Published:Updated:

ராத்திரி ரவுண்ட் அப்!

ராத்திரி ரவுண்ட் அப்!

ராத்திரி ரவுண்ட் அப்!

ராத்திரி ரவுண்ட் அப்!

Published:Updated:
ராத்திரி ரவுண்ட் அப்!

தி.நகர் ரங்கநாதன் தெருவைப்போல பரபரப்புக்குப் பஞ்சம் இல்லாத ஏரியா திருச்சி பெரிய கடைவீதி.

ராத்திரி ரவுண்ட் அப்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நான் சென்ற ராத்திரி நேரத்தில் கடைகள் அத்தனையும் சாத்தப்பட்டு இருக்க... ராவ்ஜி பிரியாணி கடையில் மட்டும் கூட்டம் குறையாமல் இருந்தது. பிரியாணியை வேறு இடத்தில் சமைத்து, இரவு ஒன்பது மணிக்கு மேல்தான் தள்ளுவண்டியில் வைத்து கடைவீதிக்குக் கொண்டுவருகிறார்கள். பிரபல நகைக்கடை ஒன்றின் வாசலில் இந்த வண்டி நிற்கிறது. ரோட்டிலேயே அடுப்பு வைத்து தோசை, பரோட்டாவும் தயாராகிறது. 40 ஆண்டுகளுக்கு மேல் பாரம்பர்யம் வாய்ந்ததாம் இந்தக் கடை. திருச்சியின் அரசியல் பிரபலங்கள் பலரையும் கையில் பிரியாணி தட்டுடன் ரோட்டில் பார்க்க முடிந்தது. நானும் ஆஃப் பிளேட் பிரியாணி வாங்கி சாப்பிட்டேன். ஆஹா... என்ன சுவை... என்ன சுவை!

அங்கிருந்து ஒரு ஆட்டோ பிடித்து தில்லை நகருக்கு போனேன். '......... போதை மீட்பு மையம்’ என்ற ஒரு போர்டு கண்ணில்பட, ஆட்டோவை நிறுத்தச்சொல்லி இறங்கிக்கொண்டேன். அந்த மையத்துக்குள் நுழைந்தபோது, உள்ளே ஏராளமான பெட்கள். அத்தனையும் நிரம்பியிருந்தது. இரண்டு பெண்கள் உண்டியலை கவிழ்த்து சில்லறைக் காசுகளை எண்ணிக்கொண்டு இருந்தனர். டாக்டர் ஒருவர் எதிர்ப்பட்டார்.  என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். ''ஒரு பாட்டில் போதை எப்படியெல்லாம் சீரழிக்குது பாருங்க. எல்லாம் ஏழைப்பட்டவங்க. இங்கே வர்ற ஆட்களோட எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகுதே தவிர, குறையவே இல்லை..'' என்று டாக்டர் வருத்தப்பட்டார்.

அங்கே, ஒரு சிறுவன் பெட்டில் அமர்ந்திருந்தான். அவனைச் சுட்டிக்காட்டி, ''இவன் பேரு ரமேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஒன்பதாவது படிக்கிறான். கிராமத்துல பசங்களோட சேர்ந்து எப்படியோ போதைக்கு அடிமையாகிட்டான். போதைன்னா டாஸ்மாக் கடைக்குப் போறது இல்லை. இது வேறு மாதிரியான போதை. அது என்னன்னு அந்தப் பையனையே சொல்லச் சொல்றேன் வாங்க...'' என்று அந்த சிறுவனிடம் நம்மை அழைத்துச் சென்றார்.

அந்த சிறுனிடம் பேச்சுக்கொடுத்தேன். ''ஒரு ரூபாய்க்கு தண்ணீர் பாக்கெட்டை வாங்குவேன். ஒடஞ்சுப்போன சாமான்களை ஒட்டுவாங்கல்ல ஒரு பேஸ்ட்... அது ஒண்ணு வாங்குவேன். தண்ணியைக் குடிச்சிட்டு, காலி பாக்கெட்ல ரெண்டு சொட்டு அந்த பேஸ்டை விடுவேன். அந்த பாக்கெட்டை அப்படியே வாய்க்குள்ள வெச்சு இழுப்பேன். அவ்வளவு சந்தோஷமா இருக்கும். வானத்துல பறந்துபோற மாதிரியே இருக்கும்...'' என்றபோது அந்த சிறுவனின் நாக்கு தடுமாற ஆரம்பித்தது.

பக்கத்து பெட்டில் படுத்திருந்தவரின் உறவினர் ஒருவர் நம்மிடம், ''இதே மாதிரிதான் தஞ்சாவூர்ல ரெண்டு பசங்களே செத்துட்டானுங்க...'' என்று பேச ஆரம்பித்தார். ''தஞ்சாவூர்ல பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல இந்த மாதிரி தண்ணி பாக்கெட்ல ஒட்டுற பேஸ்ட் விட்டு இழுக்குற பசங்க நிறைய இருக்காங்க. ரெண்டு மாசத்துக்கு முன்னாடி அதுல இறந்துபோன ஒரு பையனை எனக்கு நல்லாவே தெரியும். அவனுக்கு ட்ரீட்மென்ட் கொடுத்த டாக்டர், 'மூளைக்குப் போற நரம்பு வெடிச்சு இறந்துட்டான்’னு சொன்னார். இது, சரக்கு அடிக்கிறதைவிட ஆபத்துன்னு சொல்றாங்க. ஆனா, ஸ்கூல் பசங்க இந்த போதையில சிக்கித் தவிக்கிறாங்க...'' என்று வேதனையோடு சொன்னார்.

காலம் கெட்டுப்போச்சு... பெத்தவங்கதான் உஷாரா இருந்து புள்ளைங்களை பார்த்துக்கணும் என்று நான் சொல்லும்போதே என் செல்போன் அலறியது. சென்னை டிராஃபிக் இணை கமிஷனர் தினகரன் லைனில் வந்தார். ''ஆந்தையாரே... பைக் ரேஸ் பற்றி எழுதியிருக்கீங்க போல இருக்கு. அந்த மாதிரி ரேஸ்ல ஓட்டுறவனுக்கும் ஆபத்து, ரோட்டுல போறவங்களுக்கும் ஆபத்து. சமீபத்தில்தான் இதுல ஈடுபட்ட நான்கு பேரை ஜாமினில் வெளிவர முடியாத செக்ஷனில் கைதுசெய்தோம். இப்போ உடனடியா நீங்க சொல்லியிருக்கும் விஷயத்தைக் கவனிக்கிறோம். அப்புறம் அதுல பைக் ரேஸுக்கு காட்ஃபாதர்னு ஒருவரைச் சொல்லியிருந்தீரே... அது யாரு? சொன்னீங்கன்னா எங்க கேஸுக்கு உதவியாக இருக்கும்'' என்று கேட்டார். நானும் பைக் ரேஸ் காட்ஃபாதரைப் பற்றியும் அவரது விவரங்களையும் அவரிடம் சொன்னேன். ''நடவடிக்கை எடுத்துட்டு உங்களைக் கூப்பிடுறேன்... சரியா!'' என்று சொல்லிவிட்டு லைனைத் துண்டித்தார்.

ராத்திரி ரவுண்ட் அப்!

தில்லை நகரிலிருந்து நேராக நான் போய் நின்ற இடம் அரசு மருத்துவமனை. அங்கே இரவு பணியில் இருந்த போலீஸ்காரர் ஒருவரிடம் பேச்சுக்கொடுத்தேன். ''சிட்டிக்குள்ள மட்டும் 11 கொலைகள்ல குற்றவாளிகள் யாருன்னே கண்டுபிடிக்க முடியாமலேயே இருக்கின்றன. ஜி.ஹெச் ஏரியாவுல ரிட்டயர்டு டீச்சர் ஒருத்தர் கொலை செய்யப்பட்டார். அவரோட செல்போன் மிஸ்ஸிங். கொலையாளிகளோட கைரேகைகள் இருந்தும், இன்னும் விசாரணை நடக்காமல் இருக்கு. ஆத்துக்குள்ளே ரவுடி ஒருத்தன் வெட்டுக்களோட செத்துக்கிடந்தான். அவன் யாருன்னே தெரியலை. ராஜா காலனியில வாட்ச்மேனை கொன்னுட்டு வீட்டு ஓனர்கிட்ட கொள்ளையடிச்சுட்டுப் போய்ட்டாங்க. இப்படி சொல்லிட்டே போகலாம். நாங்க சாதாரண போலீஸ். உயர் அதிகாரிங்க துப்பறியுறதுல ஆர்வம் காட்டமாட்டேங்குறாங்களே... என்ன சார் பண்றது?'' என்று புலம்பினார்.

டி.வி.எஸ் டோல்கேட்டில் நாம் பேசிய போலீஸ்காரர் ஒருவர், ''மாத்தூர் லிமிட்டுல பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு அருகே ஒரு கார், கேட்க ஆள் இல்லாம பல மாசமா நிற்குது. அது யாரோடதுன்னு எந்த விவரமும் தெரியலை. ஆக்சிடென்ட்ல டேமேஜ் ஆன கார்களோட விவரங்களை சேகரிச்சு, அதை வெச்சு திருட்டு காரை ரெடி பண்ற ஒரு கும்பல் இங்கே இருக்கு. அந்தக் கும்பலுக்கு எங்க ஆளுங்க சிலரே உதவியா இருக்காங்க. இதைப்பற்றி உளவுத் துறை ரிப்போர்ட் அனுப்பியும் எந்த ஆக்ஷனும் இல்லை'' என்று வருத்தப்பட்டார்.

திருச்சியின் மையப் பகுதியில் இருக்கும் ஒரு லாட்ஜில் சீட்டாட்டம் அமோகமாக நடக்கிறது. சில வாரங்களுக்கு முன்பு அங்கே ரெய்டு போன போலீஸ் அதிகாரி ஒருவர், மூன்று லட்ச ரூபாய் பணத்தைப் பறிமுதல் செய்திருக்கிறார். பிறகுதான் அது காவல் துறையில் உள்ள உயர் அதிகாரி ஒருவரின் ஆசியோடு நடக்கும் சீட்டாட்டம் என்பது தெரிந்திருக்கிறது. அந்த இரண்டு அதிகாரிகளுக்கும் இப்போது லடாய். திருச்சியில் போலீஸ் கமிஷனர் என்று ஒருவர் இருக்கிறாரே... அவர் என்னதான் செய்கிறார்?

ராத்திரி ரவுண்ட் அப்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism