் வைத்து எங்கள் மார்க்கத்தைப் பற்றி அவதூறாகப் பேசினார். அன்றைக்கே சுரேஷ்குமாரை தீர்த்துக்கட்ட முடிவுசெய்தேன். எங்களின் மதத்தை இழிவுபடுத்துபவர்களைத் தீர்த்துக்கட்டுவதற்காக நாங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு ஓர் அமைப்பை ஏற்படுத்தி செயல்பட்டு வந்தோம். போலீஸ் கெடுபிடிகளால் அந்த அமைப்பை நடத்த முடியவில்லை. எங்களுக்குள் இருந்த தொடர்பை விடாமல் வைத்திருந்தோம். இதையடுத்து என்னுடைய கூட்டாளிகளுக்கு சுரேஷ்குமாரின் நடவடிக்கைகள் பற்றி தகவல் சொன்னேன்.

சுரேஷ்குமார் மத துவேஷத்தைத் தூண்டும் வகையில் பேசியதால், அவரை அப்போது போலீஸ் கைதுசெய்து ரிமாண்ட் செய்தது. சிறையில் இருந்து வெளியில் வந்த சுரேஷ்குமார், மீண்டும் எங்களை இழிவுபடுத்தும் வகையில் பேசுவதையும் செயல்படுவதையும் குறைத்துக்கொள்ளவில்லை. இந்த நிலையில், அவர் நாங்கள் வசிக்கும் மண்ணூர்ப்பேட்டை பகுதி நிலங்களை நாங்கள் ஆக்கிரமித்துள்ளதாகவும், நாங்கள் அந்தப் பகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் சொல்லிவந்தார். இதற்காக அவர் வழக்கறிஞர் மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டங்கள் என பரபரப்பாக செயல்பட்டு வந்தார். இது எங்களுக்கு மேலும் ஆத்திரமூட்டியது.

இதையடுத்து நாங்கள் பாடி மேம்பாலம் அருகில் ரகசியமாகக் கூடி திட்டம் தீட்டினோம். எங்களின் கூட்டாளிகள் சிலர், 'அவரை உயிரோடு விடக்கூடாது. அது நமக்கு ஆபத்து. ஒரேயடியாக காலி செய்துவிடுவோம்’ என்றார்கள். திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பை மூன்று பேர் ஏற்றோம். அவரை சரியாக அடையாளம் காட்ட ஒருவர் முன்வந்தார். இதற்காக சதீஷ்குமார் என்ற பெயரில் ஆன்லைன் புக்கிங் மூலம் மோட்டார் சைக்கிள் ஒன்றை வாங்கி பயன்படுத்தினோம். கடந்த மாதம் 10-ம் தேதி ஒருமுறை முயற்சி செய்தோம். அப்போது அவர் தனியாக எங்களிடம் மாட்டவில்லை. இதையடுத்து 16-ம் தேதி ஒருமுறை முயற்சி செய்தோம். அப்போதும் அவர் எங்களிடம் சிக்கவில்லை. இதையடுத்து 18-ம் தேதி அவருடைய அலுவலகத்தில் அவர் இருப்பதாகவும் அங்கிருந்து அவர் கிளம்ப இரவு வெகுநேரம் ஆகும் என்றும் எங்களுக்குத் தெரியவந்தது.

நாங்கள் அந்தப் பகுதியிலேயே சுற்றி வந்தோம். பக்கத்துக் கடையில் பேசிக்கொண்டிருந்த சுரேஷ்குமார் தன்னுடைய அலுவலகத்துக்கு வந்தார். அவர் வெளியில் வரும் வரை காத்திருந்தோம். அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த சுரேஷ்குமார் ஷட்டரை பூட்டிக்கொண்டிருந்தபோது, நாங்கள் வேகமாகப் போய் அவரை வெட்டிச் சாய்த்தோம். அங்கிருந்து கிளம்பி, எங்கள் பைக்கை மதுரவாயலில் நிறுத்திவிட்டுச் சென்று விட்டோம்'' என்று சொல்லியிருப்பதாக போலீஸார் சொல்கிறார்கள். இதே வாக்குமூலம்தான் காஜா மொய்தீனும் கொடுத்துள்ளார். இவர்கள் நான்கு பேரும் பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி வேல்ராஜ் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் ஒருவர் 17 வயது என்பதால், அவர் சிறார் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

- ஜோ.ஸ்டாலின்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு